மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
காங்கிரஸ் எம்.பி. ரேணுகாசவுத்ரியின் சிரிப்பை சூர்ப்பனகையோடு ஒப்பிட்டுப் பேசி, பிரதமரே சர்ச்சையை உருவாக்கலாமா?
இராவணன் அரக்கன் -அவன் சகோதரி சூர்ப்பனகை அரக்கி என்பதே விந்தியமலைக்கு அப்பாலிருந்து இமயமலைவரை உள்ளவர்களின் பொதுப்பார்வை. அதனால்தான் ராமாயணத்தை ஆரிய-திராவிட யுத்தம் என பண்டித நேரு உள்ளிட்ட பலரும் கூறியுள்ளனர். அதே பார்வையுடன் குஜராத்தின் மோடி, ஆந்திராவின் ரேணுகா சவுத்ரியைப் பார்த்திருக்கிறார். ஆரிய-திராவிட யுத்தம் நீறு பூத்த நெருப்பு.
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
கட்சியில் யார் மீதும் நடவடிக்கை எடுக்க இயலாத சூழ்நிலைக் கைதிகளாக எடப்பாடியும் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்களா?
எந்த செங்கல்லை உருவினாலும் கட்டடம் சரிந்துவிடும் என்பது ஆட்சியில் இருக்கும் எடப்பாடியின் நிலைமை. எந்த செங்கல்லை உருவினால் வெற்றி வாசலுக்கான வழி தெரியும் என்பதை உணர்ந்து அதை உருவ வேண்டியது, ஆட்சிக்கு வர நினைக்கும் ஸ்டாலினின் கடமை.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ambekdar-periyar.jpg)
வி.கார்மேகம், தேவகோட்டை
"அரசியல் சட்டத்தை எரித்த பெரியாரின் படம் சட்டமன்றத்தில் இருக்கும்போது, ஜெயலலிதா படம் இருக்கக்கூடாதா' என பா.ஜ.க.வினர் கேட்கிறார்களே?
1957-ல் பெரியார் எரித்தார். அரசியல் சாசனத்தை உருவாக்கிய பிதாமகன் அம்பேத்கரே 1953-ல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசும்போது, "சிலர் நான்தான் இந்த அரசியல் சட்டத்தை ஏற்படுத்தினேன் என்கிறார்கள். நான்தான் அதனை நெருப்பிலிட்டுப் பொசுக்குவதற்கும் முதன்மையானவனாக இருப்பேன்' என்றார். மக்கள் நலன் காக்கப்படவேண்டும் என்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இவை. அரசியல் சட்டத்தை எரித்த பெரியாரும் அவரது தொண்டர்களும் அந்த சட்டத்தின் அடிப்படையில், "நீதிமன்றம் என்ன தண்டனை கொடுக்கிறதோ அதை ஏற்றுக்கொள்கிறோம்' என்று கூறி, வழக்காடாமல் சிறை சென்றவர்கள். வாய்தா வாங்கியவர்களில்லை. சட்டத்தை வளைக்க நினைத்தவர்கள் இல்லை. ஆட்சியையும் பதவியையும் பயன்படுத்திக் கொள்ளையடிப்பதற்காகவே தன் வீட்டில் மற்ற குற்றவாளிகளையும் சேர்த்து வைத்திருந்தார் எனக்கூறி உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஜெயலலிதாவைப் போல அரசுப் பணத்தை களவாடியவர்களல்லர். சட்டமன்றத்தில் உள்ள பெரியார்-அம்பேத்கர் படங்கள் அரசியல் சட்டத்திற்கான காலக் கண்ணாடிகள். ஜெயலலிதா படமோ அவமானச் சின்னம்.
ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்
உத்தரபிரதேசத்தைப் போல தமிழ்நாட்டிலும் ரவுடிகளை என்கவுன்ட்டரில் போட்டுத் தள்ளினால் என்ன?
அயோத்திக்குப்பம் வீரமணியிலிருந்து முட்டைரவி வரை என்கவுன்ட்டருக்குப் பலியான ரவுடிகள் பலரது பட்டியல் தமிழகத்திலும் இருக்கிறது. மனிதஉரிமை பற்றிய விழிப்புணர்வும் அதற்கான அமைப்புகளின் வளர்ச்சியும் தமிழக காவல்துறையை சைவப்பூனைகளாக்கி வைத்திருக்கின்றன. மீண்டும் கருவாடு வாசனைக்கு ஆட்பட்டு வேட்டையைத் தொடங்கினாலும் ஆச்சரியமில்லை.
கே.முரளி, புதுப்பெருங்களத்தூர்
"மத்திய அரசின் கிளை நிறுவனமாகத்தான் எடப்பாடி அரசு செயல்படுகிறது' என்கிறாரே தினகரன்?
அதையேதான் மக்களும் சொல்கிறார்கள் என்பதால்தான் இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் அவ்வப்போது உரிமைக்குரல் எழுப்பிப் பார்க்கிறார்கள். ஆனால் வார்த்தைகளுக்குப் பதில் வெறும் காத்துதான் வருகிறது.
கே.கே.பாலசுப்ரமணியம், பெங்களூரு-36
ரவுடிகளை மொத்தமாக மடக்கிய தமிழக காவல்துறைக்கு சல்யூட் வைத்த கையைக் கீழே இறக்குவதற்குள்... சிங்கார சென்னையில் சங்கிலி பறிப்பு நிகழ்ச்சிகள் நடந்திருப்பது குற்றவாளிகளுக்கு காவல்துறையிடம் பயமில்லை என்பதைத்தானே காட்டுகிறது?
போலீஸார் இன்னமும் வாக்கி-டாக்கி காலத்தில் இருக்கிறார்கள். குற்றவாளிகளோ வாட்ஸ்-அப் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறார்கள். இந்தத் தொழில்நுட்ப இடைவெளிதான் பயமில்லாததற்கு காரணம்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6
தமிழக அரசின்கீழ் இயங்கும் துறைகளில் லஞ்சம் வாங்காத ஒரு துறையை கண்டுபிடிக்க முடியுமா?
கண்டுபிடிக்க முடியாது. புதிதாக வேண்டுமானால் உருவாக்கலாம். அதுவும் அமைச்சரோ அதிகாரிகளோ இல்லாமல்!
| ஆன்மிக அரசியல் உமரி பொ.கணேசன், மும்பை-37 கோவில் நிர்வாகம் யாரிடம் இருப்பது சிறந்தது? ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி அதர்மத் துறையாக செயல்படுகிறது அறநிலையத்துறை எனக் கூறியுள்ளாரே ஹெச்.ராஜா? அறநிலையத்துறை மட்டுமா, மத்திய அரசின் நிர்வாகத்தில் இருக்கும் வங்கித் துறைகூட அதர்மமாக செயல்படுகிறது என்பதை பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த மோசடி அம்பலப்படுத்துகிறதே.. அரசு துறைகளுக்கே உரிய நிர்வாக சீர்கேடுகள் அறநிலையத்துறையிலும் இருக்கின்றன. அவற்றை சீர்ப்படுத்துவதில்தான் கவனம் செலுத்தவேண்டுமே தவிர, அரசின் பொறுப்பைத் தட்டிக்கழித்து அதானிகள்-அம்பானிகள் கையில் நிர்வாகத்தைக் கொடுக்க நினைப்பதுபோல ஹெச்.ராஜா வகையறாக்களிடம் கோவில்களை ஒப்படைக்கக்கூடாது. தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் 36 ஆயிரத்து 590 கோவில்கள் இருக்கின்றன. இவற்றிற்கான விளை நிலங்கள், நீர் நிலைகள், மனைகள் ஏராளம். மக்களின் உழைப்பாலும் அவர்கள் தந்த வரிப்பணத்தாலும் அன்றைய அரசர்கள் உருவாக்கிய கோவில்கள் என்பவை அரசு நிர்வாகத்திற்குரியவை. இவற்றையெல்லாம் ஒரு சிலரே ஆக்கிரமித்து அனுபவித்து வந்ததை மாற்றியதுதான் அறநிலையத்துறை. 1925-ல் நீதிக்கட்சி ஆட்சியில் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ் ஆட்சியில் கோவில் பாதுகாப்புக்கென தனித்துறையாக இந்து அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்துவதுபோல, அறநிலையத்துறையில் உள்ள கறையான்களுக்காக கோவில்களை தனியாரிடம் கொடுத்துவிடக்கூடாது. உரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். | 
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-18/ambekdar-periyar.jpg)