பல்கலைக்கழகத்தில் ஆவிகள்!
ஜெ.வுக்காக அ.தி.மு.க.வினர் தருமபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக்கொன்றார்களே... அந்த மாணவிகளின் ஆவிகள் இன்னும் அந்த பேருந்துக்குள் அலைந்துகொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள் கோவை வேளாண் பல்கலை ஊழியர்கள்.
தீவைத்துக் கொளுத்தப்பட்ட அந்தப் பேருந்தை, கோவை வேளாண்மைப் பல்கலை வளாகத்திற்குள்தான் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். அதற்குள்ளிருந்து இரவு நேரங்களில் மாணவிகளின் அலறல் சத்தமும், வேதனை தாங்காமல் அழுகின்ற சத்தமும், கொலுசு ஒலியும், சாபம் கொடுக்கும் ஆவேச சத்தமும் கேட்கிறதாம்.
உண்மைதானா? அலுவலகப் பணியாளர் ஒருவரிடம் கேட்டோம். ""அட நீங்க வேற... ஒருநாள் நைட்ல, மெயின் கேட்ல வாட்ச்மேனைக் காணலை. மறுநாள் தனது அறைக்கு அந்த வாட்ச்மேனை வரவச்சு அதிகாரி விசாரிச்சாரு. "அந்த பஸ்சுக்குள்ள அந்த மாணவிகளின் நடமாட்டம் அதிகமாயிருச்சு, அதுக்குப் பயந்துதான் வேற ஒரு இடத்தில் உட்கார்ந்து இருந்தேன்'னு சமாளிச்சிருக்காரு... அந்த சமாளிப்புதான் இப்ப பல்கலைக்கழகம் முழுக்கப் பரவிக்கிடக்கு'' என்றார் அவர்.
-அருள்குமார்
தி.மு.க. மாநாட்டுக்கு அ.தி.மு.க. நிதி!
"தி.மு.க. மண்டல மாநாட்டுக்கு ஆளுங்கட்சித் தரப்பிலிருந்தே நிதி தரப்பட்டிருக்கிறது' என்கிற விறுவிறு டாக் சேலம்-ஈரோடு மாவட்டங்களில் அடிபடுகிறது. 2016 தேர்தலில் எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி, தி.மு.க. வேட்பாளரான முருகேசனை தோற்கடித்தார். ஆனால் தனது வெற்றியை விட்டுக்கொடுக்க தி.மு.க. வேட்பாளர் எடப்பாடியிடம் "3 சி'’ வாங்கிக்கொண்டார்னு அப்ப பேச்சு கிளம்புச்சு. அந்த முருகேசன், எடப்பாடியின் நெருங்கிய நண்பர் என்பதால் இந்த பேச்சு பரவியது. இப்ப அந்த முருகேசன், தி.மு.க. .மாநாட்டிற்காக முதல்வர் எடப்பாடியிடம் இருந்தும் அமைச்சர் தங்கமணியிடம் இருந்தும் "2 சி' வரை நிதி வசூலித்ததாக ஆளுங்கட்சியினரே சொல்ல... தி.மு.க. தரப்பு, "இதெல்லாம் யாரோ கிளப்பிவிடுற வதந்தி. மாநாட்டு வெற்றியை ஆளுந்தரப்பால் பொறுத்துக்க முடியலை' என்கிறது.
-தாமோதரன் பிரகாஷ்
எம்.எல்.ஏ.க்கள் Vs இணைப்பதிவாளர்!
கூட்டுறவு சங்கத் தேர்தலி அ.தி.மு.க.வினருக்கு உடந்தையாக அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதைக் கண்டித்து குமரி மாவட்டத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள், தி.மு.க. சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், காங்கிரஸ் பிரின்ஸ், ராஜேஷ்குமார், விஜயதாரணி ஆகியோர் குமரி மாவட்ட கூட்டுறவு இணை பதிவாளர் நடுக்காட்டுராஜாவை முற்றுகையிட்டனர்.
இணை பதிவாளரோ, எம்.எல்.ஏ.க்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. மிகஅலட்சியமாக கால்மேல் கால் போட்டபடி, கோப்புகளை அக்கறையோடு பார்ப்பதுபோல நாடகம் நடத்திக்கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.க்கள், இணை பதிவாளரை ஒருமையில் திட்ட... வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் எம்.எல்.ஏ.க்கள் மீது போலீசில் புகார் கொடுத்தார் நடுக்காட்டுராஜா. இந்த நிலையில் வி.சி. கட்சியின் குமரி மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவரை சந்தித்த அ.தி.மு.க. எம்.பி. விஜயகுமார், "எம்.எல்.ஏ.க்கள் எல்லோரும் சாதி பேரைச் சொல்லி நடுக்காட்டுராஜாவை கேவலமாக திட்டினார்கள்' என்று உசுப்பிவிட்டுள்ளாராம்.
-மணிகண்டன்
மேலாளரை மேய்க்கும் சூப்பர்வைசர்!
தஞ்சை மாவட்ட டாஸ்மாக்கிற்கு யார் மேலாளர் ஆகவேண்டும் என்பதை சூப்பர்வைசர் பாபு என்பவர்தான் நிர்ணயிக்கிறார். பாபுவை பகைத்துக்கொள்ளும் மேலாளர் அடுத்த ஒருவாரத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுவிடுகிறாராம்.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாபு, இப்போது தஞ்சை மாவட்டம் திருவையாறில் வசிக்கிறார். இவர் விருப்பப்படி பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமு, பூங்கோதை, தற்போதைய மேலாளர் திருஞானம் என எல்லோருமே பெரம்பலூர் மாவட்டத்துக்காரர்கள்தான்.
தஞ்சை மாவட்டத்தில் பார் நடத்துவதற்கு யாரும் அப்ளை செய்யவில்லை. ""அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். பார் நடத்துங்க... ஆனால் கொடுக்க வேண்டியதை மாதம் முடியுமுன்ன ஒழுங்கா கொடுத்திடணும்'' என்று உத்தரவிட்டு, சக சூப்பர்வைசர்களான சுந்தரமூர்த்தி, துளசியய்யா, சச்சிதானந்தம், வெள்ளையப்பன் ஆகிய நால்வரையும் அனுப்பி மாமூலை கலெக்ஷன் செய்து மாவட்ட மேலாளருக்குரிய பங்கை கொடுத்துவிடுகிறாராம் பாபு.
-செம்பருத்தி
மூவரைக் கொன்ற விஷவாயு!
வேலூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த மிட்டாளத்தில் மாருதி லெதர் தொழிற்சாலை உள்ளது. இதன் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக 27-3-18 அன்று இறங்கிய தொழிற்சாலைப் பணியாளர்கள் கிருஷ்ணாபுரம் ரங்கநாதன், மிட்டாளம் புதுக்காலனி செல்வம், பந்தேரப்பள்ளி கோதண்டன் மூவரையும் கெமிக்கல் விஷவாயு தாக்கி கொன்றுவிட்டது. மூவரின் உடல்களையும் ஆம்பூர் அரசு மருத்துவமனைகளில் வைத்திருந்தனர்.
விஷவாயுவால் கொல்லப்பட்ட ரங்கநாதனின் மகள் ஸ்வேதா 10-ஆம் வகுப்பு மாணவி. அன்று ஆங்கிலம் முதல்தாள் தேர்வு. உடல்கூறு ஆய்வுக்காக கிடத்தப்பட்டிருந்த தந்தையின் உடலைப் பார்த்து ""இன்ஜினியர் ஆக்கிப் பார்க்கணும்னு ஆசைப்பட்டியேப்பா... இனி யாருக்காக நான் படிக்கணும் அப்பா... அப்பா...'' அந்த மாணவி கதறிய கதறல் கூடியிருந்த அத்தனைபேரையும் கதறவைத்தது.
ஸ்வோதாவை தேர்வெழுத அனுப்புவதற்கு உறவினர்கள், நண்பர்கள், சக மாணவிகள் அத்தனைபேரும் மன்றாடவேண்டியிருந்தது. அழுதழுது முகம் வீங்கி விழிகள் சிவக்க தேர்வுக்காக இழுத்துச் செல்லப்பட்டார் ஸ்வேதா.
-து.ராஜா