Skip to main content

மாவலி பதில்கள்

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

ஜெயலலிதா வாரிசாக்க நினைத்த அ.தி.முக.. தலைவர் யார்?

அவர் உயிருடன் இருந்தவரை, போயஸ் கார்டனில் உள்ள அவரது அறையில் இருந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் தினந்தோறும் அந்தத் தலைவரைப் பார்த்துக்கொண்டிருந்தாராம்.

தூயா, நெய்வேலி

அரசியல்வாதிகள் நடத்தும் போராட்டங்களெல்லாம் வெறும் நடிப்பா?

எல்லாவற்றுக்கும் தொலைநோக்குப் பார்வையிலான லாபக்கணக்கு ஒன்று இருப்பதால், அரசியல்வாதிகளின் போராட்டங்கள் பலவும் மேக்கப் இல்லாத நடிப்பாக மக்களால் பார்க்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தர வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் போராடும் தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களில் ஒருவரான நரமல்லி சிவபிரசாத், ஒவ்வொருநாளும் ஒரு வேடமிட்டு வந்து, நடிப்புக் கலையையே போராட்ட வடிவமாக மாற்றியிருக்கிறார். நடிகராக இருந்து அரசியல்வாதியான சிவபிரசாத், நாடாளுமன்றத்திற்கு அம்பேத்கர், கிருஷ்ணர், நாரதர், விசுவாமித்ரர், கோடாங்கி, விவசாயி, திருநங்கை, பள்ளி மாணவர் என ஒவ்வொருநாளும் புதுப்புது வேடத்தில் வந்து தனது மாநிலத்திற்கான உரிமைக்குரலை எழுப்புகிறார். தமிழ்நாட்டை ஆளும் அரசியல்வாதிகளோ மத்திய அரசின் இயக்கத்திற்கேற்ப நடிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

கே.முரளி, புதுப்பெருங்களத்தூர்

மறைந்த எம்.நடராஜனால் பலன் அடைந்த அ.தி.மு.க.வினர் ஒருவர்கூட அவருக்கு அஞ்சலி செலுத்தவோ இரங்கல் தெரிவிக்கவோ இல்லையே?

அடைந்த பலன்களுக்கு நன்றி காட்டினால், அடைந்துகொண்டிருக்கும் பலன்கள் பறிபோய்விடுமே!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை

சமீபத்தில் தங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய அரசியல் பேச்சு எது?

இலட்சக்கணக்கான தொண்டர்களை இரண்டு நாள் ஓரிடத்தில் திரட்டிவைத்து, 60-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் கட்சியின் சொற்பொழிவாளர்கள் மூலம் கொள்கை வகுப்பு எடுத்த தி.மு.க.வின் ஈரோடு மண்டல மாநாட்டில் பேசிய, நட்சத்திரப் பேச்சாளர்கள் முதல் இளம் பேச்சாளர்கள் வரையிலான பலரது அரசியல் பேச்சுகளும், இந்த பரபர இணையதளயுகத்திலும் இத்தனைப் பேரை பேச்சால் கட்டிப்போட முடியுமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தின.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொள்ளாத எம்.பி.க்களுக்கு ஊதியம் தரக்கூடாது' என தில்லி பா.ஜக. தலைவர் மனோஜ் திவாரி சொல்லியிருப்பது சரிதானே?

ரொம்ப சரி! அதுபோல, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத எம்.பிக்கள், அமைச்சர்கள், பிரதமர் உள்ளிட்டோர் அடுத்த தேர்தலில் நிற்க முடியாது என அறிவித்துவிட்டால் இன்னும் பிரமாதமாக இருக்கும்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

சூப்பர் ஸ்டார் ரஜினி அடிக்கடி இமயமலை சென்றுவிடுவதால் அவரை "எவரெஸ்ட் ஸ்டார்' என்று அழைக்கலாமா?

மலைச் சிகரங்களிலேயே எவரெஸ்ட்தான் சூப்பர் என்பதால், சூப்பர் ஸ்டார் என்பதே நீடிக்கலாம்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

"தமிழகத்தில் பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள் வளர்ந்து வருகின்றன' என்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தொடர்ந்து எச்சரிக்கிறாரே?

"தமிழ்நாட்டில் பா.ஜ.க. வளர்ந்து வருகிறது' என்கிறார் மாநிலத் தலைவர் தமிழிசை. "அதனை சீண்டினால் தமிழகம் தாங்காது' என்றும் சொல்கிறார். இந்த நிலையில், மத்தியஅமைச்சர் பயங்கரவாத முகாம்கள் பற்றிப் பேசுவது கவனிக்கக்கூடிய ஒன்றுதான்.

-------------------------

ஆன்மிக அரசியல்

ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்

ஆன்மிக அரசியலுக்கும் மாட்டிறைச்சிக்கும் சம்பந்தம் உண்டா?

மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த மதத்தின் பெயரால் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களோ, அந்த மதத்திற்கு அந்தப் பெயர் வருவதற்கு முன்பான வேத காலத்தில் பசுமாட்டு இறைச்சி என்பது யாகத்திலும் விருந்திலும் முக்கியமானதாக இருந்திருக்கிறது என்பதை அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்கள் ஆய்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். பொது யாகங்களில் மேற்கொள்ளப்படும் "அக்னதேயா' என்ற சடங்கில் பசு பலியிடப்பட்டுள்ளது. மன்னர்களின் புகழ்பெற்ற யாகங்களில் ஒன்றாகக் கருதப்படும் அஸ்வமேத யாகத்தில் குதிரை உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விலங்குகளும் பறவைகளும் பலியிடப்பட்டன. அந்த யாகத்தின் நிறைவில் 21 பசுக்களை பலி கொடுப்பது வழக்கமாக இருந்துள்ளன. மனு தொகுத்த ஸ்மிருதியிலும், யக்ஞவல்க்யர் ஸ்மிருதியிலும் பசு பலி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஷ்ரோத்ரயா என்ற வேதமறிந்த பிராமணர்களுக்கு பெரிய மாடு ஒன்றை பலியிட்டு வரவேற்பளிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வேத மதத்தின் வருணாசிரமக் கொள்கைக்கு எதிராக உருவான ஜைன, பௌத்த மதங்களின் வளர்ச்சியும் அவை கடைப்பிடித்த உயிர்களைக் கொல்லாமைக் கோட்பாடும் வேத மதத்திலும் பிற்காலத்தில் மாற்றங்களை உருவாக்கியது. விலங்குகளைப் பலியிட்டு யாகம் நடத்தி, விருந்து வைத்து சோமபானம் அருந்திய சமூகத்தினர் அகிம்சை பேசி, சைவ உணவுக்கு மாறினர். நிலவுடைமைச் சமுதாயம் உருவான நிலையில், விவசாயம் சார்ந்த வாழ்வியலில் பசுவுக்கு இருந்த பொருளாதார மதிப்பு, அதனை புனித பிம்பமாக மாற்றியது. இந்த நீண்ட அரசியலின் பின்னணியில்தான், அரிவாள் தூக்கியபடி திரியும் ஆன்மிக அமைப்பினர், மாட்டிறைச்சி சாப்பிடக்கூடாது எனக் கூறியபடி மனிதர்களை வேட்டையாடுகிறார்கள்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்