வந்த செய்தி: முதல்வரும் துணை முதல்வரும் நடத்திய மகளிர்தின விழாவைப் புறக்கணித்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள்.
விசாரித்த உண்மை: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 500 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் நடந்தது. முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் பன்னீரும் இணைந்து நடத்திய இவ்விழாவில் தையல் மெஷின், கிரைண்டர், மிக்சி, மீன்கூடை வழங்கினர். இந்த உதவிகளைப் பெற வந்த 500 பெண்களைத் தவிர, கட்சிக்காரர்கள் யாரும் தலைமைக் கழகம் பக்கம் எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அமைச்சர்கள் வளர்மதி, நிலோபர் கபில் ஆகியோர் சென்னையில் இருந்தும் வரவில்லை. இதுதவிர கட்சியின் சீனியர்களான மதுசூதனன், கே.பி.முனுசாமி, பொன்னையன், மைத்ரேயன் போன்றோரும் கூட ஆப்செண்டாகி, முதல்வரையும் துணை முதல்வரையும் அப்செட்டாக்கிவிட்டனர்.
-சஞ்சய்
வந்த செய்தி: சி.பி.ஐ.யின் புதிய மாநிலத் தலைவர் யார்? எதிர்பார்ப்பில் காம்ரேடுகள்.
விசாரித்த உண்மை: வருகிற 28-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மன்னார்குடியில் நடக்கவிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ)யின் தமிழ் மாநில மாநாடுதான் காம்ரேடுகள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. கட்சியின் அரசியல் மற்றும் தேர்தல் நிலைப்பாடுகள், கடந்த மூன்று வருடங்களாக கட்சி நடத்திய இயக்கங்கள் குறித்து விவாதங்கள் நடத்தி முடிவுகள் எடுக்கவிருக்கிறார்கள். இவையெல்லாவற்றையும்விட, கட்சியின் அடுத்த மாநிலச் செயலாளர் யார் என்பது குறித்துத்தான் தோழர்கள் மத்தியில் ஹாட்டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய செயலாளரான முத்தரசனைவிட, சி.மகேந்திரன் அதிக வாக்குகள் வைத்திருக்கிறார். ஆனால் மாநில நிர்வாகக் குழுவில் முத்தரசனுக்கு கூடுதல் வாக்குகள் உள்ளன. கடந்த முறை போல, இரண்டு வாக்குகள் அதிகம் பெற்று, மீண்டும் முத்தரசனே வெற்றி பெறுவாரா? இல்லை, பதினைந்து ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மகேந்திரன் புதிய மாநில செயலாளர் ஆவாரா? என இருதரப்பிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-அறிவு
வந்த செய்தி: புது பதவியில் ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ்.நியமனம், மகிழ்ச்சியில் சி.எம்.டி.ஏ. அதிகாரிகள்.
விசாரித்த உண்மை: இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தமிழக தலைமை அதிகாரியாக இருந்த ராஜேஷ்லக்கானி ஐ.ஏ.எஸ். கடந்த வாரம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழு (சி.எம்.டி.ஏ.)மத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டார். துணை முதல்வர் பன்னீர் வசம் இருக்கும் இத்துறைக்கு லக்கானி நியமிக்கப்பட்டிருப்பதற்கு துறைக்குள் வரவேற்பு தெரிகிறது. சென்னை புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் பிரம்மாண்ட குடோன்கள் பல அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளன. இந்தக் குடோன்களில்தான் கடத்தல் செம்மரக்கட்டைகளும் தடை செய்யப்பட்ட போதை பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த இல்லீகல் குடோன்களைக் கணக்கெடுத்து, அவற்றிற்கு சீல் வைத்தாலே பல சீர்கேடுகளைத் தடுக்கலாம். இதை ராஜேஷ் லக்கானி செய்வார் என்ற நம்பிக்கையில்தான் இந்த வரவேற்பாம்.
-இளையர்
வந்த செய்தி: எஸ்.பி.யின் சாதிப்பாசத்திற்கு எதிரான போஸ்டர். போலீசைக் கண்டித்த நீதிபதி.
விசாரித்த உண்மை: துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் ஆசியோடு இரண்டு ஆண்டுகளுக்குமுன் தேனி மாவட்ட எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டார் பாஸ்கரன். ஓ.பி.எஸ்.சின் தீவிர விசுவாசியான இவர், மாவட்டத்தில் இருக்கும் தனது சாதியைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்களிடம் ரொம்பவே பாசம் காட்டுவார். அவர்கள் கேட்கும் ஸ்டேஷன்களுக்கு டிரான்ஸ்ர், இன்னபிற தேவைகளை உடனுக்குடன் கவனிக்கும் பாஸ்கரன், மற்ற சமூகத்து போலீசாரைக் கண்டு கொள்வதில்லையாம். இந்த சாதி பாசத்தைக் கண்டித்து, ஃபார்வர்டுபிளாக் கட்சியின் மாணவரணி சார்பில், பாஸ்கரனின் படத்தைப் போட்டு தேனி மாவட்டம் முழுவதும் போஸ்டர்களை ஒட்டிவிட்டனர். இதைப் பார்த்து டென்ஷனான காக்கிகள், போஸ்டர் போட்ட சுரேஷ், மகேஷ்வரன், சம்சுதீன் ஆகியோரைக் கைது செய்து, உத்தமபாளையம் சார்பு நீதிமன்ற நீதிபதி அருள் இளங்கோ முன்பு ஆஜர்படுத்தினார்கள். ""நீதிபதிகளைப் பற்றி அவதூறாக போஸ்டர் ஒட்டினால் கண்டுக்கமாட்டீங்க, உங்களைப் பற்றி ஒட்டினால் மட்டும் உடனே அரெஸ்ட் பண்ணிக் கூட்டி வந்திருங்க''’என காக்கிகளை சத்தம் போட்டுவிட்டு, மூவரையும் சொந்த ஜாமீனில் விடுதலை செய்துவிட்டார்.
-சக்தி
வந்த செய்தி: விலைமாதாக (call girl) நடிப்பதுதான் ரசிகர்களுக்குப் பிடிக்குது. -ஹீரோயின் ஓப்பன் ஸ்டேட்மெண்ட்.
விசாரித்த உண்மை: தமிழ் சினிமாவின் இப்போதைய சிலுக்கு(?!) என்று தன்னைத்தானே சொல்லிக்கொண்டிருப்பவர் பிந்துமாதவி. "ஏன்னா... சிலுக்கும் விஜயவாடாதான்... நானும் விஜயவாடாதான்' அப்படின்னு ஒரு ஆதாரப்பூர்வ தகவலும் சொல்லுவாரு. இப்ப கதை என்னன்னா... ""இந்தியாவுல எந்த மொழி சினிமாவுல நடிச்சாலும், தமிழ் சினிமாதான் பெரிய கனவுன்னு எல்லாருக்கும் தெரியும். தெலுங்குல நான் நாலு படத்துல நடிச்சாலும், தமிழ் சினிமாதான் எனக்கு லட்சியம்னு சென்னைக்கு வந்தேன். வந்த புதுசுல கௌதம்மேனன் சாரோட "வெப்பம்' படத்துல எனக்கு சான்ஸ் கெடைச்சிது. அதுல என்னோட கேரக்டர் விலைமாது (Call girl) னு டைரக்டர் சொன்னாரு. ஆனாலும் நான் கவலைப்படல. ஏன்னா இதுக்கு முன்னால தமிழ் சினிமாவுல பிரமிளா, தேவயானி, இந்தியில தபு எல்லாரும் இந்தக் கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அதனால தமிழ் சினிமா மட்டுமில்ல... எல்லா சினிமா ரசிகனுக்கும் கால்கேர்ள் கேரக்டர்னா ரொம்பப் பிடிக்கும். அதனால நானும் ஓ.கே. சொல்லிட்டேன்'' என்றார் பிந்துமாதவி.
-பரமேஷ்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-03-14/news-n.jpg)