கொடூர தாக்குதலுக்கு ஆளான ராமச்சந்திரனை திருச்சி அரசு மருத்துவமனையில் சந்தித்தோம். அவர் செய்த குற்றம், அரசுத் துறை ஊழல்களை வெளிக்கொண்டு வந்தது.
""எனக்கு சொந்த ஊர் முசிறி சூரப்பட்டி. பத்தாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். மாற்றுத்திறனாளியான எனக்கு வேலை எதுவும் கிடைக்காததால் எங்க பகுதி மக்களுக்கு, குடியுரிமை அட்டை, ஆதார் அட்டை உள்ளிட்ட அரசு சேவைகளைப் பெற்றுக்கொடுத்து, இதன்மூலம் வாழ்க்கையை நகர்த்திவருகிறேன். நான் தகவல் உரிமை சட்ட ஆர்வலர்கள் அமைப்பில் தற்போது மாற்றுத்திறனாளிகளின் மாநில ஒருங்கிணைப்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். மக்களுக்கு சென்றடைய வேண்டிய அரசின் திட்டங்கள் சரியாக சென்றடையவில்லை என்றால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், அதன் நிலவரம் அறிந்து, அந்த திட்டம் சரியாய் மக்களுக்குச் சென்று சேர, எங்கள் அமைப்பின் மூலம் இயன்றதைச் செய்து வருகிறேன். அப்படி நான் கண்டறிந்த ஊழல்கள் குறித்து புகார் கொடுத்து கேள்வி எழுப்பியதால், இப்படி கொடூரமாகத் தாக்கி, என்னைக் கொல்ல முயன்றார்கள். செத்துவிட்டதாக நினைத்து அப்படியே விட்டுவிட்டுச் சென்றதால்தான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன்'' என்றவர், அவர் கண்ட ஊழல் விவகாரங்களையும் விவரிக்கத் தொடங்கினார்.
""மத்திய அரசு, கழிப்பறை கட்ட 12 ஆயிரம் ரூபாய் மானியமாகத் தருகிறது. இதைப் பயன்படுத்திக்கொண்டு, சூரக்குடி ஊராட்சி மன்ற தலைவர் கோடி, செயலாளர் கண்ணன், முன்னாள் சேர்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்டவர்கள் கழிப்பறை கட்டிக் கொடுத்ததாக கணக்கு காட்டி, பல லட்ச ரூபாய்களை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தகவல் சேகரித்து மாவட்ட ஆட்சியருக்கு மனுகொடுத்தேன். இதைத் தொடர்ந்து கடந்த 22-ந் தேதி அதிகாரிகள் ஆய்வுசெய்து, 7 வீடுகளில் கழிப்பறை கட்டாமலேயே கட்டியதாக கணக்குக் காண்பித்திருந்ததைக் கண்டுபிடித்தனர். சம்மந்தப்பட்டவர்கள் வாங்கிய பணத்தைத் திருப்பி செலுத்தும்படியும் உத்தர விட்டனர்.
இதேபோல் 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தில், இறந்துபோனவர்கள் பெயரிலும் பணம் எடுப்பதையும் கண்டு பிடித்து ஆதாரங்களோடு கலெக்டரிடம் புகார் கொடுத்தேன். கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திலும் 70 சத பணத்தைச் சுருட்டியுள்ளனர். மேலும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஏரியாவில் புழங்கவிட்டு கமிஷன் பெற்றனர். இப்படி 40 விதமான ஊழல்களை ஆட்சியர் கவனத்துக்குக் கொண்டு போனேன். இதனால் ஆத்திரம் அடைந்த ஊழல் பெருச்சாலிகள் என்னைக் கொல்ல முடிவெடுத்திருக்கிறார்கள். அதன்படி முகத்தை மூடி கொண்டு வந்த 4 பேர் என்னை சரமாரியாக அரிவாளால் வெட்டி, இரும்புக் குழாய்களால் தாக்கினர். பலத்த வெட்டுக் காயங்களோடு நான் உயிர் பிழைத்திருக்கிறேன்.
இது தொடர்பாக என் அண்ணன் மற்றும் அப்பா கொடுத்த புகாரின் பேரில், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயல ரின் உறவினர்களான மதிவாணன், பாலாஜி, மோகன் மற்றும் அவர்களோடு இருக்கும் அரவிந்தன் ஆகியோர் மீது கொலை வழக்கைப் பதிவு செய்திருக்கிறது போலீஸ். எனினும் போலீஸிலேயே சிலர் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்துவருகிறார்கள்'' என்றார் வருத்தமாக.
சம்மந்தப்பட்ட முன்னாள் சேரக்குடி தலைவர் மற்றும் சூரப்பட்டி தலைவர் கோடி, இருவரும் தலைமறைவாகி விட்டார்களாம். ஊழலை அம்பலப்படுத்தியதால் தாக்கப்பட்ட ராமச்சந்திரனுக்கு உரிய நீதி கிடைக்குமா?