/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavalianswer.jpg)
அ.குணசேகரன், புவனகிரி
டாஸ்மாக் லாபத்தில் பலன் அரசாங்கத்துக்கு, போக்குவரத்து நட்டத்தின் சுமை மக்களுக்கு என இரட்டை அளவுகோலை எடப்பாடி அரசு கையாள்வது நியாயமா?
அநியாயம்தான். அதற்கு இன்னொரு பெயர், அரசாங்க நியாயம்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"ஊழலை சரி செய்ய விரும்புகிறவர்கள் மட்டுமே அரசியலுக்கு வரவேண்டும்' என்று ராகவா லாரன்ஸ் கூறுவது?
மிகச் சரியானது. அப்படியே நீதிபதி குன்ஹா தீர்ப்பு தந்தபிறகு, "தெய்வத்தை மனிதன் தண்டிக்கலாமா' எனக் கேட்டு இவரது அரசியல் ஆசான் உள்பட பல நடிகர்களும் பங்கேற்ற ஊழல் ஆதரவு உண்ணாவிரதத்தில் சாரும் பங்கேற்றாரா என்பதையும் தெளிவுபடுத்திவிட்டால் ரொம்ப நல்லது.
த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்
தமிழகத்தில் தமிழை யார்தான் வளர்க்கிறார்கள்?
"குழா(ய்) தண்ணி' பிடிக்கப்போகும் சென்னைவாசியிலிருந்து, "உறங்கலையா' எனக் கேட்கும் கன்னியாகுமரிவாசி வரையிலான பொதுமக்கள்.
வி.கார்மேகம், தேவகோட்டை
"பா.ஜ.க ஆட்சியில் விளம்பரம் அதிகம் -செயல்பாடு குறைவு' என்கிறாரே சோனியா?
அவருக்குப் புரிந்த உண்மையை, அவருக்கும் தலைவராகிவிட்ட ராகுல்காந்தி புரிந்துகொண்டு அரசியல் செய்யவேண்டுமே!
நித்திலா, தேவதானப்பட்டி
காதலைச் சொல்லும் ஆற்றல் எந்த மொழிக்கு சிறப்பாக இருக்கிறது?
மொழியே தேவையில்லை என்பதை, கண் பேசும் வார்த்தைகளால் புருவத்தை உயர வைத்து அசத்திக் காட்டிவிட்டாரே ப்ரியா வாரியர்!
எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்
அன்றைய ஜானகி அணிபோல இன்றைய ஆளுந்தரப்பு ஆகிவிட்டதா?
ஜானகி அணிக்கு அன்றைய மத்திய அரசின் ஆதரவு வாய்க்கவில்லை. அதனால் அற்பாயுசில் முடிந்துவிட்டது. இன்றைய ஆளுந்தரப்புக்கு மத்திய அரசுடன் விட்டகுறை தொட்டகுறை உறவு நீடிப்பதால், நித்திய கண்டமாக இருந்தாலும் ஆட்சி நீடிக்கிறது.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
உத்தரகாண்ட் முதல்வர் கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு மட்டும் 60 லட்ச ரூபாய் அரசுப் பணத்தை செலவு செய்துள்ளாராமே?
ஆட்சிக்கு வந்தால் அரசாங்கப் பணத்தை "சாப்பிடலாம்' என்பதற்கு தன்னை முன்னுதாரணமாகக் காட்டவேண்டும் என முடிவு செய்துவிட்டார் போல.
ப.பாலா (எ) பாலசுப்பிரமணி, பாகாநத்தம்
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு வேதனையில் உள்ள அ.தி.மு.க. தொண்டர்கள் ரஜினி, கமல் ஆகியோரில் ஒருவரை மாற்றுத் தலைவராக ஏற்றுக்கொள்வார்களா?
மாற்றுத்தலைவராக நினைப்பவர்களின் அரசியல் கணக்கு அது. தலைமையை இழந்த தொண்டர்களின் மனக்கணக்கின் விடை தேர்தலில் தெரியும்.
மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
கட்சிக்காக உழைத்த சத்ருகன் சின்ஹாவை பா.ஜ.க. ஓரம்கட்டி வைத்துள்ளதே?
ஓரம் கட்டலையாம். யஷ்வந்த் சின்ஹா, முரளிமனோகர் ஜோஷி, அத்வானி ஆகியோருக்குத் துணையாக இருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாம்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
உதயநிதி ஸ்டாலினின் அரசியல் பிரவேசம் தி.மு.க.வுக்கு பலமா, பலவீனமா?
சோதனை.
ஆன்மிக அரசியல் அம்மன் சரவணன், பரமக்குடி "இந்தியா ஒளிர்வதற்கு ஆன்மிக சக்தியே காரணம்' என்று நடிகர் விவேக் பிரம்மாகுமாரிகள் சங்கத்தின் பனிலிங்கம்-ஜோதிர்லிங்கம் தரிசன நிகழ்ச்சியில் பேசியிருக்கிறாரே? ஏராளமான பிரச்சினைகளுக்கு நடுவில் இந்தியா ஒளிர்வதற்கு ஆன்மிக சக்தியே காரணம் என்று விவேக் சொல்லியிருக்கிறார். பனிபடர்ந்த இமயமலையில் பல நூறாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த ரிஷிகளும், தென்றல் வீசும் பொதிகை மலையில் பலகாலம் வாழ்ந்த சித்தர்களும் இந்திய நிலப்பரப்பின் சிறப்புகளில் ஒன்றாக இருந்தவர்கள் என்பதை மறுப்பதற்கில்லை. அவர்கள் முன்வைத்த கடுமையான வாழ்க்கை முறை என்பது ஆயுள் நீடிப்பதற்கான இயற்கை மருத்துவம். ஆனால், அது சராசரி மனிதர்களுக்குச் சாத்தியமானதில்லை. அதுவும் வேறெந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு பிறப்பினாலேயே பேதம் கற்பிக்கும் சாதி முறைகள் உள்ள இந்தியாவில் பிரச்சினைகளுக்கு அளவேயில்லை. வருணாசிரமத்தைத் தகர்க்காத ஆன்மிக சக்தி, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதில் பிரச்சினைகளை அதிகமாக்கிவிடுகிறது. முனிவர்கள் முன்வைத்த ஆன்மிக சக்தியைவிட, சராசரி மக்களுக்கிடையிலான பேதமற்ற அன்புநெறியும், அவர்களை ஆளுகின்ற அரசுகள் மேற்கொள்ளும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகளுமே இந்தியா ஒளிர்வதற்கு அடிப்படைக் காரணம். அன்பு இல்லாமல் தியானம்-யோகம்-ஆன்மிகம் எக்ஸட்ராக்களால் எந்தப் பிரச்சினையும் தீராது. வேண்டுமானால் பிரம்மாகுமாரிகளின் மினியேச்சர் பனிலிங்கமும்-ஜோதிர்லிங்கமும் ஒளிரலாம். |
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02-15/mavalianswer-n.jpg)