பார்க்கத்தான்... படிக்க அல்ல!
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் "தளபதி நூலகம்' அமைத்துள்ளார் மா.செ.யான எ.வ.வேலு.
போன வருடம், இந்த நூலகத்தை திறந்து வைத்து, தனக்குப் பரிசாக வந்த பலநூறு நூல்களை வழங்கினார் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
அந்த நூலகத்தில் உள்ள அத்தனை நூல்களும் பிரிக்காமல், படிக்காமல், அச்சுக் குலையாமல் இருக்கின்றன.
""தளபதி நூலகத்தை தி.மு.க.வினர் உட்பட யாருமே பயன்படுத்துவதில்லை. 500 ரூபாய் கொடுத்து உறுப்பினராக வேண்டும். இல்லையென்றால் நூல் எடுக்க முடியாது என்று விதி வைத்திருக்கிறார்கள். அரசு மாவட்ட நூலகத்திலேயே 200 ரூபாய்தான் கட்டணம். மாணவ-மாணவிகளுக்கு 100 ரூபாய்தான். அப்படியிருக்க, ஒரு பெரிய கட்சியின் செயல் தலைவர் பெயரில் திறந்திருக்கும் நூலகத்தில் உறுப்பினர் கட்டணம் 500 ரூபாய் என்றால் யாராவது தலைகாட்டுவார்களா? கட்டணம் குறைவாக வைத்தால் காஸ்ட்லியான புத்தகங்களை திரும்பக் கொண்டு வந்து மாற்றமாட்டார்கள் என்று சொல்லி 500 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்துவிட்டார்கள். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி படிப்பகம் திறந்து, வளர்ந்த கட்சி இது. ஏதோ நாங்களும் நூலகம் வைத்திருக்கிறோம் என்று காட்டுவதற்காக, ஜவுளிக்கடை பொம்மை போல நூலகத்தை வைத்திருக்கிறார்கள்'' -வேதனைப்படுகிறார்கள் வயதான உடன்பிறப்புகள்.
ஆனால், செயல் தலைவரோ, ""தி.மு.க. நிர்வாகிகள், கிளைக்கு ஒரு நூலகத்தை அமைத்து, அறிவுத் தொண்டாற்ற வேண்டும்'' என்று தனது பிறந்தநாள் செய்தியில் தி.மு.க.வினருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். செயல்தலைவர் சொல்வதை செயல்படுத்துவார்களா?
-து.ராஜா
அ.தி.மு.க.வினருக்கு அபராதம் எட்டு கோடி!
அனுமதித்த அளவைவிட பலமடங்கு மண்ணை வெட்டிக் கடத்தியதாக துணிச்சலாக எட்டு கோடி அபதாரம் விதித்து, ஈரோடு மாவட்ட அ.தி.மு.க.வுக்கே கிலி ஏற்படுத்தியுள்ளார் இளம் பெண் அதிகாரியான ஈரோடு கோட்டாட்சியர் நர்மதாதேவி.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள கருமாண்டி செல்லிபாளையம், சென்னிமலை, கொங்கம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் மண் எடுக்க 2008 முதல் 2012 வரை அனுமதி வாங்கினார்கள் பெருந்துறையைச் சேர்ந்த சேனாபதியும் சுப்பிரமணியும். இருவரும் அ.தி.மு.க. முக்கிய பிரமுகர்கள். இவர்கள், அமைச்சர் கருப்பணனின் உறவினர்கள். இதில் சேனாபதி பெருந்துறை நிலவள வங்கியின் தலைவராகவும் உள்ளார்.
ஒருஅடி எடுக்கச் சொன்னால் ஒன்பது மீட்டர் எடுத்து 30 கோடி ரூபாய் மண்ணை முழுமையாக கொள்ளையடித்தார்கள். இந்த அநியாயத்தை பெருந்துறையைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுத்ததோடு நீதிமன்றத்திலும் மனுச் செய்தார். நீதிமன்றம் உரிய விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர், ஆர்.டி.ஓ. நர்மதாதேவியை விசாரணை அதிகாரியாக நியமித்தார். களத்தில் இறங்கிய நர்மதாதேவி, இவர்கள் மண் எடுத்த பகுதிகளில் நேரடியாக சென்று அளவுகளை கணக்கெடுத்தார். அனுமதித்ததைவிட பலமடங்கு மண் கூடுதலாக எடுக்கப்பட்டதை ஆதாரத்துடன் திரட்டி அரசு அளவுப்படி மொத்தம் 8 கோடி அபராதம் விதித்து உடனடியாக பணத்தை வசூலிக்குமாறு பெருந்துறை தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அரசு கணக்குப்படி 8 கோடி. மார்க்கெட் கணக்கில் சுமார் 30 கோடி ரூபாய் மண்ணை இவர்கள் திருடியுள்ளார்கள்.
அ.தி.மு.க. பிரமுகர்களான இருவரும் கோட்டாட்சியர் நர்மதாதேவியை ஈரோட்டிலிருந்து டிரான்ஸ்பர் செய்வதற்கும் 8 கோடியை ரத்து செய்வதற்குமான வேலைகளை சென்னையில் முகாமிட்டு கொங்கு அமைச்சர்கள் மூலம் செய்துவருகிறார்கள்.
-ஜீவாதங்கவேல்
வஞ்சிக்கும் எம்.பி.!
கடந்த பிப்ரவரி 14-ந் தேதி நீலகிரியின் குன்னூர் ஓட்டுப் பட்டறையில் உள்ள முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாலம்மன் கோவிலில் சிறு கோயிலொன்றை கட்டி கும்பாபிஷேகம் நடத்தினார் நீலகிரி தொகுதி எம்.பி. கோபாலகிருஷ்ணன். அல்லோலகல்லோலப் பட்ட அந்த விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு சிறப்பித்தார். அந்த கும்பாபிஷேக விழாவை அமர்க்களப்படுத்த வேண்டி கூடலூர் மண்வயல் பகுதியில் இருந்து தாருடனும், தார் இல்லாமலும் 375 வாழைமரங்கள் கொண்டு வரப்பட்டன.
அதற்கு முன்பணம் வழங்கிய எம்.பி. கோபாலகிருஷ்ணன் மீதித்தொகை 40,000 ரூபாயை கொடுக்காமல் பின்வாங்கிவிட்டாராம். இதைப்பற்றி நம்மிடம் சொல்லும் கூடலூரின் வாழைத்தார் மனிதர்கள்... ""சார்... அநியாயம் சார்... வெறும் நாப்பதாயிரம் சார்... அதைக் குடுக்க முடியாம ஒரு எம்.பி. இங்கே இருக்காரு. வாழைத்தாருக்கு பணம் கேட்டா "வாழைத்தாரோட தரம் சரியில்லை... அதுனால பணமெல்லாம் கொடுக்க முடியாது'ன்னு ரெண்டுமுறை எங்களை திருப்பி அனுப்பிட்டாருங்க எம்.பி. ஒரு முதலமைச்சர் கலந்துகிட்ட விழாவுக்கு ஏழைகள் எங்ககிட்டயிருந்து வாங்குன பொருளுக்கு பணம் தரக்கூடாதுங்களா..? இதை கலெக்டர்கிட்ட சொல்லி நியாயம் கேட்கவிருக்கிறோம் சார்...'' என்கிறார்கள்.
குன்னூர் அ.தி.மு.க.வினரோ... "என்னங்க பண்றது..? குன்னூர் நகராட்சித் தலைவரா இவரு இருந்த போதே மார்க்கெட்ல சின்ன காய்கறிக் கடைக்காரன்கிட்ட வசூல் பண்ணியவரு. இப்ப எம்.பி. ஆன பின்னாடியும் இன்னும் திருந்தலைன்னா இந்தக் கொடுமைய எங்க போய் சொல்றது சார்? எம்.பி.யை அந்த குன்னூர் முத்தாலம்மன்தான் திருத்தணும்' எனச்சொல்லி தலையிலடித்துக்கொள்கிறார்கள்.
-அ.அருள்குமார்