காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகத் தெளிவாக இருக்கிறது என்கிறார்கள் மத்திய அரசுக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளர் யு.பி.சிங் கூட்டிய கூட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும், நீர்ப்பாசனத்தை கண்காணிக்கும் பொதுப்பணித்துறை செயலாளரான பிரபாவும் நடந்துகொண்ட விதமே முற்றிலும் சரியில்லை என டெல்லியைச் சேர்ந்தவர்கள் கவலைப்படுகிறார்கள்.
கூட்டத்தில் பேசிய கிரிஜா வைத்தியநாதன், காவிரி தொடர்பாக சுப்ரீம்கோர்ட் இறுதித் தீர்ப்பு அளித்தபிறகு கிட்டத்தட்ட மூன்றுவாரம் கழித்து, மத்திய அரசு ஒரு கூட்டத்தைக் கூட்டி விவாதிப்பது காலம் கடத்தும் செயல் என்பதை சுட்டிக்காட்டி பேசவில்லை. மாறாக, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி நீர் மேம்பாட்டு வாரியத்தை அமைக்க வேண்டும். அந்த காவிரி நீர் மேம்பாட்டு வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவை அமைக்கும். இவ்விரண்டு அமைப்புகளையும் மத்திய அரசு அமைப்பது அதன் கடமையாகும். அதை சுப்ரீம்கோர்ட் சொன்னபடி ஆறு வாரத்திற்குள் அமைக்க வேண்டும் என்கிற வழக்கமான நடைமுறைதான், தமிழக தலைமைச் செயலாளர் பேசிய வார்த்தைகள்.
இதற்கு கர்நாடக மாநில தலைமைச் செயலாளர் பிரபா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கூட்டத்திற்குப் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய பிரபா, ""தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சொன்னதைப் போல உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த ஒரு புதிய திட்டத்தை உருவாக்க வேண்டும் என்பதை தமிழ்நாடு உட்பட அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள்'' என குறிப்பிட்டார்.
கூட்டத்தில் பேசிய மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளர் யு.பி.சிங், ""காவிரி மேலாண்மை வாரியம் பற்றி காவிரி நடுவர் தீர்ப்பாயம் சொல்கிறது. அதை அப்படியே ஏற்க வேண்டும் என்பதில்லை. இதற்கு பக்ராநங்கல் நதிநீர் பங்கீடு, நர்மதா நதிநீர் பங்கீடு போன்ற எண்ணற்ற உதாரணங்கள் உள்ளன. அதை நாம் பரிசீலிக்கலாம் என்றார். அதை தமிழகத்தின் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் எதிர்க்கவே இல்லை'' என்கிறார்கள் கூட்டத்தில் பார்வையாளர்களாகப் பங்கேற்றவர்கள்.
கூட்டத்தில் கலந்துகொண்ட கிரிஜா, மறுநாள் தமிழகம் வந்து முதல்வர் எடப்பாடியை சந்தித்து டெல்லியில் நடந்த விவரங்களை பகிர்ந்துகொண்டார். காவிரி தொடர்பாக விவாதிக்க சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை தவறாக மொழிபெயர்த்து வருகிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில், இந்திய நீர்ப்பாசன சட்டம் 6(ஆ)ன் அடிப்படையில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என எழுதிவிட்டு "அந்த திட்டம் காவிரி நீர் மேலாண்மை வாரியம்' எனத் தெளிவாக அடைப்புக் குறிகளுக்குள் குறிப்பிட்டிருக்கிறார்கள் நீதிபதிகள்.
இதனை வசதியாக மறைத்துவிட்டு கர்நாடகமும் மத்திய அரசும் புதிய திட்டம் என பேசுவதை தமிழக தலைமைச்செயலாளர் கிரிஜா அந்தக் கூட்டத்திலேயே மறுத்துப் பேசவேயில்லை.
அத்துடன், சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் மத்திய அரசு "புதிய திட்டம்' எதையும் தயாரித்து வழங்க அனுமதி அளிக்கப்படவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து கர்நாடகாவின் அட்வகேட் ஜெனரல் ரஞ்சித்குமார் என்பவர் வாதம் செய்தார். அவரது பெயரை குறிப்பிட்டு அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசும், கர்நாடக அரசும் புதிய நடைமுறைகளை கொண்டு வர வேண்டும் என அவர் வைத்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெள்ளத் தெளிவாக நிராகரித்துள்ளார்கள்.
""காவிரி நதிநீர் தீர்ப்பாயம் அளித்த பரிந்துரைப்படி கர்நாடகாவில் உள்ள அணைகள், பம்பிங் ஸ்டேஷன்கள், காவிரி நீரை அளவிடும் கருவிகள் அனைத்தும் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் நியமிக்கும் காவிரி ஒழுங்காற்றுக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அதில் இடம்பெறும் உறுப்பினர்கள் யார் என்பதை மட்டும்தான் மாநிலங்கள் முடிவுசெய்ய வேண்டும். இதுதான் தீர்ப்பு சொல்லும் விவரம்'' என்கிறார்கள் சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள்.
""இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்த கிரிஜா வைத்தியநாதன் எழுத்துப்பூர்வமாக ஓர் அறிக்கையை சமர்ப்பித்திருந்தால் மத்திய நீர்ப்பாசனத்துறை செயலாளர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக புதிய திட்டம் என்கிற புதிய கோட்பாடு பற்றி பேசியிருக்க முடியாது'' என தமிழக அரசின் அலட்சியம் பற்றி சுட்டிக்காட்டுகிறார்கள் தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.
அடுத்தவாரம் கர்நாடகா சார்பில் சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்கிறார்கள். காவிரி விவகாரத்தில் தீர்ப்பளித்த சுப்ரீம்கோர்ட் பெஞ்ச்சில் இடம் பெற்றவரும், ஜெ.வுக்கு எதிராக சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பளித்தவருமான சீனியர் நீதிபதி அமித்வராய் ஓய்வு பெற்றுவிட்டார். கர்நாடகா தாக்கல் செய்யும் மறுசீராய்வு மனு அந்த பெஞ்ச்சில் புதிதாக இடம் பெறும் சீனியர் நீதிபதியிடம் வழங்கப்படும். அவர், அதைப் படிக்க நேரம் எடுத்துக்கொள்வார். இது கர்நாடகா செய்யும் காலதாமதத்துக்கு வசதியாகும் எனச் சொல்கிறது சுப்ரீம்கோர்ட் வட்டாரம்.
"தமிழகத்தின் சார்பில் மத்திய அரசை வலிமையாக எதிர்க்கும் மனோநிலை வராமல் காவிரி மேலாண்மை வாரியம் அமையாது' என்கிறார்கள் டெல்லி வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
-தாமோதரன் பிரகாஷ்