இன்னும் சில ஆண்டுகளில் மலைகளும் குன்றுகளும் முற்றாக அழிக்கப்பட்ட இடமாக மாறிவிடும் பெரம்பலூர் மாவட்டம்.
பெரம்பலூர் மாவட்டத்தில் எந்தப் பகுதியைப் பார்த்தாலும் பாறைகளை ஏற்றிச் செல்கின்ற, ஜல்லி ஏற்றிச் செல்கின்ற டிப்பர் லாரிகளின் அணிவகுப்புகளைத் தரிசிக்க முடிகிறது.
மலைகளைச் சுற்றிலும் ராட்சச எந்திரங்கள், ஜல்லி உடைக்கும் கிரஷ்ஷர்கள், பாறைகளைப் பிளக்கும் பயங்கர வெடிச் சத்தங்கள், தூசி தூசி தூசி... மாவட்டமே தூசி மயமாகி விட்டது.
""பாருங்கண்ணே... நாங்க எல்லாரும் பத்தாம் கிளாஸ், +2 பரிட்சை எழுதுன நேரத்துல... ஒவ்வொரு நிமிஷமும் இடி விழுகிற மாதிரி மலையில வெடி வைக்கிறாங்க. நாங்க எப்படிப் படிக்க முடியும்?'' ரமேஷும், முருகனும், சாமிவேலும் வேதனையோடு முறையிட்டார்கள்.
பாடாலூர் ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பாளர் இனியா அன்பு நம்மிடம், ""உங்களுக்குத் தெரியும், தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி எங்க ஊரு... எங்க ஊரை ஒட்டித்தான் ராஜா மலையும் பெருமாள் மலையும் இருக்கு. இந்த ராஜாமலை சாதாரண மலைனு நெனைச்சுடாதீங்க. ஆயிரம் வருஷம் முந்தி மாமன்னர் ராஜராஜன் தஞ்சாவூர்ல பெரியகோயிலைக் கட்டினாரே... மலையே இல்லாத தஞ்சையில் அவ்வளவு பெரிய கிரானைட் கோயிலை எப்படிக் கட்ட முடிஞ்சது? எல்லாம் இந்த ராஜாமலைக் கிரானைட்தான். இங்கே வெட்டி, அளவெடுத்து இங்கேயே செதுக்கித்தான் கொண்டு போனாங்களாம். அந்த ஏழு வருஷமும் மாதம் ஒரு தடவை ராஜாமலைக்கு ராஜராஜன் வந்திருவாராம். அவர் தங்கியிருப்பதற்காக மலையைக் குடைந்து ஒரு மண்டபம் அமைத்திருந்தாங்களாம். அந்த மண்டபத்தைக் கூட குவாரிக்காரர்கள் விட்டுவைக்கலை... ஒண்ணோ ரெண்டோ தூண்கள் மட்டும்தான் இப்ப கிடக்குதாம்... அந்த ராஜாமலை இருக்கும் இடம் இன்னும் சில வருடங்களில் சுரங்கமாகிவிடும். பாறையைப் பிளக்கும் வெடிச் சத்தத்தால் கருச்சிதையுது'' பொங்கினார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உடைக்கப்படும் மலைகளின் அடிவாரங்களில் அமைந்துள்ள எளம்பலூர், கவுல்பாளையம், செட்டிகுளம், இரூர், காரை, ஊட்டத்தூர், ஊட்டங்கால், தெரணி, நாரணமங்கலம், பாளையம் என பல ஊர்களுக்கும் சென்றோம்.
காரை மலையப்பன் நகரில் 250 நரிக்குறவர் குடும்பங்கள். அங்கிருந்து வெளியேறா விட்டால் ஏதாவது செய்து விடுவார்களோ குவாரிக்காரர்கள் என்ற பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன இந்த 250 குடும்பங்களும்.
இந்த நகரின் தலைவர் சுப்பிரமணி நம்மிடம், ""நிரந்தரமின்றி ஊரூராய் அலைந்து கொண்டிருந்தோம். பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலம். அப்ப, திருச்சி மாவட்ட கலெக்டராக இருந்த மலையப்பன், எங்களுக்கு குடியிருக்க வீட்டுமனையும், பயிர் செய்ய நிலமும் கொடுத்தார். குடிநீருக்காக கிணறும் வெட்டிக் கொடுத்தார். இப்ப எங்களையெல்லாம் விரட்டப் போகிறார்கள். இம்மலையில் உள்ளது விலையுயர்ந்த கிரானைட் கல்லாம். சாட்டிலைட் மூலம் கண்டுபிடித்தார்களாம். அந்த குஜராத் கம்பெனிக்காரங்க மூணுமாதமா எங்க ஊரையும் இந்த மலையையும் சுத்திச் சுத்தி வர்றாங்க. அமித்ஷாவோட சொந்தக்காரர் கம்பெனியாம்.
ஊரை காலிபண்ணச் சொல்லி மிரட்டுறாங்க. கலெக்டர்வரை புகார் கொடுத்து விட்டோம். இந்த மலையில் கல்லெடுக்கணும்னா எங்களை கொன்றுவிட்டுத்தான் எடுக்கணும்'' ஆத்திரத்துடன் சொன்னார் சுப்பிரமணி.
பிரமரிஷிமலை என்ற சித்தர் மலையை நொறுக்கிக் கரைத்துக் கொண்டிருக்கிறார்கள். மலையின் உச்சியில் பிரமரிஷி எனும் சித்தரின் சமாதியும் இருக்கிறது. பல மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்துபோகும் மலை. சதாசர்வ காலமும் வெடிவைத்துத் தகர்த்துக் கொண்டிருக்கின்றனர்.
எந்தப் புகாருக்கும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. முன்பு 100-க்கும் அதிகமான கல்குவாரிகள் இருந்தன. மாவட்ட ஆட்சியராக தாரேஸ் அகமது வந்ததும் 70 குவாரிகளின் அனுமதியை ரத்து செய்தார். விதிகளைக் கடுமையாக்கினார்.
அவர் போன பிறகு பழைய குருடியாய் மாறிப் போனது. இப்போதுள்ள மாவட்ட ஆட்சியர் சாந்தா, புதிதாக 120 குவாரிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கத் திட்டமிடுகிறார்.
""புதிய கல்குவாரிகளுக்கு 13.3.18 அன்று ஏலம் விடப்போவதாக கலெக்டர் சொன்ன உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குப் பதிவு செய்தோம். தடுத்தோம். ஆனால் கூடிய விரைவில் புதுக் குவாரிகளுக்கு லைசென்ஸ் கொடுக்கப் போகிறாராம்'' என்கிறார் வழக்கறிஞரும் நாம் தமிழர் கட்சிப் பிரமுகருமான அருண்.
பெரம்பலூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. பிச்சமுத்து நம்மிடம், ""89-90இல் நான் எம்.எல்.ஏ. அப்ப மலைகளைத் தாறுமாறாக உடைக்க ஆரம்பித்தார்கள். அப்போதைய முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று தடுத்து நிறுத்தினேன். பிறகு, கல்லுடைக்கும் சிறு தொழிலாளிகள் அம்மி, ஆட்டுக்கல் போன்றவற்றை செய்து வயிறு வளர்த்தார்கள். ஆனால் இப்போது ராட்சச எந்திரங்களைப் பயன்படுத்தி மலைகளை அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாக்க வேண்டிய அரசு, மலைகளின், ஆறுகளின், வனங்களின் அழிவுக்குத் துணை போய்க்கொண்டிருக்கிறது'' என்று வேதனைப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் சாந்தாவை சந்திப்பதற்கும், தொலைபேசியில் தொடர்பு கொள்வதற்கும் பலமுறை, பல நாட்களாக முயன்றும் முடியவில்லை.