kaveri-issue

மாற்றத்தில் இருக்கிறார்கள் தமிழகத்தின் காவிரி டெல்டா விவசாயிகள். நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பில் நிர்ணயிக்கப்பட்ட நீரின் அளவும் குறைக்கப்பட்டதால் கோபம் வெளிப்படுகிறது. காவிரி தொடர்பான வழக்கை ஆண்டுக்கணக்கில் விசாரித்த உச்சநீதிமன்றம், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீரை அதிகமாக கொடுத்துள்ளது.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்களிடம் பேசினோம்.

supremecourt""எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இந்த வழக்கில் சீரியசாக வாதாடவில்லை. அரசு பிரதிநிதித்துவப்படுத்திய பிரபல வழக்கறிஞரான சேகர் நப்டே தேவையான வாதங்களை முன்வைக்கவில்லை. அவரது வாதங்களை நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் பெரியதாகக் குறிப்பிடவில்லை. சேகர் நப்டே, சுப்ரீம்கோர்ட்டில் ஜெ.வுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்காக வாதாடியவர். அந்த வழக்கில் ஜெ.வுக்கும் சசிகலாவுக்கும் எதிராக தீர்ப்பெழுதிய நீதிபதியான அமித்தவராய், சேகர் நப்டேவின் வாதத்தை எப்படிப் புறக்கணித்தாரோ, அதேபோல் இந்த வழக்கிலும் சேகர் நப்டேவை நீதிபதி அமித்தவராய் புறக்கணித்திருக்கிறார்.

Advertisment

அதே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெ.வுக்காக ஆஜரான பாலிநாரிமன்தான் கர்நாடகத் தரப்பில் காவிரி வழக்கில் ஆஜரானவர். அவரது வாதத்தையும் தீபக்மிஸ்ரா, அமித்தவராய் கன்வில்கர் அடங்கிய பெஞ்ச் புறக்கணித்துள்ளது.

காவிரி வழக்கில் கர்நாடகத்திற்காக நாரிமன்தான் தொடர்ந்து வழக்கு நடத்திவருகிறார். ஏற்கெனவே நடுவர் நீதிமன்றத்தில் இவரது வாதத்தை தமிழகத்தில் முறியடித்தவர் மோகன் பராசரன். காவிரி வழக்கில் தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சீனியர் பராசரன், ஜூனியர் பராசரன் ஆகியோர்தான் பாலிநாரிமன் மற்றும் ஜூனியர் நரிமன் வாதத்தை எதிர்த்து தமிழகத்திற்காக வாதாடியவர்க்ள். பராசரனுடன்இணைந்து காவிரி வழக்கில் வாதாடிய சி.எஸ். வைத்யநாதனை, நடுவர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா அப்பீல் செய்தபோது தமிழகத்தின் சார்பில் வாதாட ஜெ. நியமித்தார். நடுவர் நீதிமன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடத் தடையில்லை என சுப்ரீம்கோர்ட் அறிவித்தது. அந்த உத்தரவை சுப்ரீம்கோர்ட் பிறப்பிக்கும்போது சி.எஸ்.வைத்யநாதன் வேறொரு வழக்கில் வாதிட்டுக்கொண்டிருந்தார் என்ற தகவல் ஜெ.வுக்கு கிடைக்க... அவரை மாற்றிவிட்டு சசிகலாவின் வழக்கறிஞரான சேகர் நப்டேவை நியமித்தார் ஜெ.

Advertisment

judges

ஜெ.வுக்குப் பின் ஆட்சிக்கு வந்த ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் சேகர் நப்டேவை, சசிகலாவின் வழக்கறிஞர் என்பதை முன்வைத்துக்கூட மாற்றவில்லை என வழக்கறிஞர் விஷயத்தில் தமிழகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவை விளக்குகிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

மைசூர் மகாராஜாவை ஏமாற்றி அன்றிருந்த சென்னை மாகாண அரசு 1892-ல் ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தம் செல்லாது என்பது கர்நாடகத் தரப்பில் ஆஜரான நாரிமனின் அழுத்தமான வாதங்களில் ஒன்று.

1924-ல் இன்னொரு ஒப்பந்தம் போடப்பட்டது. அது 50 வருடம் கழித்து 1974-ல் காலாவதியானது எனக்கூறி இந்த இரண்டு ஒப்பந்தங்களையும் கர்நாடகா கடைசிவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அத்துடன் நடுவர் மன்றம் தமிழகத்திற்கு வழங்கிய 192 டி.எம்.சி. தண்ணீரை 122 டி.எம்.சி.யாக குறைக்க வேண்டும் என கர்நாடகா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. "காவிரி என்பது கர்நாடகத்திற்குச் சொந்தம். தண்ணீர் திறந்துவிடுவது கர்நாடகத்தின் உரிமை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் கட்டுப்பாட்டு கமிட்டி என எதையும் மத்திய அரசு அமைத்து, காவிரி மேல் கை வைக்கக்கூடாது' என ஆக்ரோஷமாக கர்நாடகா வாதிட்டது. எனினும் நாரிமனின் வாதங்களை முற்றிலுமாக நிராகரித்துவிட்டது சுப்ரீம்கோர்ட்.

காவிரி என்பது கர்நாடகத்தின் சொத்து அல்ல... அது ஒரு தேசிய சொத்து. காவிரி நீரை பகிர்ந்துகொள்ள 1892-லும் 1924-லும் போடப்பட்ட ஒப்பந்தங்கள் சட்டரீதியானவை. காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதற்காக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை காலதாமதமின்றி 6 வார காலத்திற்குள் அமைக்க வேண்டும் என தமிழகம் முன்வைத்த கோரிக்கைகளை சுப்ரீம்கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது'' என சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழ்பேசும் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

தமிழக காவிரிப் பகுதியின் நிலத்தடிநீர் நிலவரம் அறிய ஜா என்பவரை அனுப்பிவைத்தது நடுவர்மன்றம். அவர் எவ்வளவு நிலத்தடிநீர் காவிரிப் படுகையில் இருக்கிறது என்பதை நடுவர் மன்றத்திடம் சரியாகச் சொல்லவில்லை. எனவே நிலத்தடிநீரை கணக்கில் கொள்ளாமல் தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் என நடுவர்மன்றம் தீர்ப்பளித்தது. அதே நேரத்தில் பெங்களூரு நகரம் தனது தண்ணீர் தேவைக்கு தமிழகத்தின் காவிரி நீரைப் பறிக்காமல் தனது நிலத்தடி நீரை பயன்படுத்தலாம் என தமிழக அரசு வாதம் செய்தது. இதை கணக்கில் கொண்ட உச்சநீதிமன்றம், "நிலத்தடி நீர் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்று' என குறிப்பிட்டு, காவிரிப் படுகையில் உள்ள 20 டி.எம்.சி. நிலத்தடி நீரில் 10 டி.எம்.சி.யை விவசாயத்திற்குப் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என தமிழகத்திற்கு ஏற்கெனவே நடுவர் மன்றம் அளித்ததில் 10 டி.எம்.சி.யை குறைத்தது என்கிறார்கள் சுப்ரீம்கோர்ட் வழக்கறிஞர்கள்.

தமிழக அரசின் வழக்கறிஞர் நியமன அரசியல், காவிரியில் வாழ்வாதார உரிமைகளைப் பறித்திருந்தாலும், நதிநீர் எல்லோருக்கும் சொந்தம் என்பதும், மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதும் தமிழகத்திற்குச் சாதகமானவை. அதை எப்படி, எப்போது, யார் செயல்படுத்தப்போகிறார்கள்?

-தாமோதரன் பிரகாஷ்