வி.கார்மேகம், தேவகோட்டை
இந்தியாவில் 11 ஆண்டுகளாக முகேஷ்அம்பானி பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளாராமே! அரசியல்வாதிகளை இந்தப் பட்டியலில் சேர்ப்பதில்லையோ?
நேரடியாக ஈடுபடும் சொந்தத் தொழில் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகின்றனவாம். அரசியல்வாதிகளின் மறைமுக கணக்கைத் தோண்டினால் அம்பானிகளுக்கே ஆணிவேர் யார் எனத் தெரிந்துவிடும்.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
திராவிட இயக்கக் கொள்கைகள் பட்டுவிட்டனவா? நீர்த்துப் போயுள்ளனவா? அல்லது பெயரளவில் உலவுகின்றனவா?
1. பட்டுவிட்டது. ஆதிக்க மொழிக்கு எதிரான போராட்ட உணர்வு தமிழகத்தின் திராவிட இயக்கங்களிடம் மட்டுமின்றி மற்ற இயக்கங்கள் மீதும், பிற மாநிலங்கள் மீதும் பட்டுவிட்டது. அதனை மேற்குவங்கம் முதல் கர்நாடகம் வரை நடைபெறும் போராட்டங்களால் காண முடிகிறது. 2. நீர்த்துப் போயுள்ளது. சமூக நீதியை நிலைநாட்டுவதற்கான இடஒதுக்கீட்டுக்கான குரல் திராவிடக் கட்சிகளிடம் மட்டும் பனிக்கட்டி போல உறைந்திருந்த நிலை மாறி அது உருகி, நீர்த்து, வற்றாத ஆறாக அனைத்துக் கட்சிகளிலும் பெருகி, இந்தியா முழுவதும் ஓடிக்கொண்டிருக்கிறது. 3. பெயரளவில் உலவுகிறது. பெரியார் என்ற பெயரின் மூலம் திராவிடக் கட்சிகளைக் கடந்தும், மதம்-சாதி வேறுபாடுகளைக் கடந்தும், ஆத்திகர்-நாத்திகர் என்கிற நெறிகளைக் கடந்தும், ஆண்-பெண் என்ற பாகுபாட்டைக் கடந்தும் அனைவரின் உணர்விலும் உலவிக்கொண்டிருக்கிறது என்பதை அண்மையில் நாடே பார்த்தது.
ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்
சுதந்திரப் போராட்ட தியாகிகளால் உருவாக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி காணாமல் போய்விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறதே?
காங்கிரஸ் கட்சியை உருவாக்கியது தியாகிகளல்லர். ஆலன் ஆக்டேவியன் ஹியூம் என்ற வெள்ளைக்காரர், பிரிட்டிஷ் அதிகாரத்தில் இந்தியர்களுக்கான பங்களிப்பைக் கோரும் அமைப்பாகத்தான் காங்கிரஸ் உருவானது. காலத்தின் வளர்ச்சியில் அது சுயராச்சியக் கொள்கையை முன்னெடுத்து, விடுதலைக்கு வித்திட்டது. சுதந்திர இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு, முன்புபோலவே அதிகாரத்தில் தங்களுக்கான பங்களிப்பில் காங்கிரசார் தீவிர கவனம் செலுத்திய நிலையில், கட்சி அமைப்பையே கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவே இந்த அச்சம்.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
எடப்பாடி அரசு மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டை சுமத்துகிறாரே டி.டி.வி.தினகரன்?
கடையைக் கொஞ்சநேரம் பார்த்துக்கொள்ளச் சொன்ன முதலாளியிடமே, நான்தான் ஓனர் என சிப்பந்தி முறைப்புக் காட்டினால், கல்லாப் பெட்டியில் கை வைத்துவிட்டதாக சிப்பந்தி மீது முதலாளி குற்றம்சாட்டுவது பல ஊர்களிலும் பார்த்த கதைதானே.
லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)
சமீபத்திய வாய்பிளப்பு?
பெரியாரை அவமதித்த எச்சு.ராஜாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கேட்டார் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் நிறுவனர் பேராசிரியர் சுப.வீ. அதற்கு காவல் அதிகாரி, "ஆர்ப்பாட்டத்தில் எத்தனை பேர் கலந்துகொள்வார்கள்?' என்றார். "மானமுள்ள தமிழர்கள் எல்லோரும் கலந்துகொள்வார்கள்' என்று சுப.வீ. சொல்ல, "அனுமதி மட்டும் கொடுத்தால் போதுமா, கலந்துகொள்ளவும் வேண்டுமா?' என்பது போல வாய் பிளந்தது காவல்துறை.
வண்ணைகணேசன், பொன்னியம்மன்மேடு
இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென எம்.ஜி.ஆரைப் பற்றி புகழ்ந்து தள்ளி ஆச்சரியப்படுத்தியிருக்கிறாரே ரஜினி?
அவர் சொன்னதையெல்லாம் கேட்பதற்கு எம்.ஜி.ஆர். இருந்திருந்தால், அவருமே ஆச்சரியத்தில் ஷாக் ஆகியிருப்பார்.
நிவேதா வெங்கடேஷ், கோட்டயம்
சுவாமி விவேகானந்தர் கையில் எடுத்தது ஆன்மிகமா? அரசியலா?
1893-ல் அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற "உலக மதங்களுக்கான நாடாளுமன்றம்' என்கிற மாநாட்டில், இந்து மதத்தின் பெருமை குறித்து விவேகானந்தர் ஆற்றிய உரை உலகப் புகழ் பெற்றது. "இந்துயிசம்' என்ற தலைப்பில் சுவாமி விவேகானந்தர் உரையாற்றினாலும், உலகத்தின் பார்வையில் அது "பிராமணிசம்' என்றே கருதப்பட்டது. சொந்த நாட்டு நிலவரமும் அதுதான். பிராமணர்களின் பிடியிலிருந்து இந்துமதத்தை விடுவித்தால்தான் அது காலத்திற்கேற்ற வளர்ச்சியைப் பெறும் என்பதை உணர்ந்த விவேகானந்தர், இந்துமதத்தில் உள்ள பிராமண ஆதிக்கம் பற்றியும் சாதி ஏற்றத்தாழ்வு பற்றியும் கடுமையாகச் சாடியுள்ளார். வேதங்களையும் புராணங்களையும் பேசிக்கொண்டிருப்பதைவிட, ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை அவர் விரும்பினார். "கீதை படிப்பதைவிட கால்பந்து விளையாடலாம்' என்றார். இந்து மதத்தில் சீர்திருத்தம் செய்து, அதன் மூலம் பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான விடுதலை அரசியல் உணர்வை விதைத்தவர் விவேகானந்தர். கையில் கலப்பை பிடித்தவர்களால் புதிய இந்தியா எழட்டும். குடிசைகளிலிருந்து இந்தியா எழட்டும். தொழிற்சாலைகள், கடைவீதிகள், சந்தைகளிலிருந்து இந்தியா எழட்டும் என ஒடுக்கப்பட்ட மக்களை அரவணைத்து, "எனது வீர இளைஞர்களே.. செயலில் ஈடுபடத் தொடங்குங்கள். தேசமுன்னேற்றம் எனும் தேர்ச் சக்கரத்தைக் கிளப்புவதற்கு உங்கள் தோள்களைக் கொடுங்கள்'’என்றார். பிரிட்டிஷாருக்கு எதிரான விடுதலை உணர்ச்சி வளர்ந்து வந்த காலத்தில், ஆன்மிகத்திற்கான அரசியலையும் அரசியலுக்குள் ஆன்மிகத்தையும் சரிவிகிதத்தில் கையாண்டவர் சுவாமி விவேகானந்தர்.