எம்.சண்முகம், கொங்கணாபுரம்
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எப்படி இருக்கிறது?
""சம்பள பாக்கி என்னாச்சு?'' என நீதி கேட்கும் கவுதமியை சமாளிக்க வேண்டியதில் தொடங்கி பல சவால்களைக் கடக்க வேண்டியதாக இருக்கிறது.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
"வடகிழக்கு மாநில மக்கள் பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்ட காரணத்தால் அங்கு பா.ஜ.க. வெற்றிபெற்றுள்ளது' என்கிறாரே அமித்ஷா?
வடகிழக்கு மாநில மக்களின் அரசியல் சலிப்பையும் வெறுப்பையும் பா.ஜ.க. புரிந்துகொண்டு, அதற்கேற்ப வகுத்த "பலவித' வியூகங்களால் வெற்றி பெற்றுள்ளது என்பதே உண்மை. இதில் பா.ஜ.க.வைவிட வடகிழக்கு மாநில மக்கள்தான் புத்திசாலிகள். இனி அந்த மாநிலங்களின் நலன்களை எந்தத் தேசிய கட்சியும் முன்புபோல புறக்கணித்து ஒதுக்கமுடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
கே.கே.பாலசுப்ரமணியன், பெங்களூரு
"காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என காங்கிரசார் சொன்னதற்கும், "எம்.ஜி.ஆர். ஆட்சியைத் தருவேன்' என ரஜினி சொல்வதற்கும் என்ன வேறுபாடு?
காங்கிரஸ்காரர்கள் யாராலும் காமராஜராக முடியவில்லை. ரஜினி எப்போது, எப்படி எம்.ஜி.ஆர். ஆகப்போகிறார் என ரசிகர்களும் பொதுமக்களும் எதிர்பார்த்த நிலையில் அவர் வழக்கமான ரஜினியாக, இமயமலைக்குப் போய்விட்டார்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
இந்தியாவில் உள்ள திரிபுரா என்கிற ஒரு மாநிலத்தில் ஆட்சியை இழந்ததால் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சகாப்தம் முடிந்துவிட்டதாகக் கூறுவது சரியா?
தேர்தல் ஜனநாயகம் வழியாக திரிபுராவில் 25ஆண்டுகாலமாக இடதுசாரி இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது வெற்றிகரமான சாதனை என்றாலும், கம்யூனிஸ்ட்டுகளின் நோக்கம் தேர்தல் அரசியல் மட்டுமல்ல. உழைக்கும் வர்க்கத்தின் உரிமைப் போராட்டமும் அதில் பெறுகின்ற வெற்றியுமே கம்யூனிஸ்ட்டுகளுக்கு முதன்மையானது. அதில் இப்போதும் தாங்கள்தான் முதலிடத்தில் இருக்கிறோம் என்பதை மராட்டிய மாநிலத்தில் விவசாயிகளை ஒன்றுதிரட்டி நாசிக் முதல் மும்பை வரையிலான பேரணி மூலமாக நிரூபித்திருக்கிறார்கள் இடதுசாரிகள். பா.ஜ.க. ஆளும் மாநிலத்தில் 6 நாட்களில் 180 கி.மீ. தூரம் பயணித்த இந்த நீண்ட பேரணிக்கு சிவசேனா, மராட்டிய நவ நிர்மாண சேனா போன்ற வலதுசாரி அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தது ஆச்சரியம். காரணம், இடதுசாரிகள் உருவாக்கிய விவசாயிகள் எழுச்சி, பொதுமக்களின் பேராதரவைப் பெற்றதுதான். கால்கள் கொப்பளித்ததையும் பொருட்படுத்தாமல் ஆண்களும் பெண்களுமாக விவசாயிகள் பங்கேற்றதால், அவர்களின் கோரிக்கையை ஏற்கவேண்டிய நிலைக்கு அரசு தள்ளப்பட்டது. இதேபோன்ற ஆதரவை தேர்தல் அரசியல்களத்தில் பெறுவதிலும் காலத்திற்கேற்ற அணுகுமுறையுடன் இடதுசாரிகள் செயல்படும்போது மதவெறி சக்திகள் நடுநடுங்கும்.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
மூப்பனாரிடம் இருந்த வீச்சும் வேகமும்கூட வாசனுக்கு இல்லையே?
டெல்லி அரசியலில் கற்ற பாடத்தை வைத்து தமிழக அரசியலைக் கையாண்டவர் மூப்பனார். டெல்லியின் அரசியலைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக அரசியலில் தடுமாறுபவர் வாசன்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
குழந்தையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டி விடுவது என்றால்?
சிரியா -ஐ.எஸ்.தீவிரவாதம் -அமெரிக்கா -ரஷ்யா -ஐ.நா. இவற்றை உற்றுக் கவனியுங்கள்.
எம்.சுந்தரமூர்த்தி, செய்யாறு
அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்கிறார்களே?
அரசை நிர்வகிப்பவர்கள் அதை வைத்துக்கொண்டு பிழைப்பு நடத்தினால் தர்மதேவனே எமனாக மாறுவார் என்கிறது சிலப்பதிகாரம். அது உண்மையா என எடப்பாடி அரசைக் கேட்டுப் பாருங்களேன்.
ஆன்மிக அரசியல்
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
சித்தர்களை ஆன்மிகப் புரட்சியாளர்கள் என்று சொல்லலாமா?
சங்கத்தமிழ் எனும் பொற்காலம் மருவிய பிறகு, தமிழ் இலக்கியமும் தமிழ்ப் பண்பாட்டு மரபும் மெல்ல மெல்ல மாற்றம் பெற்று, வடபுலத்தின் ஆதிக்கத்திற்கு தமிழ்நாடு உள்ளானது. இந்திய அளவிலான சமண-பவுத்த சமயநெறிகளின் பரவலும் அவற்றிற்கு எதிராக ஆதிசங்கரர் போன்றவர்களால் முன்வைக்கப்பட்ட சமஸ்கிருத வேத-வைதீக பார்ப்பன மரபும் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தன. பல்லவர் காலத்தில் சமஸ்கிருதமே சகலமும் என்கிற நிலை உருவான நிலையில், தமிழில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் வகையில் சைவ-வைணவ பக்தி இலக்கியங்களை நாயன்மார்களும் ஆழ்வார்களும் வழங்கினார்கள். இதில் மொழிக்கான மறுமலர்ச்சி உருவானது. ஆனால், சமஸ்கிருத வழியிலான பண்பாடு, தமிழ் பக்தி இலக்கியங்கள் வழியாகவும் ஊடுருவி நின்றன. தமிழ் ஆன்மிகத் தளத்தில் சமஸ்கிருதமய பார்ப்பன சிந்தனைகளுக்கு எதிராக நின்றவர்கள் சித்தர்கள். சித்தம் என்பது அறிவு. அதனைக் கொண்டு பகுத்தறிந்து செயல்பட்டதால் "சித்தர்கள்' என்று அழைக்கப்பட்டனர். சித்தர்களின் வாழ்க்கை முறை கடுமையானதாக இருந்தாலும் அவர்களின் மருத்துவம், கணிதம், யோகம், தவம், தத்துவம், ஆன்மிகம் உள்ளிட்டவை தமிழர்களின் தனித்த அடையாளத்தையும், அது சமஸ்கிருத வழி பார்ப்பனியத்திற்கு எதிரானது என்பதையும் காட்டின. "நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?' என்கிற சித்தர் பாடல்கள் பார்ப்பனியத்தின் மீதான கருத்துரீதியான தாக்குதல்கள். இதுபோன்ற கருத்துகளைச் சொன்னதற்காக நேரடியான தாக்குதல்களை எதிர்கொண்ட சித்தர்களும் உண்டு. திருமூலரை முதன்மையாகக் கொண்ட சித்தர் மரபு, தமிழ் ஆன்மிக நெறியில் புரட்சிகரமான காலகட்டத்தை உருவாக்கியது.