நான்கு ஆண்டுகளாக நடத்தப்படாமலிருந்த கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளின் மாநாட்டை தலைமைச் செயலகத்தில் நடத்தி முடித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி.
அதிகாரிகளுக்கு விருந்து வைத்தும் இயல்பாகப் பேசியும் அசத்திய எடப்பாடி, ஜெ. பாணியில் கோபமும் காட்டினார் என்கி றார்கள் மாநாட்டில் கலந்து கொண்ட அதிகாரிகள். தனித்தனியாக நடந்த விவாதங்களின் போது அதிகாரிகளிட மிருந்து குற்றச்சாட்டுகளும் வெடித்திருக்கின்றன. இதனை எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் கெஞ்சுகிற தொனியில் சமாளித்திருக்கிறார்கள். அதிகாரிகளை வரவேற்றுப்பேசிய தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மாநாட்டின் நோக்கம் குறித்து சுருக்கமாக விளக்கினார்.
மாநாடு குறித்து அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசியபோது, ""அமைச்சர்களை அதிகாரிகள் மதிப்பதில்லை. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளிடையே ஒற்றுமை யில்லை. இதனால் அரசு நிர்வாக மும் சட்ட ஒழுங்கும் ரொம்பவுமே பாதித்திருக்கிறது என்கிற குற்றச் சாட்டுகள் அண்மைக்காலமாக முதல்வர் எடப்பாடியிடம் அதிக அளவில் குவிந்தன. அதே சமயம், மத்திய அரசின் பிடியில் தமிழக அரசு இருப்பதும், பெரும்பான்மையில்லாத அரசாக இருப்பதும் அதிகாரிகளிடம் அரசு மீது பயமில்லாத நிலையை உருவாக்கியுள்ளது எனவும் எடப்பாடியிடம் சொல் லப்பட்டது. கவர்னர் புரோஹித்தும் இவைகளை தனது ஆய்வில் உணர்ந்து அரசை எச்சரிக்கையும் செய்திருக்கிறார்'' என்றனர்.
தொடர்ந்து நம்மிடம் பேசிய அவர்கள், ’மாநாட்டின் முதல் நாளில் முதல்வர் பேசியதை சுட்டிக்காட்டினர். "" "கலெக்டர்களும் காவல்துறை அதிகாரிகளும் ஒற்றுமையாக இருந்து பணியாற்றி னால்தான் சட்டம்-ஒழுங்கு அமைதியாக இருக்கும். ஆனா, வளர்ச்சித்திட்டங்களைக் கவனிப்பது மட்டும்தான் என்னுடைய பொறுப்புன்னு கலெக்டர்களும், சட்டம் ஒழுங்கைப் பார்ப்பது மட்டும்தான் என்னுடைய வேலைன்னு காவல்துறை அதிகாரிகளும் செயல்படுகிறீர்கள்.
சட்டம்- ஒழுங்கு பிரச்சனைகளை முன்கூட்டி தெரிந்துகொள்ளும் வகையில் புலனாய்வை மேம் படுத்தி, குற்றங்களை தடுப்பதில் கவனம் செலுத்துங் கள். பயங்கரவாதமும் மதவாதமும் இடதுசாரி தீவிரவாதமும் நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கு துன்னு உளவுத்துறையினர் தகவல் தருகின்றனர். போதை பொருட்கள் நடமாட்டமும் குறையவில்லை. இனி எந்த பகுதியில் குற்றங்கள் நடந்தாலும் அந் தந்த பகுதியின் அதிகாரிகள்தான் பொறுப்பு. ஏதோ காரணங்களுக்காக எல்லோரும் தனித்தனியாக இயங்குகிறீர்கள். அது என்னன்னு எங்களுக்குத் தெரி யும். அதெல்லாம் தெரிந்தும் அமைதியாக இருப் போம் என நினைக்காதீர்கள். இரு தரப்பும் இரு துருவங்களாக விலகியிருக்காமல் இணைந்து செயல்பட வேண்டும்' என்றெல்லாம் எச்சரிக்கும் தொனியில் கோபம் கலந்து பேசினார்'' என விளக் கியவர்கள், ""குற்றங்களுக்கு அதிகாரிகள்தான் கார ணம் என்பது போன்ற முதல்வரின் பேச்சை மாநாட் டில் பங்கேற்றிருந்தவர்கள் ரசிக்கவில்லை'' என்றனர்.
இரண்டாம் நாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுட னும் மூன்றாம் நாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளுடனும் விவாதித்தார் எடப்பாடி பழனிச்சாமி. முதல்நாளை விட இரண்டாம் நாள் எடப்பாடியின் தொனி மாறியிருந்தது. ஐ.ஏ.எஸ்.களுக்கு மத்தியில் பேசிய அவர், ""போலீஸ் அதிகாரிகள் மீது ஏகப்பட்ட புகார்கள் வருது. ஆளாளுக்கு ஒரு தோரணையில் நடந்துகொள்கிறார்கள். ஒழுங்காகச் செயல்படுவதே இல்லை. இதனை நேரடியாக சொல்லாமல் பொதுவாக சொல்வதற்காகத்தான் நேற்று அப்படிப் பேசினேன். உங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் கிடையாது. அரசுக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள். நல்ல ஆட்சியை நாங்கள் தருகிறோம். அதேசமயம் சின்னச்சின்ன குறைகள் உங்களிட மும் இருக்குது. துறையின் செயலாள ரோ, இயக்குநரோ கேட்கும் தக வல்களைக்கூட சில கலெக்டர்கள் தருவதில்லை. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் சொல்கிற விசயங்கள்கூட நடக்க மாட்டேங்குதுன்னு எனக்கு தகவல் வருது'' என சொல்லியிருக்கிறார்.
இதனையடுத்து ஒவ்வொரு மாவட்ட கலெக்டரையும் பேச அனுமதித்தனர். சுருக்கமாக பேச அறிவுறுத்தப்பட்டனர். திருச்சி கலெக்டர் ராஜாமணி, திருச்சியில் நடந்துவரும் வளர்ச்சித்திட்டங் களை விவரித்துவிட்டு, ஆதி திரா விடர் பள்ளிகள்-விடுதிகளின் அவலநிலை, ரேஷன் கடைகள் பாழ்பட்டிருப்பது, தண்ணீர் இன்றி பயிர்கள் காய்வதுபற்றி குறிப்பிட் டுள்ளார். அதேபோல மதுரை கலெக் டர் வீரராகவராவ், "மதுரையிலுள்ள இளைஞர்களிடம் பாரம்பரிய விளையாட்டுகள் மீது ஆர்வம் அதிகரித்துள்ளது. சிலம்பாட்டத்தை பாரம்பரிய விளையாட்டில் சேர்க்க வேண்டுமென இளைஞர்கள் விரும்புகின்றனர்' என்றார். வேலூர் கலெக்டர் ராமன், திருவண்ணா மலை கலெக்டர் கந்தசாமி இருவரும் தங்களது மாவட்டத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுத்திருக்கும் செம்மரக்கட்டை கடத்தல் குறித்து விரிவாகப்பேசியவர்கள், "செம்மரக் கட்டை கடத்தலுக்காக ஏஜெண்டு களிடம் சிக்கிக்கொள்ளும் இளைஞர் களை நல்வழிப்படுத்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தாருங்கள். ஏஜெண்டுகளை ஒழிக்கவும் முயற் சித்து வருகிறோம்' என்றனர்.
இப்படி ஒவ்வொரு கலெக்ட ரும் பிரச்சனைகளையும் கோரிக்கை களையும் வைத்ததோடு, ""எங்கள் பணிகளில் அரசியல் தலையீடுகள் அதிகமிருக்கிறது. ஒரு எம்.எல்.ஏ., சிபாரிசு கடிதம் கொடுப்பதையே தொழிலாக வைத்திருக்கிறார். அரசு விதிகளின்படி செய்யவே முடியாத விசயங்களை செய்யுங்கள், செய்யுங்கள் என சொன்னால் எப்படி செய்வது? முன்னெல்லாம் அமைச்சர்கள்தான் சிபாரிசு செய்வார்கள். இப்போ அப்படியில்லை. வட்டம், பகுதி, ஒன்றியம்னு ஒரு நாளைக்கு 10, 15 பேர் வருகிறார்கள். டெண்டர் விவகாரங்களில் எங்களுக்கு வரும் தலையீடுகளை சமாளிக்கவே முடிவதில்லை. அரசியல் தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பேர் கிடைக்கிற மாதிரி நல்ல நிர்வாகத்தை நாங்கள் தருகிறோம்'' என ஆதங்கத்தை கொட்டினர். அப்போது பேசிய துணைமுதல்வர் ஓ.பி.எஸ்., ""கட்சிக்காரார்களை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம். நாங்கள் என்ன திட்டங்களைப் போட்டாலும் அதனை செயல்படுத்தறது நீங்கள்தான். அதனால், சரியாக செயல்படுங்கள்'' என்றார்.
"காலியிடங்களை நிரப்புங்கள், நிதி நெருக்கடி யில் பல திட்டங்கள் கிடப்பில் கிடக்கிறது, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவின்போது அறிவிக்கப் பட்ட பல திட்டங்களுக்கு அரசாணையே போடப்படவில்லை' என பெரும்பாலான கலெக்டர்கள் சுட்டிக்காட்டினார்கள்.
மூன்றாம்நாள் ஐ.பி.எஸ். அதிகாரிகளு டன் எடப்பாடி விவாதித்தபோது, ""கலெக் டர்களுக்கும் மாவட்ட காவல்துறை அதி காரிகளுக்கும் தொடர்பில்லைன்னு சொன் னீங்க. உண்மைதான். நாங்கள் கொடுக்கிற தகவல்களை கலெக்டர்கள் மதிப்பதே இல் லை. ஒவ்வொரு கலெக்டருக்கும் ஒவ்வொரு பேக்ரவுண்ட் இருக்கு. அதனால் நாங்க சொல்றது எடுபடறதில்லை. ஒரு ஐ.ஜி.யின் கீழ் 4 மாவட்டங்கள் வருது. அந்த வகையில் கலெக்டராக இருப்பவரைப் பார்த்தால் சர்வீசில் ஐ.ஜி.யைவிட ஜூனியராக இருக்கிறார். ஐ.ஜி. சொல்ற தகவல்களை அந்த கலெக்டர் கேட்க மறுத்தால் ஐ.ஜி.க்கு ஈகோ ப்ராப்ளம் வரத்தான் செய்யும். நேரடி ஐ.பி.எஸ். ஆபீசர்ஸ், கன்ஃபார்ட் ஐ.ஏ.எஸ்.சான கலெக்டர் களுக்கு கீழே இருப்பதால்தான் இரு தரப்புக்கும் நல்ல நட்பு இல்லாமல் போகிறது. குற்றம் செய்தவனை பிடிச்சுக்கிட்டு வந்தா உடனே எம்.எல்.ஏ., எம்.பி.க்கிட்ட இருந்து போன் வந்துடுது. இல்லைன்னா மாவட்ட செயலாளர் ஸ்டேசனுக்கு நேரிலே வந்துடுறாரு.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சரின் பெயரை சொல்லிக்கிட்டு, ரியல் எஸ்டேட் விவ காரங்களை முடிச்சுக்கொடுன்னு டார்ச்சர் பண் றாங்க. "நான் சொல்லிக்கிறேன் , எஸ்.பி.யை போய்ப் பார்' என அமைச்சர்களும் சொல்லிடுறாங்க. கட்சிக் காரர்களை சமாளிக்க நீங்க அப்படி சொல்லிடுறீங்க. அதுவே எங்களுக்கு பெரிய தொந்தரவா இருக்கு'' என்றெல்லாம் பல மன குறைகளை வெளிப்படுத் தினர் ஐ.பி.எஸ். அதிகாரிகள்.
அப்போது குறுக்கிட்டுப்பேசிய எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும், ""இனி அப்படிப்பட்ட சிரமம் உங்க ளுக்கு இருக்காது. பிரச்சனை வந்துச்சுன்னா சம் பந்தப்பட்ட அமைச்சர்களையே தொடர்புகொண்டு பேசுங்க. இல்லைன்னா, எங்க கவனத்துக்கு கொண்டு வாங்க'' என்று வலியுறுத்தியவர்கள், ""ஆட்சிக்கு மெஜாரிட்டி இல்லை. எப்போ வேணாலும் கவிழ்ந் திடும் என பல அதிகாரிகள் நினைக்கிறீர்கள். காவல் துறையில் என்ன நடக்குதுன்னு நாங்க தெரிந்து தான் வெச்சிருக்கோம். இந்த ஆட்சி கவிழாது. இன்னும் மூன்று வருசத்துக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அதனால், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளோடு இணைந்து செயல்பட ஒத்துழைப்புக்கொடுங்கள். அதேசமயம் தவறு செய்தால் அமைதி யாகவும் நாங்கள் இருக்க மாட்டோம்'' என கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து காவல்துறையின ருக்கு தேவைப்படும் குடியிருப்பு வசதிகள், புலனாய்வு அமைப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உபகரணங்கள், தீயணைப்புத்துறையை மேம்படுத்த நிதி உள்ளிட்ட பல தேவைகள் குறித்து விவரித்தனர் காவல்துறை அதிகாரிகள். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி கள் பேசியதை குறிப்பெடுத்துக் கொண்டார் தலைமைச்செயலாளர் கிரிஜா. உயரதிகாரிகளுடன் கலந்தாலோசித்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையான அறிவிப்புகளை "டிக்' அடித்தார் எடப்பாடி. 4 வருடங்களில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார். கோபங்கள், ஆதங்கங்கள், சமாளிப்புகளோடு முடிந்துள்ள மாநாட்டிற்காக ஆன செலவு சுமார் 75 லட்சம் ரூபாய்! சைவம் மற்றும் அசைவ உணவுகளுடன் மூன்று நாளும் நடந்த அதிகாரிகளுக்கான விருந்தில் அவர்களோடு இணைந்து எடப்பாடியும் அமைச்சர்களும் சாப் பிட்டனர். சாப்பாட்டின்போது பல உயரதி காரிகளையும் தேடித்தேடிப்போய் தனியாக எடப்பாடி பேசியது சுவாரஸ்யம் என்கிறார்கள் அதிகாரிகள்.
-இரா.இளையசெல்வன்