அரசியல் அதிகாரத்தின் பின்னணியில் இருந்த ம.நடராஜனின் கடைசி கட்டத்தை "எம்.என். உயிர்ப் போராட்டம்' என்ற தலைப்பில், கடந்த இதழ் அட்டைப் படக்கட்டுரையில் எழுதியிருந்தோம். கடந்த 19-ஆம் தேதி பின்னிரவு குளோபல் மருத்துவமனையில் நடராஜனின் உயிர் பிரிந்து, ராமச்சந்திரா மருத்துவமனையில் எம்பாமிங் செய்யப்பட்டு, 20-ஆம் தேதி அதிகாலையில் பெசன்ட் நகர் நடராஜன் இல்லத்திற்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mn_0.jpg)
நடராஜனின் இறப்புச் சான்றிதழ் கிடைத்ததும் சசிகலாவுக்கு பரோல் கேட்கும் வேலைகள் துரிதமாக நடந்தன. தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் இருக்கும் நடராஜனின் பூர்வீக வீட்டில் அவரது உடலை வைக்கலாம் என முதலில் ஆலோசிக்கப்பட்டு, பின்னர் தஞ்சை அருளானந்தம் நகரில் வைப்பதென தீர்மானிக்கப்பட்டது.
அதற்குமுன் சென்னை- பெசன்ட் நகர் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நடராஜனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் உட்பட பலரும் கட்சி பாகுபாடின்றி அஞ்சலி செலுத்தினர். 20-ஆம் தேதி, சசிகலாவுக்கு பரோல் கிடைக்கும் நேரத்தைக் கணக்கிட்டும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அஞ்சலி செலுத்த வருவதை முன்னிட்டும் பிற்பகல் 1:40-க்கு நடராஜனின் உடல் ஏற்றப்பட்ட ஆம்புலன்ஸ், சென்னையிலிருந்து தஞ்சையை நோக்கி புறப்பட்டது. பெங்களூருவிலிருந்து காரில் புறப்பட்ட சசிகலாவுடன், டி.டி.வி.தினகரன், புகழேந்தி ஆகியோரும் கிளம்பினர். திருச்சி துவாக்குடி டோல்கேட்டுக்கு வந்துவிட்ட சசிகலாவும் மற்றவர்களும் நடராஜனின் உடலை ஏற்றி வந்த ஆம்புலன்சுக்காக அரை மணி நேரம் காத்திருந்தனர்.
ஆம்புலன்சை தூரத்தில் பார்த்ததுமே வெடித்து அழ ஆரம்பித்த சசிகலா, கணவரின் உடலை அருகில் பார்த்ததும் கதறி அழ ஆரம்பித்துவிட்டார். இரவு 7:10-க்கு அருளானந்தம் நகர் வீட்டிற்கு நடராஜனின் உடல் கொண்டு வரப்பட்டதும் டெல்டா மாவட்டத்தில் உள்ள எம்.என்., மற்றும் சசிகலாவின் உறவுகள், ர.ர.க்கள், மாற்றுக் கட்சியினர் திரளாக வந்து அஞ்சலி செலுத்திச் சென்றபடி இருந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mn1_0.jpg)
21-ஆம் தேதி காலை வந்த சீமான், “"அ.தி.மு.க. எம்.பி., யாராவது ஒருத்தர் கடிதம் கொடுத்திருந்தா போதும், எம்.என்.னை, சசிகலா உயிருடன் பார்த்திருக்கலாம். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வந்து அஞ்சலி செலுத்துகிறார். ஆனால் ஆளும் கட்சியிலிருந்து ஒருத்தரும் வரவில்லை. பதவிக்காக எதையும் செய்யும் கூட்டத்தில் சிக்கித் தவிக்கிறார்கள்'’’என காட்டமாகப் பேசினார்.
நடராஜன் உடல் வருவதற்கு முன்பும் வந்த பின்பும் அனைத்து ஏற்பாடுகளையும் மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார் சசிகலாவின் தம்பி திவாகரன். திவாகரன் -ஜெய் ஆனந்த் ஒருபக்கம், தினகரன் ஒருபக்கம், விவேக் ஜெயராமன் ஒருபக்கம் என நடராஜன் உறவுகளும் சசியின் உறவுகளும் ஒருவருக்கொருவர் ஒட்டாமல் தனித்தனியே நின்று கொண்டிருந்தனர்.
நடராஜனின் இந்த அருளானந்தம் நகர் வீட்டிற்கு இருமுறை மட்டுமே வந்துள்ளார் சசிகலா. ஒருமுறை வீட்டில் நடராஜன் இல்லாத போதும், இப்போது அவர் இறந்த பின்னும். ""தான் இறந்தால் சடங்கு சம்பிரதாயங்கள் எதுவும் செய்யாமல் சுயமரியாதையுடன் அடக்கம் செய்ய வேண்டும் என்பது தான் மாமாவின் விருப்பம், அதன்படியே செய்யலாம்'' என திவாகரன் சொன்னார். நடராஜனின் தம்பி ராமச்சந்திரனோ, ""நினைவு மண்டபம் கட்டினால் அதை பராமரிக்கணும், இல்லேன்னா குடும்பத்துக்கு ஆகாது. அதனால உடலை எரித்துவிடலாம்'' என்றார். இரவு 11 மணி வரை ஆலோசனை நீடித்து கடைசியில், "சம்பிரதாயங்களுடன் புதைக்கலாம்' என்ற முடிவுக்கு வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mn-final-funeral.jpg)
அதற்கடுத்ததாக "இறுதிச்சடங்குகளை சசிகலா செய்யட்டும்' என்ற குரல் ஒலிக்க... "நம் வழக்கப்படி பெண்கள் இறுதிக்காரியங்கள் செய்ய இடுகாடு வரை வருவதில்லை. அதனால் ராமச்சந்திரனின் மகன் ராசுவே இறுதிக்காரியங்களைச் செய்யட்டும்' என முடிவு எடுக்கப்பட்டது.
மாலை 4:20-க்கு அருளானந்தம் நகரில் இருந்து புறப்பட்ட நடராஜனின் இறுதி ஊர்வலம், நான்கு கி.மீ.யில் உள்ள முள்ளிவாய்க்கால் முற்றம் வந்து சேர 5:45 மணி ஆனது. நடராஜன் உடலில் போர்த்துவதற்காக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியுடன் சிலர் வந்தனர். அதற்கு சிலர் மறுப்புத் தெரிவித்ததும் அ.தி.மு.க. கரைவேட்டி போர்த்தப்பட்டு, நடராஜன் உடலுடன் பல புத்தகங்களும் புதைக்கப்பட்டன.
எல்லாம் முடிந்தபின் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் நடராஜனின் தமிழ்த் தொண்டு பற்றியும் முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்க அவர் பாடுபட்டது பற்றியும் சிலாகித்துப் பேசினர். 25 ஆண்டுகளுக்கும் மேலாக அ.தி.மு.க. என்ற கட்சிக்குள் நிழல் மனிதராக வலம் வந்த எம்.என்., இந்த மண்ணுலகிலிருந்து விடை பெற்றார்.
-அரவிந்த், பகத்சிங், செல்வகுமார், மகி
தானம் தந்த குடும்பத்தின் நிலை!
இறுதிக் காரியத்திற்கான அனைத்து வேலைகளையும் தனது ஆட்கள் மூலம் சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தார் திவாகரன். அவரிடம் சென்ற மன்னார்குடிக்காரர் ஒருவர், “""அண்ணே அய்யா உடல் எங்க வந்துக்கிட்டிருக்கு, சின்னம்மா எந்த ஊருகிட்ட வந்துக்கிட்டிருக்காங்க''’என கேட்கப் போக... ""எல்லாம் என்கிட்ட கேட்டா நடக்குது, அதான் ஒருத்த(ன்)ர் கட்சி ஆரம்பிச்சிருக்காருல்ல அவர்ட்டப் போயி கேளுய்யா''’என சீறியிருக்கிறார் திவாகரன்.
நடராஜனுக்கு உடல் உறுப்புகள் கொடுத்தவர் மூளைச்சாவு அடைந்த அறந்தாங்கி கூத்தாடிவயல் கார்த்திகேயன். அவரது மூளைச்சாவையே குடும்பத்தினரிடம் மறைத்து, கடைசி நேரத்தில் உடலுறுப்புகள் பெறப்பட்டதை நக்கீரன்தான் விரிவாக வெளியிட்டிருந்தது. இந்நிலையில் அவரது வீட்டுக்குச் சென்றோம். ""என் தம்பி இறந்துட்டாலும் அந்த நடராஜன் உடல் மூலம் உயிர் வாழ்கிறான் என்ற சந்தோஷத்தில் இருந்தோம். இப்போ அவரும் இறந்துவிட்டார்''’என கண் கலங்கினார் கார்த்திகேயனின் அண்ணன் பிரபாகரன். கார்த்திகேயனின் மற்ற உடலுறுப்புகள் வேறு சிலருக்குப் பொருத்தப்பட்டுள்ளதால், அதை நினைத்து ஆறுதல் அடைகின்றனர் உறவினர்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-23/mn-n.jpg)