து தமிழ்நாடுதானா... இப்படியே நீடித்துவிடுமா என கலவரமடைந்திருக்கிறது கர்நாடகா. தமிழகத்துக்கு கர்நாடகம் தரவேண்டிய காவிரி நீரின் அளவை குறைத்து உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தமிழகத்தை அதிர்ச்சியடைய வைத்தது. உடனே, அனைத்துக்கட்சி கூட்டத்தைக் கூட்டி ஒற்றுமையாக விவாதித்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை வலிமையாக முன்னெடுக்க வேண்டும் என்பதே அனைத்து அரசியல் கட்சிகள் -விவசாய சங்கங்களின் கோரிக்கையாக எழுந்தன.

Advertisment

ஜெ. ஆட்சி செய்தவரை அனைத்துக் கட்சிக் கூட்டம் என்பது அவசியமற்றதாகவே கருதப்பட்டு வந்தது. அவர் வழிநடக்கும் எடப்பாடி அரசு மீதும் நம்பிக்கையில்லாத காரணத்தால், தி.மு.க. தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார் எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின். அதேசமயம், உயரதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "அரசு சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும்' என அறிவித்து 39 அரசியல் கட்சிகள், 19 விவசாய சங்கங்கள், காவிரிக்காக போராடிவரும் 8 பொதுநல அமைப்புகள் என அனைத்திற்கும் கடிதம் அனுப்பியது ஆரோக்கியமான திருப்பம்.

Advertisment

allpartymeet

தலைமைச் செயலகத்தில் 22-ந்தேதி நடந்த கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அனைவரும் ஆஜராகியிருந்தனர். காலை 10.30-க்கு தொடங்கி மதியம் 1:30 மணிக்கு முடித்துவிட திட்டமிட்டிருந்தார் எடப்பாடி. கூட்டம் 2 மணிவரை நீடித்தும் பேச வேண்டியவர்களின் எண்ணிக்கை அதிகமிருந்ததால் உணவு இடைவெளிக்காக ஒத்தி வைத்தனர். உணவுக்குப் பிறகும் கூட்டம் தொடர்ந்து நடக்க, இதனை கர்நாடகா மட்டுமல்ல மத்திய அரசும் உன்னிப்பாகக் கவனித்தது.

கூட்டத்தின் முடிவில், விவாதத்தில் முன்வைக்கப்பட்ட அனைவரின் கருத்துகளையும் பிரதிபலிக்கும் வகையில், தமிழகத்திற்கான பங்கீட்டு நீரை உரியகாலத்தில் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து அதிகாரங்களையும் உள்ளடக்கிய காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவை 6 வாரத்திற்குள் மத்திய அரசு அமைக்கவேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறைக்கப்பட்ட 14.75 டி.எம்.சி. நீரை திரும்பப் பெறுவதற்கேற்ப சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும், முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாயசங்கத் தலைவர்கள், எம்.பி.க்கள் அடங்கிய குழுவுடன் பிரதமரை சந்தித்து மேற்கண்ட 2 தீர்மானங்களையும் வலியுறுத்த வேண்டும் என மூன்று தீர்மானங்களை நிறைவேற்றினர்.

Advertisment

all0partymeetகூட்டம் குறித்து தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர் வேல்முருகனிடம் பேசியபோது, ""காவிரி விசயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டி மாறுபட்ட கருத்துகளையே முன்வைத்து எப்போதும் தீர்வுகாண முடியாத விமர்சனங்களாகவே தமிழக அரசியல் இருந்து வந்ததற்கு நேர்மாறாக இருந்தது அனைத்துக்கட்சிக் கூட்டம். எல்லோருடைய குரல்களும் ஒற்றுமையாக எதிரொலித்தன. யாரும் யாரையும் குறை கூறியோ, குற்றஞ்சாட்டியோ பேசவில்லை. ஆளும்கட்சி சார்பில் பேசிய முதல்வர் எடப்பாடியும் துணைமுதல்வர் ஓ.பி.எஸ்.சும் தங்களது அரசு எடுத்த முயற்சிகளை பட்டியலிட்டதோடு, "காவிரி விசயத்தில் நமது உரிமையைப் பெற அனைத்துக்கட்சிகளும் என்ன நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்துகின்றனவோ அதனை அரசு ஏற்கும்' என சொல்லிய அவர்களின் அணுகுமுறை ஆரோக்கியமாக இருந்தது. அதேபோன்ற அணுகுமுறையைத்தான் எதிர்க்கட்சிகளும் விவசாய சங்கங்களும் கடைப்பிடித்தன. அவற்றை அரசும் ஏற்று தீர்மானம் நிறைவேற்றியது. தமிழகத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டமென்றாலே மத்திய அரசும் கர்நாடக அரசும் காமெடியாகவே பார்த்துவந்த நிலையில், கருத்து வேற்றுமைகளை புறம்தள்ளி ஓரணியில் அனைவரும் இணைந்து வலிமையாக கரம் கோர்த்திருப்பதைக்கண்டு அவை அதிர்ச்சியடைந்துள்ளன. பிரதமரை சந்தித்து தீர்மானங்களை விரைந்து நிறைவேற்ற உத்தரவாதம் பெறுவதில்தான் இருக்கிறது அனைத்துக்கட்சிக் கூட்டத்தின் வெற்றி'' என்கிறார் அழுத்தமாக.

கூட்டத்தில் வெவ்வேறு கோணத்திலும் சில கருத்துகளைத் தலைவர்கள் முன்வைத்துள்ளனர். குறிப்பாக, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், ""மத்திய பா.ஜ.க. அரசில் அங்கம் வகித்தாலும் மாநில உரிமைகளுக்காக பிரதமரோடு மல்லுக்கட்டுகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு. "கூட்டணியை முறித்துக்கொள்வேன்' என மிரட்டவும் செய்கிறார். ஆளும் கட்சியில் 50 எம்.பி.க்கள் இருக்கும் நிலையில் சந்திரபாபு நாயுடுவின் யோசனையைக் கேட்டு அவரோடு இணைந்துகூட நமது உரிமைகளுக்காக பிரதமரிடம் அரசு போராடலாம்... தப்பில்லை''‘என்றபோது கூட்டம் கலகலப்பானது. அதேபோல, ""குறிப்பிட்ட காலத்துக்குள் நமது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றத் தவறினால் தமிழக எம்.பி.க்கள் (அ.தி.மு.க.-50, தி.மு.க.-4, பா.ம.க.-1, பா.ஜ.க.-1 ) அனைவரும் ராஜினாமா செய்ய வேண்டும்''’’என்றார் திருமாவளவன். பா.ஜ.க. தலைவர் தமிழிசையும் ""அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்போம்'' என்றார்.

உணவு விருந்தின்போது, மு.க.ஸ்டாலின் தொடங்கி அனைத்து தலைவர்களையும் நட்புடன் அணுகி இயல்பாக எடப்பாடி பழனிச்சாமி பேசியதில் எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி! துரைமுருகனின் வழக்கமான கலகலப்பு இந்த கூட்டத்திலும் எதிரொலித்தது. கூட்டத்தின் இறுதியில், பிரதமரை டெல்லி சென்று சந்திப்பது ஒருபுறமிருந்தாலும், 24-ந் தேதி சென்னைவரும் பிரதமரை கவர்னர் மாளிகையிலேயே சந்தித்துப் பேசலாமே என முன்னணி தலைவர்கள் சிலர் வைத்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட எடப்பாடி, அதற்கான முயற்சியையும் வேகமாக எடுத்தார்.

தமிழக அரசியல் கட்சிகள் படைத்துள்ள இந்த முன்னுதாரணம், உறுதியாகத் தொடர்ந்தால், தமிழ்நாட்டின் நலன்மீது கை வைக்க நினைப்போரை அதிரவைக்கும்.

-இரா.இளையசெல்வன்