Skip to main content

கூத்து!

அமைச்சர் ஆட்களின் அட்டகாசம்!


பாலாற்று மணலை கொள்ளையடிக்கும் லாரிகள் பாலநாங்குப்பம், வாணியம்பாடி வழியாக சாரை சாரையாக கடத்துவதை தடுக்கக்கூடாதா? வி.ஏ.ஓ. ஆனந்தனிடம் புகார் செய்தார் சமத்துவப்படை கட்சியின் மாவட்ட நிர்வாகி சிவக்குமார். ஆனால் நடவடிக்கை இல்லை.

அடுத்தவாரம் மணல் கடத்திவந்த டிப்பர் லாரி ஒன்றைப் பிடித்து வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பிவைத்தார் வி.ஏ.ஓ. ஆனந்தன்.

வாணியம்பாடி அ.தி.மு.க. ந.செ. சதாசிவமும் முன்னாள் கவுன்சிலர் மணியும் தாசில்தாரை சந்தித்தார்கள். ""இது அமைச்சர் வீரமணியோட லாரி... உடனே ரிலீஸ் பண்ணுங்க'' என்று சொல்லி டிப்பர் லாரியை மணலோடு மீட்டுச் சென்றார்கள். அதே இரவில் வாணியம்பாடி போலீசார் சமத்துவப்படை சிவக்குமார் வீட்டுக்குச் சென்றார்கள். மணல் வண்டியை மிரட்டி மடக்கி கடத்த முயன்றதாகக் கூறி சிவக்குமாரை கைது செய்து சிறைக்கு அனுப்பியுள்ளனர்.

-சிங்

கவர்னருடன் தி.மு.க. கலகலப்பு!

bookrelease


எம்.ஜி.ஆரால் அரசியலில் உச்சம் பெற்றவர் வேலூர் வி.ஐ.டி. விஸ்வ நாதன். அதனால்தான், அரசாங்கத்தை விட சிறப்பாக, எம்.ஜி.ஆர். நூற்றாண்டுவிழாவை, இரண்டு நாட்கள் தனது பல்கலை வளாகத்தில் நடத்தினார்.

இதற்கு ஒருவாரம் முன்னர் ""மூன்று எழுத்து அதிசயம் எம்.ஜி.ஆர்.'' என்று, தான் எழுதிய நூலை, தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித்தை அழைத்து வெளியிட வைத்தார் விஸ்வ நாதன்.

அவ்விழாவில் அமைச்சர் கள் வீரமணி, நிலோபர் கபில், சேவூர் ராமச்சந்திரன், எம்.பி. ஹரி ஆகிய ஆளும் கட்சியினரும், தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் ராணிப்பேட்டை காந்தி, அணைக் கட்டு நந்தகுமார், வேலூர் கார்த்தி என எதிர்க்கட்சியினரும் கலந்துகொண்டனர்.

தி.மு.க.வினர் ஆளுநருடன் நெருக்கமாக, இயல்பாக உரை யாடிக்கொண்டிருந்தது பலருக் கும் வியப்பாக இருந்தது. ""வேலூருக்கு ஆய்வுக்கு வந்தார், எதிர்த்தோம். இப்போது விழா விற்கு வந்திருக்கிறார், சகஜமாகப் பேசிக்கொண்டிருந்தோம். உரிமையில் தலையிடும்போது மட்டுமே எதிர்ப்பைக் காட்டு வோம்'' -தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சொன்னார்கள்.

-து.ராஜா

விருதுக்குப் பிறகு சேவை!

mlA

தமிழகத்தின் சிறந்த பெண் எம்.எல். ஏ.வுக்கான மகளிர் தின விருதினை திருவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. அ.தி. மு.க. சந்திரபிரபாவுக்கு வழங்கி சிறப்பு செய்துள் ளது திருவனந்தபுரம் ரோட்டரி கிளப்.

இந்தச் செய்தி திருவில்லிபுத்தூர் மக்களுக்கு வியப்பை ஏற்படுத்திவிட்டது. அப்படி என்னதான் சாதனை செய்தார் நம்ம எம்.எல்.ஏ. என்று தங்க ளுக்குள் வெம்பினார்கள்.

இந்தச் சமயத்தில்தான் திருவில்லிபுத்தூர் நகராட்சி, தாறுமாறாக வீட்டுவரியை உயர்த்தியது. 500 ரூபாய் வரியை 5,500 ஆகவும், 1,000 ரூபாய் வரியை 11 ஆயிரம் ரூபாயாகவும், சுமார் 11 மடங்கு உயர்த்தி விட்டது. அதைக்கூட இந்த ஆண்டிலிருந்து உயர்த்தாமல் 2011-ஆம் ஆண்டிலிருந்து உயர்த்திவிட்டதாகக் கூறி ஒவ்வொருவரும் 70 ஆயிரம் 80 ஆயிரம் அரியர்ஸ் கட்ட வேண்டும் என்று ஓலை அனுப்பியது நகராட்சி நிர்வாகம்.

இந்தப் பிரச்சினையை கையில் எடுத்த எம்.எல்.ஏ. சந்திரபிரபா, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாக ஆணையரைச் சந்தித்து தொகுதி மக்களின் குமுறலைக் கூறி, ஆறரை வருட அரியர்ஸ் வரியை ரத்து செய்ய வைத்து, "சிறந்த எம்.எல்.ஏ.' என்ற பெயரை உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

-ராம்கி

ஆணையர் படுத்தும் பாடு!

நெல்லை மாவட்டம் தென்காசி நகராட்சியின் ஆணையர் ஏசுராஜன் தனக்கு வேண்டிய காண்ட்ராக்டருக்கு டெண்டர் ஒதுக்கியதையும், அதை எதிர்த்த மற்ற காண்ட்ராக் டர்களை மிரட்டுவதற்கு கட்சிக் காரர்களை அனுப்பியதையும் "உனக்காகவா, இல்லை எனக் காகவா?' எனும் தலைப்பில் "கூத்து' பகுதியில் பிப்ரவரி 10-12 இதழில் வெளியிட்டிருந்தோம்.

நக்கீரன் செய்தியைக் கவனித்த உள்ளாட்சித்துறை, தென்காசி ஆணையராக இருந்த ஏசுராஜனை பண்ருட்டிக்கு பணி மாறுதல் செய்தது. ஆனாலும் ஏசுராஜன் தென்காசியை விட்டுச் செல்ல விருப்பமின்றி "இருபத் தஞ்சு "எல்'லானாலும் பரவா யில்லை, இங்கேயே இருப்பதற் காக முயல்கிறேன்' என்று அதற் கான முயற்சிகளில் இறங்கினார். ஏசுராஜனுக்காக தொகுதி எம்.எல்.ஏ. செல்வமோகன்தாஸ் பாண்டியனும் மெனக்கெடு கிறாராம்.

"ஏசுராஜன் மீண்டும் தென்காசி ஆணையரானால் போராட்டம் வெடிக்கும்' என நகர் முழுக்க போஸ்டர் ஒட்டி அசத்தியிருக்கிறார்கள் இந்து மக்கள் கட்சியினர்.

-பரமசிவன்

மந்திரி முன்னால் அடிதடி!

OSmanianவேதாரண்யம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான ஓ.எஸ். மணியன்.

""கூட்டம்னா எல்லாரும் வர்றோம். ஆனால் சேர்மன் சசிகலா கணவர் சரவணன் மட்டும் எப்பவும் லேட்டா வர்றார். ஒன்றிய துணைச் செயலாளர் என்பதை மறந்து விடுகிறார்'' என்று ஒருவர் சொல்ல... அருகில் இருந்த ந.செ. எழிலரசு, ""சேர்மன் காலம் முடிஞ்சு ஒரு வருஷம் ஆகப்போகுது. இன்னமும் சேர்மன்னு ஏன்யா சொல்றீங்க. அந்த ஆளும், தன் கார்ல இன்னமும் சேர்மன்னு போட்டுக்கினு தான் சுத்துறாரு'' என்று குறை கூறினார்.

இதை யாரோ செல்போனில் சரவணனுக்கு கூறிவிட்டார்கள். அடுத்த அரைமணி நேரத்தில் ஐந்தாறு ஆட்களுடன் அங்கே வந்த து.ஒ.செ. சரவணன், ந.செ.எழிலரசுவின் சட்டையைப் பிடித்தார். அப்புறமென்ன... அடிதடி, மல்லுக்கட்டுதான். இதைப் பார்த்த அமைச்சர், அவசர அவசரமாக வெளியேறிவிட்டார்.

-க.செல்வகுமார்
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்