கமலுக்கு அரசு போட்ட தடை !

அண்ணா பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தோல் தொழில்நுட்ப துறை சார்பில் மார்ச் 22 முதல் 24 ஆகிய தினங்களில் 5000 பேர் வரை பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவரும் கலந்துகொள்ள சம்மதிக்கவே ஏற்பாடுகள் நடைபெற்று இருக்கிறது. இந்த நிலையில் நிகழ்ச்சி நடைபெற இருந்த தினத்தன்று நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக நிர்வாகம் தடை போட்டு இருக்கிறது. இதனால் மாணவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருக்கிறார்கள். அரசு தரப்பிடமிருந்து "கமலை அழைத்து நிகழ்ச்சியை நடத்தக் கூடாது' என்று உத்தரவு வந்ததாக பல்கலைக்கழக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

Advertisment

-சி.ஜீவாபாரதி

சசிகலா விருப்பம்! தினகரன் போராட்டம்!

dinakaranfasting

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி டி.டி.வி. தினகரன் தலைமையில் அ.ம.மு.க.வின் சார்பில் தஞ்சையில் பெரியளவில் உண்ணாவிரதம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை திலகர் திடல் முழுவதும் பந்தல் போடப்பட்டு இருக்கிறது. மாநிலம் முழுவதும் இருந்து 7 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்று இருக்கிறார்கள். உண்ணாவிரத பந்தலுக்கு வருவதற்கு முன்னர் பொறுப்பாளர்கள் சசிகலாவை சந்தித்திருக்கிறார்கள். உண்ணாவிரதத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ""விரைவில் நீதிமன்ற தீர்ப்பு வர இருக்கிறது நிச்சயம் சாதகமான தீர்ப்பு வரும்'' என்ற ரீதியில் பேசினார்கள். நடராஜனின் மரணத்தால் 19 ஆம் தேதி தினகரனின் நெடுவாசல் பயணம் ரத்து செய்யப்பட்டது. அதே நேரத்தில், தஞ்சையில் கூடும் கூட்டத்தை சசிகலா பார்க்க வேண்டும் என்பதால் திட்டமிட்டபடி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று இருக்கிறது. இந்த போராட்டத்தை திவாகரன் தரப்போ, விவேக் தரப்போ யாருமே கண்டு கொள்ளவில்லையாம். விவசாய சங்கங்களை சேர்ந்த அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர். எந்தக் கட்சிக்கு உரிமை கோருகிறாரோ அந்தக் கட்சியின் ஆட்சியை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்து அரசியல் போராட்டக் களத்தில் வேகம் காட்டியிருக்கிறார் தினகரன்.

Advertisment

-பகத்சிங்