நகராட்சியில் எம்.எல்.ஏ.வுக்கு அறை!
பல்லாவரத்தில் அ.தி.மு.க. சி.ஆர்.சரஸ்வதியைத் தோற்கடித்து எம்.எல்.ஏ. ஆனவர் தி.மு.க. கருணாநிதி. இவருக்கு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அறை ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார் ஆணையர் சிவக்குமார். இதுதான் அங்கே பெரிய பிரச்சினையாக உருவாகியுள்ளது.
""அங்கே 26 அறைகள்தான் உள்ளன. 80-க்கும் அதிகமான அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கே அறைகள் போதுமானதாக இல்லை. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்தார்கள். இந்த லட்சணத்தில் ஆர்.ஐ.யை வெளியேற்றிவிட்டு அந்த அறையை எம்.எல்.ஏ.வுக்கு ஒதுக்கலாமா? இனி அவரைப் பார்க்க ஆயிரம் பேர் வருவார்கள். தாங்குமா? எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்கியதை ஆணையர் உடனே ரத்து செய்ய வேண்டும்'' என்கிறார் பல்லாவரம் நகர பா.ஜ.க. தலைவர் ஆனந்த்.
நகராட்சி ஆணையர் சிவக்குமாரிடம் இதுபற்றி கேட்டதற்கு, ""உயரதிகாரிகள் வாய்மொழியாக சொன்னார்கள். அதனால் தற்காலிகமாகத்தான் ஆர்.ஐ. அறையை எம்.எல்.ஏ.வுக்கு ஒதுக்கினோம். ஆர்.ஐ.க்கு வேறு அறை ஒதுக்கவுள்ளோம்'' என்றார்.
எம்.எல்.ஏ. கருணாநிதியோ, ""மக்களைச் சந்திப்பதற்கு எனக்கு எம்.எல்.ஏ. அலுவலகம் இல்லை. உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறேன். எனக்கு முன்னால் இருந்த எம்.எல்.ஏ.வுக்கு இங்கேதான் அறை ஒதுக்கியிருந்தார்கள். ஆர்.ஐ. அறையை எனக்கு ஒதுக்கினார்கள் என்ற விஷயம் நீங்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிகிறது'' என்கிறார்.
""அலுவலகம் கேட்டு எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நகராட்சி கமிஷனர் எம்.எல்.ஏ.வுக்கு அறை ஒதுக்கியது சட்டத்தை மீறிய செயல்'' என்கிறார் வக்கீல் ஜெனிதா.
-அரவிந்த்
மக்களை எகிறிய எம்.எல்.ஏ.!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mlaprotest.jpg)
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ. அ.தி.மு.க. தென்னரசுவும், ஈரோடு மேற்கு எம்.எல்.ஏ. அ.தி.மு.க. கே.வி.ராமலிங்கமும், 10.3.18 அன்று ஈரோடு சூளை அருள்வேலவன் நகருக்கு வந்தார்கள்.
அங்கு, ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பீட்டிலான பூங்காவுக்கு கால்கோள் விழா நடத்தினார்கள். ஆனால், அந்த விழா மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் மக்கள் ஆதரவோடும் நடக்கவில்லை. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், எம்.எல்.ஏ.க்கள் இருவரையும் சூழ்ந்துகொண்டார்கள்.
""தேர்தலுக்கு முன்னால் நீங்க வாக்கு கேட்டு வந்தபோது எங்களுக்குப் பூங்கா வேண்டுமென்று கேட்டோம். ஆனால், இந்த இடத்தில் வேண்டுமென்று கேட்கவில்லை. யாருக்கும் பயன்படாத இடத்தில் பூங்கா கொண்டு வருகிறீர்கள். அதுக்காக ஒரு விழா கல்வெட்டு கால்கோள்'' மக்கள் எரிச்சலைக் கொட்டினார்கள். ""ஒரு ஏரியாவுல ரெண்டு இடத்தில் பூங்கா அமைக்க முடியாது'' கோபத்தைக் கொட்டினார் எம்.எல்.ஏ. தென்னரசு.
""ஓட்டு கேட்டு வந்தப்ப... நாங்க சொன்ன இடத்தில அமைப்போம்னு பிராமிஸ் செஞ்சீங்களே...'' ஆறாத சினத்தோடு மக்கள் சொன்னார்கள். ""யாரு... நீங்க எல்லாரும் எங்களுக்கு ஓட்டுப் போட்டவங்களா? வீட்டைவிட்டு வெளிய வராம அடைஞ்சு கிடந்தவங்கதானே... நீங்க எல்லாம் ஓட்டுப் போட்டு நாங்க ஜெயிக்கலை. இனியும் போடமாட்டீங்க. விதி இருந்தா ஜெயிப்போம். இல்லாட்டி தோத்துட்டுப் போறம்'' ஆதங்கமும் விரக்தியுமாகப் பேசிய தென்னரசு, கட்சியினர் சிலரை அழைத்துக்கொண்டு கிளம்பினார். ""இப்படியெல்லாம் பேசாதீங்கண்ணே... இனிமேலதான் சகிப்புத்தன்மை வேணும்'' கெஞ்சியபடியே பின்னால் கிளம்பினார் கே.வி.ராமலிங்கம்.
அங்கே நின்ற அ.தி.மு.க.வினரோ, ""இவருக்கென்ன பொதுமக்களை முறைத்துக் கொண்டு போய்விட்டார். பொதுமக்களுக்கு பதில் சொல்ல வேண்டியது இந்தப் பகுதி தொண்டர்கள்தானே... பொதுமக்கள் கேட்கத்தான் செய்வார்கள். பக்குவமாய் பேசாமல் இப்படியா?'' புலம்பினார்கள்.
-ஜீவாதங்கவேல்
அமைச்சர் கிளப்பிய சர்ச்சை!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/minister-rajendrabalaji.jpg)
ஏதாவது ஒரு கருத்தைக் கூறி சர்ச்சை ஆவதும், மீம்ஸ்களில் அடிபடுவதுமாக இருக்கிறார் தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. சேனல் மைக்கைப் பார்த்தால் போதும்; சரியோ, தவறோ, சுவாரஸ்யமான கருத்து ஒன்றை உதிர்த்துவிடுவார். ‘கமல்ஹாசன் போன்ற அரசியல் பிரபலங்களை அவ்வப்போது விமர்சனம் செய்து, செய்தியில் தன் பெயர் அடிபடும்படி பார்த்துக்கொள்கிறார்.
சிவகாசியில் நடைபெற்ற விருதுநகர் மாவட்ட மினி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் 18-ஆம் ஆண்டு விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ""போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் பண்ணியபோது, பொதுமக்களுக்கு பெரிதும் உதவியது மினி பஸ்கள்தான். அதனால், மினி பஸ் உரிமையாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்'' என்று பேசி அந்த விழாவில் கைதட்டைப் பெற்றிருக்கிறார்.
அவரது இந்தப் பேச்சை ரசிக்காத போக்குவரத்து ஊழியர் ஒருவர் நம்மிடம், ""வேலை நிறுத்தத்துக்குக் காரணமே தமிழக அரசின் முறையற்ற செயல்பாடுகள்தான்னு அவருக்குத் தெரியாதா? அப்படின்னா, மினி பஸ் முதலாளிகளுக்கு சப்போர்ட் பண்ணுவார்; அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக நடந்துகொள்ள மாட்டார். இப்படித்தானே எடுத்துக்கணும். ஏற்கனவே, அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி, தனியார் பஸ் முதலாளிகளும் கட்டணத்தை உயர்த்தி பலனடைவதற்கு வழி செய்திருக்கிறது இந்த அரசு. அதற்கான தனி கவனிப்பும் நடந்திருக்கிறது. இந்த லட்சணத்தில், ஓபனாகவே, "மினி பஸ் உரிமையாளர்களுக்கு அரசு எப்போதும் உறுதுணையாக இருக்கும்' என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி'' என்றார் ஆதங்கத்துடன்.
சில நேரங்களில் உள்ளது உள்ளபடி உண்மை பேசுவதும்கூட, பொதுவெளியில் உறுத்தலாகிவிடுகிறது.
-சி.என்.இராமகிருஷ்ணன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-14/mlaa.jpg)