மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவைத் தகர்க்கும் "நீட்' தேர்வை எதிர்த்து மாணவ அமைப்புகள் பலவும் இணைந்து சென்னையில் கடந்த 22-ந் தேதியன்று பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தின. இதில் தமிழகம் தழுவிய அளவில் மாணவர்கள் பலரும் பங்கேற்றனர்.
வள்ளுவர் கோட்டம் அருகே சமூகநீதிப் பாதுகாப்புக்கான பேரவை சார்பில் நடைபெற்ற இந்த நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவர் அமைப்பினர் பங்கேற்று எழுச்சி முழக்கமிட்டனர். திராவிடர் மாணவர் கழக மாநில கூட்டுச் செயலாளர் சே.மெ.மதிவதனி வரவேற்க, திராவிடர் மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்க உரையாற்றினார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளர் சீ.தினேஷ் ஆர்ப்பாட்ட நோக்கவுரையாற்றினார்.
திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி மாநிலச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமாகிய சி.வி.எம்.பி.எழிலரசன் நீட் நுழைவுத் தேர்வு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு தலைமையேற்று "நீட்டை எதிர்ப்பது ஏன்?' எனும் தலைப்பில் விளக்கவுரையாற்றினார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/neetexam.jpg)
ஒருங்கிணைந்த போராட்டமாக அமைந்த இந்தக் களத்தில் திராவிடர் மாணவர் கழகம், திராவிட முன்னேற்றக் கழக மாணவரணி, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், ம.தி.மு.க. மாணவர் அணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம், முஸ்லிம் மாணவர் பேரவை, முற்போக்கு மாணவர் கழகம், சமூகநீதி மாணவர் இயக்கம், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா, மாணவர் இந்தியா, திராவிட இயக்கத் தமிழர் பேரவை மாணவரணி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகள், மாணவரணியினர் பெருந்திரளாக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று நீட் தேர்வை நிரந்தரமாக விலக்கக்கோரி முழக்கங்களை எழுப்பினர்.
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு தீர்மானம் குறித்து மத்தியஅரசிடம் வலியுறுத்தி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டிய மாநில அரசு, நீட் தேர்வை வரவேற்கும் வகையில் கோச்சிங் சென்டர்களை உருவாக்கி வருவது, கிராமப்புற ஏழை -ஒடுக்கப்பட்ட மாணவ சமுதாயத்திடமும் அவர்களின் பெற்றோரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதனால், நீட்டுக்கு எதிராக பல வடிவங்களில் போராட்ட முயற்சிகள் தொடர்கின்றன.
இந்நிலையில்... நீட் தேர்வை எதிர்த்துப் புதுவகைப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறார் திரைப்பட இயக்குநர் வ.கௌதமன்.
மருத்துவக் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 25 பேரை அழைத்துக் கொண்டு தஞ்சை எம்.பி. பரசுராமன் வீட்டிற்குச் சென்றார் கௌதமன். மாணவர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவை எம்.பி.யிடம் கொடுத்தார். ""தமிழக மாணவர்களின் மருத்துவர் கனவைத் தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். தமிழக மாணவர்களின் எதிர்ப்பை வலியுறுத்தி தாங்கள் பாராளுமன்றத்தில் பேச வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் பிரதமரிடம் கொடுக்கப்பட்டது. அந்தத் தீர்மானங்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டார்கள். அந்தத் தீர்மானத்திற்கு உயிர் கொடுக்க வேண்டும். தமிழக எம்.பி.க்கள் குரல் உயர்த்த வேண்டும்'' -கௌதமனும் மாணவர்களும் எம்.பி. பரசுராமனை கேட்டுக் கொண்டார்கள்.
""நிச்சயம் பேசுவேன்'' என்ற உறுதியோடு மனுவைப் பெற்றுக் கொண்டார்.
எம்.பி.யைப் பார்த்துவிட்டுத் திரும்பிய மருத்துவ மாணவர்கள் நம்மிடம், ""கடந்த ஆண்டு, நீட்டின் கொடுமையால் மாணவி அனிதாவை இழந்தோம். இனியொரு மாணவரையும் இழக்க யாம் விரும்பவில்லை. அதனால்தான் நீட் வேண்டாம் என்பதை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் பேசுமாறு எம்.பி.யிடம் கேட்டுக்கொண்டோம். எமது அடுத்தடுத்த போராட்டங்கள் அரசாங்கங்களின் முடிவைப் பொறுத்தே அமையும்'' என்றார்கள்.
இயக்குநர் கௌதமனோ ""தமிழகக் கிராமப்புற ஏழை மாணவர்கள் அதிகமாக மருத்துவர்களாவதை மத்திய அரசால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைக் கொண்டு வந்து தமிழக மருத்துவக் கல்லூரிகளில் நிரப்புகிறார்கள். தமிழ் மாணவர்களோ இடம் கிடைக்காமல் நடுத்தெருவில் நிற்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும், மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராட்டங்களை நடத்தினோம்; நடத்திக்கொண்டிருக்கிறோம். நமது அண்டை மாநிலங்களான ஆந்திர, கன்னட, கேரள எம்.பி.க்கள் தங்கள் மாநில பிரச்சினைக்காக ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று குரல் கொடுக்கிறார்கள். தர்ணா செய்கிறார்கள். அந்த மாதிரி நமது எம்.பி.க்கள் 58 பேரும், நீட்டை ரத்துச் செய்ய வேண்டுமெனக் குரல் கொடுக்க வேண்டும். தர்ணா செய்ய வேண்டும், தஞ்சை எம்.பி. பரசுராமனிடம் மனு கொடுத்திருக்கிறோம்.
இதைப்போல அத்தனை எம்.பி.க்களிடமும் மனு கொடுக்கப் போகிறோம். மத்திய அரசு செவிசாய்க்கவில்லை என்றால், ஜல்லிக்கட்டுக்காக நடத்தியதைப்போல மாணவர்களையும், இளைஞர்களையும் இணைத்து மாபெரும் போராட்டம் நடத்துவோம்'' உணர்ச்சிமயமாகச் சொன்னார்.
நீட் நீளுமா? நீங்குமா?
-இரா.பகத்சிங்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/neetexam.jpg)