அன்றாட அரசியல் நிகழ்வுகளை அச்சுப்பிசகாமல் அப்படியே அள்ளித்தருவதில் நக்கீரனுக்கு இணையாக எந்த இதழையும் என்னால் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை. நான் முழுநேர அரசியலுக்கு வருவதற்கு நக்கீரன் இதழ் ஒரு காரணமாக இருந்திருக்கிறது. அரசியல், ஆட்சி அதிகாரங்களின் பிடியில் ஆசிரியர் அவர்கள் சிக்கி அத்தனை சோதனைகளையும் சந்தித்து, பீனிக்ஸ் பறவை போல சிலிர்த்து எழுந்து வந்துகொண்டிருப்பதற்கு துணிச்சலும், நேர்மையும், எழுத்தில் நடுநிலை தவறாமையும்தான் காரணம் என்பது எனது கருத்து. லட்சக்கணக்கான வாசகர்களின் இல்லங்களிலும் அவர்களது உள்ளங்களிலும் இடம் பிடித்திருப்பதும் இதனால்தான்.
2018, மார்ச் 03-05 இதழ் :
"மோடி டார்கெட் ப.சி.' அரசியல் கட்டுரையில் மோடி, அமித்ஷாவின் பழிவாங்கல் படலத்தையும், சி.பி.ஐ.யின் செயல்பாட்டையும் வெட்டவெளிச்சமாக்கிவிட்டீர்கள். சங்கரமடம் சர்ச்சைகளைப் படித்த போது "இதுவும் ஒருவகை “ஆன்மிக அரசியலோ'’என்ற நினைவு எனக்குள் வந்துபோனாலும், உப்பைத் தின்றால் தண்ணீர் குடிக்கணுமே என்ற பழமொழியும் ஞாபகத்தில் வந்துபோனது.
"தொடரும் தமிழக மாணவர்களின் உயிர்ப் பலி!' கட்டுரை கண்ணில் நீரை வரவழைத்ததோடு எங்கே சென்றாலும் அடி வாங்கிக்கொண்டிருக்கும் தமிழன், இப்போது உயிரையும் தியாகம் செய்ய வேண்டிய நிலையை நினைத்தால் மனது ரணமாகிறது.
குழந்தைகளை குறிவைக்கும் கறுப்பு-ஸ்டிக்கர்… வட நாட்டவர் வாலை ஒட்ட நறுக்கினால்தான் திருடர்கள் திருந்துவார்கள்... அதை தொடங்கி வைத்ததற்கு சபாஷ்.
உங்கள் இதழில் நடிகர் ராதாரவியின் "கர்ஜனை'க்கு நான் ரசிகனாகவே மாறிவிட்டேன். அந்த கர்ஜனை தொடரை புத்தகமாக வெளியிட்டால் நல்ல வரவேற்பைப் பெறுவது உறுதி.
வாசகர் கடிதங்கள்!
சுயநலக் கரிசனம்!
ஒருபுறம், அயல்நாடுகளில் கோழி இறைச்சியின் பற்றாக்குறையால் கெ.எஃப்.சி. ரெஸ்டாரென்ட்டுகளுக்கு மூடுவிழா நடத்திவருகிறார்கள். மறுபுறம், தமிழகத்திற்கு பதப்படுத்தப்பட்ட அமெரிக்க மரபணுக் கோழிகளின் லெக்பீஸை இறக்குமதி செய்து, தமிழன் வாயில் திணிக்கப் பார்க்கிறார்கள். உணவு அரசியல் என்கிற அமெரிக்கர்களின் சுயநலக் கரிசனம் நமக்கான நோயாகப் பரிணமிக்கப்போகிறது. உஷார் மக்களே உஷார்!
-தே.மணிமாலா, நாகப்பட்டினம்.
சொல்வதற்கில்லை!
தலைமைச் செயலக சங்கமும் எடப்பாடிக்கு எதிர்க்கொடி பிடித்து கோட்டைக்குள்ளே கொந்தளிப்பா? இதுவரையில், சாலையோர துப்புரவுப் பணியாளர்கள்தான் தங்கள் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் பந்தலுக்குள் அதிகளவில் வரவில்லை என நினைக்கிறேன். கூடிய விரைவில் அவர்கள் வந்தாலும் ஒன்றும் சொல்வதற்கில்லை.
-அ.பரத்பாலா, சேலம்.