முதல்நாள் மாலை 3 மணிக்கு தொடங்கிய பள்ளி ஆண்டு விழா, 6 மணிக்கெல் லாம் முடிந்து விட்டது. மாண வர்களும் பெற்றோர்களுமாக சுமார் 300-க்கும் மேற்பட்டோரும் கண்களைக் கசக்கியபடி வீடுகளுக்குக் கிளம்பினார்கள்.
கிளம்பிய அத்தனை மாணவர்களும் பெற்றோர் பலரும் மறுநாள் காலையில 16-3-18 வெள்ளி அதே பள்ளி யின் வாசலில் ""கண்கள் எரியுதே... என்னமோ ஆயிப் போச்சு... பார்வை மங்கலா இருக்கே'' கண்ணீர் வடிய வடியத் திரண்டுவிட்டனர்.
நெல்லை மாவட்டம் ஏர்வாடியை ஒட்டிய பொத்தை யடி கிராமத்தில் உள்ள எஸ்.வி. இந்து அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில்தான் இந்தப் பதட்டம். பள்ளியின் தாளாளர் பால சுப்பிரமணியன், வேன்களில் பார்வை பாதிக்கப்பட்ட 115 பேரை, நெல்லை யில் உள்ள அரவிந்த் கண் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றார். அதற்குள் செய்தி மாவட்ட நிர்வாகத் திற்கு சென்றுவிட்டது. ஆட்சியர் சந்தீப் நந்தூரி மருத்துவமனைக்கு வந்துவிட்டார்.
அத்தனைபேரையும் பரிசோதித்த மருத்துவர்கள், ""பார்வைக்கு பிரச்சினை இல்லை. ஓவர் லைட்டிங் தான் கார ணம். ரெண்டுநாளைக்கு டிராப்ஸ் போட்டா சரியாயிடும். வீக்கமும் எரிச் சலும் கண்ணீர் வடிதலும் நின்றுவிடும்'' சிகிச்சையளித்து அனுப்பி வைத்தனர்.
எஸ்.வி. இந்து தொடக்கப் பள்ளி, ஆண்டு விழாவுக்காக இரண்டு வகுப்பறைகளை ஒன்றாக இணைத் திருக்கிறது. அந்த சிறிய இடம், ஒளி மயமாக இருக்கவேண்டும் என்பதற் காக, 250 வாட்ஸ் ஹைபவர் கொண்ட மூன்று மெர்குரி லைட்டுகளை அமைத்திருக்கிறார்கள். ஆண்டு விழா நிகழ்ச்சிகள் ஆரம்பித்த சில நிமிடங் களிலேயே குழந்தைகளின் கண்களிலிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்து விட்டது. விழா சிறப்பாக நடக்க வேண்டும் என்பதற்காக அந்த "ஹைபவர்' வெளிச்சத்தை தாங்கிக் கொண்டார்களாம்.
""கண்ணைப் புடுங்கிற வெளிச்சம். பெரியவங்க எங்களா லேயே தாங்க முடியலை... குழந்தைகள் என்ன செய்யும்? "தாங்க முடியலை தாங்க முடி யலை'னு சத்தம் போட்ட பிறகு ஒரு லைட்டை ஆஃப் பண்ணு னாங்க. ராத்திரி பூரா கண்ணு எரிச்சலால, வலியால புள்ளைங்க தூங்கலை. யார் செஞ்ச புண்ணிய மோ... இதோட நின்னுச்சே...'' பதட்டம் நீங்கிய குரலில் சொன்னார் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் சுப்புலட்சுமி.
சிகிச்சை அளித்த அரவிந்த் மருத்துவமனை டாக்டர்கள் குழுவின் தலைவர் ராமகிருஷ் ணன் நம்மிடம், ""வெல்டிங் வெளிச்சம்... இப்படிப்பட்ட பவர்புல் வெளிச்சங்களால் எரிச்சல், நீர் வடியல், கண்கள் சிவப்பது, வீங்குவது போன்றவை ஏற்படும். சொட்டு மருந்து போட்டால் இரண்டு நாளில் குணமாகிவிடும்'' என்றார்.
கவனக்குறைவாய் செயல் பட்ட பள்ளித் தாளாளர் பாலசுப் பிரமணியனையும், ஒலியொளி அமைத்த ரமேஷையும் கைது செய் திருக்கிறது நெல்லை போலீஸ்.
எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை வேண்டும்.
-பரமசிவன்