காவிரியில் தமிழகத்தின் உரிமை மறுக்கப்படுவதற்கு முன்பே, நீட் தேர்வு என்ற வடிவத்தில் தமிழகத்தின் உரிமையை நீட் என்ற கத்தி மூலம் அறுத்து, மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை பா.ஜ.க. அரசு பறித்துவிட்டது.

Advertisment

neetprotest-delhi

அந்த உரிமையை மீட்கவும் காவிரி போராட்டம் தமிழகத்தில் கொந்தளித்துள்ள நிலையில், அதனுடன் சேர்த்து நீட் குரலும் டெல்லியில் ஒலிக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்துடன் நடத்தப்பட்டுள்ளது சமூகநீதி கருத்தரங்கம்.

தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் அனுமதிக்காக அனுப்பப்பட்டது. 15 மாதங்களாகியும் ஒப்புதல் தராமல் புறக்கணிக்கும் மத்திய அரசின் போக்கை கண்டித்து ஏப்ரல் 4-ஆம் தேதி ஜனநாயக உரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் ஜந்தர்மந்தரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திராவிடர் கழகமும் அதன் மாணவரணியும் ஒருங்கிணைத்த இந்தப் போராட்டத்தில் தி.க. தலைவர் கி.வீரமணி, மாநிலங்களவை உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, ஆ.ராசா, பேராசிரியர் சுப.வீரபாண்டியன், டி.ராஜா, டி.கே.ரெங்கராஜன், ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் முழங்கினர். ""நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப்பெற முடியாது என்பதில்லை. 21 ஆண்டுகள் தொடர்போராட்டத்திற்குப் பிறகு, நுழைவுத்தேர்வை ரத்துசெய்த வரலாறு தமிழகத்துக்கு உண்டு'' என்றார் கி.வீரமணி.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாலையில் டெல்லி கான்ஸ்டிடியூசன் கிளப்பில் சமூகநீதி கருத்தரங்கம் நடைபெற்றது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும். மருத்துவ மேற்படிப்பிலும், பல்கலைக்கழக ஆசிரியர்கள் நியமனத்திலும் இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டும் என்று இந்தக் கருத்தரங்கில் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்று வலியுறுத்தினர்.

கருத்தரங்கின் முதல் அமர்வு மாணவர்களுக்கானது. இந்த அமர்வுக்கு திராவிடர் கழக மாணவர் பிரிவு மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் மாணவர் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

அடுத்தடுத்த அமர்வுகளில் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றுப் பேசினர். வடமாநிலங்களைச் சேர்ந்த சமூக நீதி அமைப்பினரும் பங்கேற்றனர். நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானத்தை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் தவிர்க்கும் பா.ஜ.க. அரசின் போக்கை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.