mavalianswers

உமரி. பொ.கணேசன், மும்பை-37

Advertisment

விமான நிலையங்களுக்கு தலைவர்கள் பெயரை வைப்பதைவிட அந்த ஊர்ப்பெயரை வைக்கலாம்தானே?

தலைவர்கள் பெயர் வைத்தாலும் ஊர்ப் பெயரைச் சொல்வதுதானே வழக்கமாக இருக்கிறது. சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் உள்நாட்டு முனையத்திற்கு காமராஜர் பெயரும் வைக்கப்பட்டன. ஆனால், ஊடகங்கள் உள்பட பலரும் குறிப்பிடுவது மீனம்பாக்கம் விமானநிலையத்தில் மீண்டும் கண்ணாடி உடைந்து விழுந்தது என்றுதானே!

த.சிவாஜி மூக்கையா, தர்க்காஸ்

"நாம் தமிழர் கட்சி' சீமானும் "சமத்துவ மக்கள் கட்சி' சரத்குமாரும் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்திருக்கிறார்களே?

Advertisment

சரத்குமாருக்கு பிரதமராக வேண்டும் என்று ஆசை. அதை அவரே வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். சீமானுக்கு தன்னாட்சி கொண்ட தமிழ்த்தேசம் உருவாக்க விருப்பம். அந்த தேசத்திற்கு பிரதமர் என்ற கணக்கில் இணைந்து செயல்பட முடிவெடுத்திருக்கலாம்.

mavali

நித்திலா, தேவதானப்பட்டி

"பகோடா விற்பது கேவலமா?' எனக் கேட்கிறாரே தமிழிசை சவுந்தரராஜன்?

டீ விற்றவர் முதல்வராகவும் பிரதமராகவும் முடியும் என்கிற தன்னம்பிக்கை விதைக்கப்பட்டுள்ள மண்ணில், பகோடா விற்பது கேவலம் அல்ல. பட்டதாரிகளுக்கு உருவாக்கித் தருவதாகச் சொன்ன வேலை வாய்ப்பு எங்கே என மத்திய அரசை நோக்கி எதிர்க்கட்சிகளால் எழுப்பப்பட்ட கேள்விக்கு, "பகோடா விற்பதுகூட வேலைதான்' என்ற அலட்சியமான பதில் பிரதமர் மோடியிடமிருந்து வெளிப்பட்டது. அமித்ஷா அதை வழிமொழிந்தார். கர்நாடகத்தில் மோடி பிரச்சாரம் செய்தபோது, அருகிலேயே பட்டதாரிகள் பகோடா கடை போட்டனர். அவர்கள் எந்த வேலையையும் கேவலமாக நினைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்க்கிறார்கள். தமிழிசை சிபாரிசு செய்து, மோடி சொன்ன 15 லட்சத்தை இளைஞர்களின் அக்கவுண்ட்டில் போட்டுவிட்டால் அவர்கள் ஏற்கெனவே தயாரித்துள்ள "மோடி பகோடா', "அமித்ஷா பகோடா'வுடன், "தமிழிசை ஸ்பெஷல் பகோடா'வும் போட்டு அசத்திவிடுவார்கள்.

ஆர்.கார்த்திகேயன், நகரி

Advertisment

"தமிழக அரசியலில் கால் பதிக்கும் எண்ணமில்லை' என்று நடிகை விஜயசாந்தி பேட்டியளித்துள்ளாரே? அவரது அரசியல் எப்படி?

எண்ணமில்லையா? ஏற்கெனவே கால் பதிக்க முன்வந்திருப்பவர்களால் ஆந்திர மாநில அரசியல்வாதி நடிகையான விஜயசாந்திக்கு இங்கே இடமில்லையா? "எந்தக் கட்சியில் இருந்தாலும் தன் அரசியல் ரோல்மாடல் ஜெயலலிதாதான்' என்றவர் விஜயசாந்தி. இறுதிவரை குற்றவாளி என நிலைநாட்டுவது அவருடைய அரசியலாக இருக்கலாம்.

முஹம்மது ரபீக் ரஷாத், விழுப்புரம்

மறைந்த க்யூபாவின் அதிபர் மகன் தற்கொலை செய்து கொண்டுள்ளது குறித்து...?

ஆயுதப் புரட்சி மூலம் கியூபா நாட்டை விடுவித்தவர் ஃபிடல் காஸ்ட்ரோ. ஜனநாயக எழுச்சி மூலம் தமிழ்நாட்டை உருவாக்கியவர் அறிஞர் அண்ணா. முன்னவரின் மகன் டியார்ஜ் பலார்ட்டும், பின்னவரின் வளர்ப்பு மகன் பரிமளமும் தற்கொலை செய்துகொண்டது வேதனையான ஒற்றுமை. இருவரின் புதல்வர்களுமே அரசியல் அதிகாரத்தை நாடவில்லை என்பது முக்கியமானது. நாட்டு மக்கள் நலனில் உண்மையான அக்கறை கொண்ட தலைவர்களுக்கு வீட்டு மக்கள் நலன் இரண்டாம்பட்சம்தான்.

தூயா, நெய்வேலி

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க தி.மு.க. சார்பில் 1 கோடி நிதியளித்த ஸ்டாலினின் செயல்பாடு?

வின்னிங் ஷாட்டை சிக்ஸராக அடிக்கும் டோனி பாணியில், ஹார்வர்டு பல்கலை தமிழ் இருக்கைக்காக பல தரப்பிலும் நிதி குவிந்து வந்த நிலையில், கடைசியாகத் தேவைப்பட்ட 1 கோடியை ஒரே நிதியளிப்பில் நிறைவு செய்திருக்கிறார் ஸ்டாலின். அதே நேரத்தில், அவரது தந்தை முயற்சித்துப் பெற்ற செம்மொழித்தமிழ் ஆய்வு நிறுவனத்தை வலுப்படுத்தும் சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொண்டால், இத்தகைய இருக்கைகளுக்கு நிதி திரட்ட வேண்டிய அவசியமும் இருக்காது என்பது முக்கியமானது

சு.வெங்கடேஷ், கோட்டயம்?

எடப்பாடியின் ஓராண்டு...?

"சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்... நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்' என்கிறார் தர்மயுத்த நாயகன்.

ஆன்மிக அரசியல்

சபரிநாதமுருகேஸ்வரி, திருவேற்காடு

கோயில்களை வணிகத்தலங்களாகப் பயன்படுத்துவது சரியா?

கோயில்களும் கோயில் திருவிழாக்களும் அப்பகுதிகளில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களின் வாழ்வியலுடன் தொடர்புடையவை. வாழ்வியலில் வணிகமும் அடக்கம். தமிழ் இலக்கியங்களில் சுட்டிக்காட்டப்படும் கோவில் திருவிழாக்களில் மஞ்சள்-குங்குமம் முதல் பலவகை வாசனைப் பொருட்கள், உணவுதானியங்கள், விளையாட்டுக் கருவிகள், அலங்கார நகைகள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டிருப்பதை அறிய முடியும். இதுபோக மேலும் பல தொழில்களும் கோவில்களை மையமாக வைத்து நடந்திருப்பதை இலக்கியமும் வரலாறும் கல்வெட்டுகளும் காட்டுகின்றன. தற்போது மதுரை மீனாட்சியம்மன் கோவில் தீ விபத்துக்கு அங்கிருந்த கடைகள்தான் காரணம் என்பதால், கோவில்களை வணிகமயமாக்கலாமா என்ற கேள்வி அதிகமாகக் கேட்கப்படுகிறது. கோவிலின் சிறப்பை அறநிலையத்துறையினரும், பிற மதங்களைச் சார்ந்த வணிகர்களும் சீரழித்துவிட்டதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. அறநிலையத்துறை அதிகாரிகள் அத்தனைபேரும் யோக்கிய சிகாமணிகள் அல்ல. அதேநேரத்தில், அவர்கள் மட்டுமே அயோக்கியர்கள் என்பதுபோல சித்திரிப்பது, மதவாத அரசியலுக்கான விதை. காசுக்கேற்ப தரிசன நேரத்தை நிர்ணயிக்கும் நிர்வாகம் முதல், தட்சணைக்கேற்ப பிரசாதம் தரும் அர்ச்சகர்கள்வரை கடவுளின் பெயரால் அனைத்து நிலைகளிலும் வணிகக் கொள்ளை தொடர்கிறது. ஒட்டுமொத்தமாக இவற்றை சீர்ப்படுத்த வேண்டிய நேரம் இது.