ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை

"தமிழக அரசியல் களத்தில் பூக்கும் கவர்ச்சிகரமான காகிதப் பூக்கள் மணக்காது' என்கிறாரே தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின்?

மணக்காத பூக்களையும் உச்சந்தலையில் சூடிக்கொள்ளும் வழக்கம் இருப்பதை ஸ்டாலினும் அறிந்திருப்பார்.

ப.பாலா(எ)பாலசுப்பிரமணி, பாகாநத்தம்

Advertisment

5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க. ஆர்.கே.நகரில் "ஓட்டுக்கு நோட்டு இல்லை' எனச் சொல்லி, டெபாசிட்டை இழந்திருக்கும் நிலையில், "காசு கொடுத்து ஓட்டு வாங்க மாட்டோம்' என்கிற கமலின் "மக்கள் நீதி மய்யம்' பொதுமக்களிடம் எடுபடுமா?

நோட்டு கொடுக்காத தி.மு.க.வுக்கு டெபாசிட் போனது என்றால், புது 2000 ரூபாய் நோட்டுகளை தலைக்கு 3 எனக் கொடுத்த அ.தி.மு.க.வும் தோற்றுத்தானே போனது. டோக்கனை நம்பி தினகரனை ஜெயிக்க வைத்த மக்கள், தன் டயலாக்கையும் நம்புவார்கள் என கமல் நினைக்கலாம்.

durgastalin

Advertisment

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

கிணற்றில் போட்ட கல் போல கிடக்கும் தகவல் உரிமை ஆணையத்திற்கு மக்களின் வரிப்பணத்தை செலவிடுவது வீண்தானே?

அரசாங்கத்தை ஆள்வோரும் அதிகாரிகளும் மக்களின் வரிப்பணத்தை எப்படியெல்லாம் வீணடிக்கிறார்கள் என்பதை பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் சமூக ஆர்வலர்களால் பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்ட தகவல் உரிமை ஆணையம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கான அதிகாரிகளை நியமிப்பதிலும், தகவல்களை அளிப்பதிலும் நிலவும் அரசியலால், உரிய பலன் கிடைக்காமல் மக்களின் பணம் வீணடிக்கப்படுகிறது.

எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்

"ஜெயா டி.வி.', "நமது எம்.ஜி.ஆர்.' இதெல்லாம் தனது பெயரில் இருந்தால் சிக்கல் வரும் என்றுதானே ஜெயலலிதா அவற்றை சசிகலா குரூப்பிடம் மடைமாற்றம் செய்தார். அதுவே இப்போது அ.தி.மு.க.வுக்கு எதிராகிவிட்டதே?

எதிராகவில்லை. அ.தி.மு.க. யார் கையில் என்கிற அதிகாரப் போட்டியில், ஜெ. உருவாக்கிய ஆட்சி ஒரு தரப்பிடமும், அவர் உருவாக்கிய ஊடகங்கள் இன்னொரு தரப்பிடமும் இருக்கின்றன. ஆட்சி மாற்ற காலம்வரை போட்டி நீடிக்கும்.

தூயா, நெய்வேலி

மு.க.ஸ்டாலினின் மனைவி, மகன் என வரிசையாக மேடையேறுகிறார்களே?

மனைவி மேடையில் வீற்றிருக்க, அரங்கில் பார்வையாளர் வரிசையில் ஒருவராக மு.க.ஸ்டாலின் அமர்ந்திருந்த அந்த புத்தக வெளியீட்டு விழா பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தன் கணவரின் அரசியல் பணிக்கு என்றும் துணை நிற்பேன் எனப் புத்தகத்தை எழுதிய துர்கா ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். அதுபோலவே, மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவரது மகன் உதயநிதியும் கட்சி வளர்ச்சிக்குத் துணை நிற்பேன் என்கிறார். மாமனாரின் அரசியல் வியூகங்களுக்குப் பின்னணியாக மருமகன் இருக்கிறார். குடும்ப அரசியல் என்ற இமேஜை மாற்ற நினைக்கும் மு.க.ஸ்டாலினுக்குத் துணையாக இருப்பதாக உறுதியளித்துள்ள அவரது குடும்பத்தினர் எந்த எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டால் அது ஸ்டாலினுக்கும் கட்சிக்கும் பலம். எதிர்பார்ப்புகளின் எல்லை கடந்தால், அரசியல் களத்திலிருந்து மட்டுமல்ல, கலைஞர் குடும்பத்தின் மற்ற வழித்தோன்றல்களிடமிருந்தே நெருக்கடிகள் அதிகரிக்கும்.

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

பஞ்சம், வறுமை, பசி இந்த மூன்றும் வந்தால் ஜாதிகள் மறைந்து போய்விடுமா?

மூன்றும் நீடித்தால் மனித இனமே ஒழிந்துவிடும். மனிதன் இல்லையென்றால் ஜாதியும் மறைந்துதானே போகும்!

ஆன்மிக அரசியல்

வி.கார்மேகம், தேவகோட்டை

தமிழ்நாட்டில் ஆன்மிக அரசியலை முதன்முதலில் வெளிப்படையாக நடத்தியவர் ஜெயேந்திரர்தானே?

jayender

மன்னர்கள் ஆட்சிக்காலத்திலேயே ஆன்மிக அரசியல் வெறித்தனமாக இருந்துள்ளது. மாற்றுக் கருத்துகளைக் கொண்டவர்களை விரட்டித் துரத்தி கொலை செய்யும் அளவுக்கு செயல்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும், குறிப்பாகத் தமிழ்நாட்டில் திராவிட அரசியல் கட்சிகள் ஆட்சிக்கு வந்த பிறகும், ஆன்மிக அரசியலை காவி உடையுடன் வெளிப்படையாகப் பேசி, அதற்கான அமைப்புகளையும் தொடங்கியதில் ஜெயேந்திரருக்குத் தனி இடம் உண்டு. "ஜன் கல்யாண்' என்ற அவரது அமைப்பும் அதில் இடம்பெற்றிருந்தவர்களும் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் சனாதன-வருணாசிரமத்தை நிலைநாட்ட பெரும்பாடுபட்டனர். தமிழ்நாட்டில் இடஒதுக்கீடு வாயிலாக நிலைபெற்றுள்ள சமூக நீதிக் கொள்கையை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டனர். மகாபெரியவர் என்று அழைக்கப்பட்ட சந்திரசேகர சரஸ்வதி சங்கராச்சாரியார், இந்தியப் பிரதமராக இருந்த இந்திரா காந்தியை சந்திப்பதில்கூட ஆச்சாரத்தை முன்வைத்து தவிர்க்க நினைத்தவர். ஜெயேந்திரரோ பல பிரதமர்கள், ஜனாதிபதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்களின் அரசியல் ஆலோசனை மண்டபமாக காஞ்சி மடத்தை மாற்றினார். யாரை நாற்காலியில் உட்கார வைப்பது, யாரைத் தரையில் உட்கார வைப்பது என்பதன் மூலம் தனது ஆன்மிக அரசியலை அவர் வெளிப்படையாகவே செய்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதிலும் சமாதானப் பேச்சு என்ற பெயரில் அரசியல் செய்தார். சங்கரராமன் கொலை வழக்கில் அவர் கைதானதும், காஞ்சி சங்கர மடத்தின் அதிகார பீடம் தகர்ந்தது. அவரது இடத்தை கார்ப்பரேட் சாமியார்கள் போட்டி போட்டுக்கொண்டு கைப்பற்றி வருகிறார்கள்.