/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/music.jpg)
இசைப்பல்கலைக்கழகத் துணைவேந்தர் நியமனம் விவாதப் பொருளாகி விட்டது. இது இசை-கவின் பல்கலைக்கழகம் என்பதால் ஓவியம், சிற்பம், மண்பாண்டம் செய்தல்வரை இந்த மண்ணின் கலைகள் அனைத்தும் பயிற்றுவிக்கப்படவேண்டும் என்று நக்கீரனிடம் தெரிவித்தார், துணைவேந்தர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்று புறக்கணிக்கப்பட்ட இசைக்கலைஞர் புஷ்பவனம் குப்புசாமி.
இந்நிலையில், தமிழறிஞரும் கல்வி வல்லுநருமான இலக்குவனார் திருவள்ளுவனைத் தொடர்பு கொண்டோம். இவர் கலை பண்பாட்டுத் துறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய பொழுது இவர் அனுப்பிய திட்டத்தின் அடிப்படையில்தான் இசை -கவின்கலைப் பல்கலைக்கழகத்தை அரசு அமைத்தது. மாவட்டந்தோறும் கலைமன்றங்களும் சிறுவர் மன்றங்களும் 17 மாவட்டங்களில் இசைப்பள்ளிகளும் அமைக்கவும், இசைப்பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கவும் பெரும் பங்கு வகித்தவர்.
''இசை -கவின்கலைப் பல்கலைக்கழகம், இசை வளர்ச்சிக்கானது மட்டுமல்ல, சிற்பக்கலை, ஓவியக்கலை முதலான கவின்கலைகளுக்கும் சேர்த்தே உருவாக்கப்பட்டது. பிற நாட்டுக் கவின்கலைப் பல்கலைக்கழகங்களின் அமைப்புகளை ஆராய்ந்தே திட்டமிடப்பட்டது. இசைத்துறையைச் சேர்ந்த வீணை காயத்திரி இதன் முதல் துணைவேந்தராக நியமிக்கப் பெற்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/thiruvaluvar.jpg) சிறந்த வீணை இசைக்கலைஞராக இருந்தாலும் அவரால் கவின்கலைகளின் வளர்ச்சிக்கோ நிருவாக அமைப்பிற்கோ ஒன்றும் செய்ய இயலவில்லை. அம்பேத்கர் படத்தை வகுப்பறையில் மாட்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளை மாற்றவும் அமைச்சரை நீக்கவும் பயன்படுத்திய செல்வாக்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தவறிவிட்டார்.
சிறந்த வீணை இசைக்கலைஞராக இருந்தாலும் அவரால் கவின்கலைகளின் வளர்ச்சிக்கோ நிருவாக அமைப்பிற்கோ ஒன்றும் செய்ய இயலவில்லை. அம்பேத்கர் படத்தை வகுப்பறையில் மாட்டிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அதிகாரிகளை மாற்றவும் அமைச்சரை நீக்கவும் பயன்படுத்திய செல்வாக்கைப் பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்தத் தவறிவிட்டார்.
இவரது பணிக்காலம் முடிந்தவுடன் சிலர் அளித்த தவறான நம்பிக்கையால் நீட்டிப்பு கிடைக்கும் எனக் காத்திருந்தார். ஆனால் ஏமாற்றமடைந்து மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு சென்றுவிட்டார். அதுபோன்றே, துணைவேந்தர் நியமனங்களின்பொழுது ஒருவருக்கு மேற்பட்டவர்களிடம் விவரம் கேட்பதுண்டு. இதனாலேயோ விவரத்தை நேரில் அளிக்கும்பொழுது உற்சாகமாகப் பேசுவதாலேயோ தனக்குத்தான் பதவி எனத் தவறாக கருதக்கூடாது. புஷ்பவனம் குப்புசாமி சிறந்த நாட்டுப்புறக் கலைஞர். அவரது திறமையை அரசு பயன்படுத்த வேண்டும். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர், செயலர் பதவிகள் காலியாக உள்ளன. அவற்றில் ஒன்றில் இவரை நியமிக்க வேண்டும்.
இயல் இசை நாடக மன்றம், இசைக்கல்லூரிகளின் அறிவுரைஞர், இசைப் பள்ளிகளின் அறிவுரைஞர் ஆகியவற்றுக்குத் திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்களையே நியமிக்கும் தவறான மரபை அரசு பின்பற்றுகிறது.
தமிழ்நாட்டில் இசைக் கலைகளும் கவின்கலைகளும் வளர்ச்சியுறத் தனித்தனிப் பல்கலைக்கழகங்கள் தேவை. எனவே, இசைப் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும். அதுவரை சுழற்சி முறையில் இசைத்துறையில் இருந்தும் கவின்கலைத்துறையில் இருந்தும் துணை வேந்தர்களை நியமிக்க வேண்டும்'' என்கிறார் இலக்குவனார் திருவள்ளுவன்.
-கீரன்
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2018-02/thiruvaluvar.jpg)