தமிழ்நாட்டில் உள்ள வேலைகளை தமிழக இளைஞர்களுக்கே வழங்க வேண்டும். மற்ற மாநிலத்தவர்களை கொண்டு வந்து கலக்கக்கூடாது என்று தமிழ்த்தேசிய பேரியக்கம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற அமைப்புகள் மிகப் பெரிய போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் மற்ற மாநில இளைஞர்களுக்கு வேலை வழங்குவதையே வழக்கமாக கொண்டுள்ளது எடப்பாடி அரசு. இதற்கு காரணம் 2016 ல் ஓ.பி.எஸ். கையெழுத்து போட்ட சட்ட திருத்தம்தான்.
கடந்த மாதம் தமிழ்நாட்டில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலைகளில் தொழில் பழகுனர் பணியிடங்களில் வடநாட்டவர்களுக்கே வாய்ப்புகள் வழங்கப்படுகிறது என்று திருச்சியில் தமிழர் தேசிய பேரியக்கம் பிரமாண்டமான போராட்டத்தை நடத்தியது. அதன் விளைவு தற்போது ரயில்வேயில் தொழில் பழகுனர் 990 பணிகளுக்கான அறிவிப்பில் தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும் என்ற உத்தரவும் அந்த அறிவிப்பில் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது ஆறுதல் அளித்தது.
ஆனால் அடுத்த பேரதிர்ச்சியை தமிழ்நாடு மின்சார வாரியம் இப்போது கொடுத்துள்ளது. மின்வாரிய அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 300 உதவி பொறியாளர்களின் தேர்வுப்பட்டியலை வெளியிட்டதுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 5 பேருக்கு பணி ஆணை வழங்கினார். அந்தப் பட்டியலை பார்த்த தமிழக இளைஞர்கள் கொதிப்படைந்துள்ளனர். முதலமைச்சர் பணியாணை கொடுத்தவர்களில் ஒருவர் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்.
தமிழக அரசு இந்த ஆண்டு 300 பேரில் 39 வெளிமாநிலத்தவர்களை நியமனம் செய்துள்ளது. இதில் 69% இடஒதுக்கீடு போக, மீதமுள்ள 31% இடங்களை முன்னேறிய சாதியினருக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளனர். அதாவது, பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவில் பொதுப் போட்டியில் தகுதியானவர்களுக்கு இடம் தராமல் அவர்களை இடஒதுக்கீட்டுப் பிரிவில் தள்ளிவிட்டு பொதுப்பிரிவை முழுமையாக வெளிமாநில முன்னேறிய வகுப்பினருக்கு தாராளமாக வேலை வழங்கி சமூக நீதிக்கு வேட்டு வைத்துள்ளது.
தமிழக இளைஞர்களுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் தமிழ்த் தேசிய பேரியக்கத்தைச் சேர்ந்த அருணபாரதி..
""தமிழ்நாடு மின்வாரியத்தில் காலியாக உள்ள 300 “உதவிப் பொறியாளர்’’ பணிக்குத் தேர்வானவர்கள் பட்டியல் மே 29-ந் தேதி வெளியானது. அதில் 39 பேர் ஆந்திரா, கேரளா, உ.பி., பீகார், கர்நாடகம், ராஜஸ்தான், தில்லி, சத்தீசுகர் ஆகிய வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பணியமர்த்தல் ஆணையில் அவர்களது முகவரியும் இருக்கிறது. இதில் 25 பேர் ஆந்திரத்தெலுங்கர்கள். இவர்களை வடசென்னை, குந்தா (நீலகிரி), காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியில் அமர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மாத ஊதியம் 50 ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்வானோரின் பட்டியலை வெளியிட்டுள்ள மின்வாரியத் தலைமைப் பொறியாளர் அசோக் குமார், தேர்வானோரில் தமிழ் தெரியாதவர்கள் இருப்பின் அவர்கள் உடனடியாகத் தமிழ்த் தேர்வுக்குத் தயாராக வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளார். தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர்கள் எனத் தெரிந்தே இவர்களை பணியில் அமர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு! (கங்ற்ற்ங்ழ் சர். 036904/ஏ.13/ ஏ.131/2019, க்ஹற்ங்க் 29.05.2019.)
கடந்த 2016-ம் ஆண்டு 01.09.2016 தமிழ்நாடு சட்டப்பேரவையில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட “தமிழ்நாடு அரசுப் பணியாளர் முறைப்படுத்தல் சட்ட’த்தின்படி, வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி பாக்கித்தான், நேபாளம், வங்கதேசம், மியான்மர், தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட 14 நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் புலம்பெயர்ந்தோரும் தமிழ்நாடு அரசுப் பணியில் சேரலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே அரசு மற்றும் தனியார் வேலைகள் என சட்டங்கள் உள்ள நிலையில், வெளிநாட்டவர் கூட அரசுப் பணியில் சேரலாம் என்ற சட்டத்தை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியது. இச்சட்டம் காரணமாகவே, தமிழ்நாடு அரசுப் பணியில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் சேர வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே அதிகளவிலான பொறியாளர்களைக் கொண்ட தமிழ்நாட்டில், குறைந்தபட்சம் ஒரு கோடி பேர் வேலையில்லாமல் தவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் செயல்படும் தமிழ்நாடு அரசு - அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவரை பணியமர்த்துவது, தமிழ் மக்களுக்கு இழைக்கும் இனத் துரோகமாகும்!
10 சதவீதத்திற்கு மேல் பணியிலுள்ள வெளி மாநிலத்தவரை உடனடியாக வெளியேற்ற வேண்டும். இல்லையேல், அரசமைப்புச் சட்டப்படி மண்ணின் மக்களுக்கு வேலை கோரியும், வெளி மாநிலத்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை ரத்து செய்ய வலியுறுத்தியும் விரிவான போராட்டங்களை முன்னெடுப்போம்'' என்றார்.
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் தினக் கூலியாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை செய்து வருகிறார்கள். கஜா புயல் பாதித்த போது அவர்களை வைத்தே பணிகள் நடந்தன. அப்படி இருக்க அவர்கள் "பணி நியமனம் செய்யுங்கள்' என்று கேட்டு போராடியபோது தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை. பா.ஜ.க. ஆட்சி இருக்கும் இந்த ஐந்தாண்டுகளில் இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் நடக்கப் போகிறதோ...?
-இரா.பகத்சிங்