"தன்னுடைய வீட்டுப் பிள்ளைகள் சாதி மறுப்புத் திருமணம் செய்ததையோ, இஸ்லாமியத்தை தழுவியதையோ அவர் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், தன்னுடைய சுயநலத்துக்காகவும், பணத்துக்காக மட்டுமேதான் சமூகநீதித் தொண்டன், சமத்துவத் தொண்டன் வேஷம் காண்பிக்கின் றார் பழ.கருப்பையா. காந்திய வேஷம் போடும் அவரை நம்பி ஏமாறாதீர்கள்' என பட்ட வர்த்தனமாக சூளுரைத்துள்ளது காரைக்குடியில் நடந்த மதநல்லிணக்க மீலாது விழா.
31-08-2025 ஞாயிற்றுக்கிழமையன்று, காரைக்குடியிலுள்ள பாசின் இல்லத்தில் மதநல்லிணக்க மீலாது விழா நடைபெற்றது. இதில் திருமறையை மௌலானா காதர் உசேனும், மீலாது உரையை தவத்திரு திருவடிக் குடில் சுவாமிகள் நிறுவனரும் வழங்கினர். நிகழ்ச்சியில் சகோ அகத்தியன், சிவகங்கை மாவட்ட அரசு காஜி மௌலானா முகமது ஃபாரூக், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை மௌலானா காஜா முயினுதீன், தி.மு.க. முன்னாள் எம்.பி. எம்.எம்.அப்துல்லா ஆகியோர் கலந்துகொள்ள, சிறப்புரையை நிதி மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கவிருந்தார், ஆனால் கலந்து கொள்ளவில்லை. எங்களின்மேல் எப்போதும் அளவற்ற அன்பும் வரம்பற்ற வாழ்த்தும் பகிரும் தாங்கள், இப்போதும் வந்திருந்து நிகழ்வை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என காரைக்குடி மாநகரிலுள்ள அனைவரையும் அழைத்தது எழுத்தாளரும், இயக்குநருமான கரு.பழனியப்பன் மற்றும் அவரது சகோதரர் முஜாகித் குடும்பத்தினர்.
'அது எப்படி..? பெரும்பான்மை பங்கு தாரர்கள் இருக்கும் அந்த வீட்டில் மீலாதுவிழா கொண்டாடமுடியும்.? இது சட்டவிரோத மானது. இதற்கு தடை விதிக்கவேண்டும்.' என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையை நாடினார் பழ.கருப்பையா. அதுபோக காவல் துறையினரிடமும் ஒரு புகார் கொடுத்துவிட்டு மீலாதுவிழா தடைக்காகக் காத்திருந்தார் சமூக நீதிக்காவலன் என வெகுஜனத்திடம் பெயர் வாங்கிய பழ.கருப்பையா. "மொத்த பங்கான ஐந்தில் என்னிடம் மட்டும் 3 பங்கு இருக்கு. இன்னொரு பங்கிற்கு சொந்தக்காரரான முஜாகித் விழா நடத்துகின்றார். அப்புறம் எப்படி பெரும்பான்மை பங்கு இருக்கும்?'' பதில் கேள்வி எழுப்பி பழ.கருப்பையாவின் புகாருக்கு வாயடைத்தார் கரு.பழனியப்பன்.
தன்னுடைய சட்ட நடவடிக்கைகளில் குட்டுப் பட்டதால், நகரத்தார் சமூகத்தையே ஆயுதமாக்கிய பழ.கருப்பையா, "நம்முடைய சமூகம் பாரம்பரியம்மிக்கது. நாம் பிற சாதி யினரையோ, மதத்தையோ திருமணம் செய்துகொள்வதில்லை. என்னுடைய தம்பி முஜாகித் இஸ்லாம் மதத்தைத் தழுவியதாலேயே அவனை ஒதுக்கிவைத்தேன். அதுபோல் இன்னொரு தம்பி மகன் கரு.பழனியப்பன் வேற்று சமூகப் பெண்ணை திருமணம் செய்த தால் அவனையும் ஒதுக்கிவைத்தேன். இப் பொழுது அவர்கள் சேர்ந்துகொண்டு நகரத்தார் சமூக மரபையே கேலிக்கூத்தாக்குகிறார்கள். இதனைத் தடுத்து நிறுத்தவேண்டும்'' என்றார் அவர்.
இதேவேளையில் பழ.கருப்பையாவின் இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவாக, "அறவழியில் வந்த நகரத்தார் குலத்தவர் சார்ந்த காரைக்குடி பாசின் இல்லத்தில் 31-8-2025 அன்று சமய நம்பிக்கை, இறை நம்பிக்கை ஆகியவற்றை துறந்த சந்தர்ப்பவாதி கரு.பழனியப்பன் மற்றும் மதம் மாறிச் சென்ற அவரது தம்பி முகமது முஜாஹித் ஆகியோர் உலகம் போற்றும் நகரத்தார் கட்டடக்கலைக்கு பெயர்போன காரைக்குடியிலுள்ள நகரத்தார் பூர்வீக வீட்டில் மிலாது விழாவைக் கொண்டாட எத்தனித்து சமய விரோதத்தை வளர்க்கமுயல்வது கண்டிக்கத்தக்க செயல்பாடு. இந்த விழாவில் ஆளுங்கட்சி மந்திரிகள் பங் கேற்பது ஒட்டுமொத்த நகரத்தார் சமூகத்தை அவமதிக்கும் செயலாகும். மேற்படி இழிசெய லை வன்மையாகக் கண்டிப்பதோடு அதே வீட்டில் திருமுறை, பெரிய புராணம், திருவாச கம் ஓதும் நிகழ்ச்சி விரைவில் நடத்தப்படும் என்பதை இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்'' என அறிக்கையை வெளியிட்டு பிரச்சினையைத் தூண்டியது அர்ஜுன்சம்பத்தின் அறிக்கை.
இது இப்படியிருக்க மீலாதுவிழா நிகழ்வு ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தினை விட்டு தனியார் அரங்கில் நடந்தேறியது. கூட்டத்தில் எதிர்பார்த்ததுபோல் அமைச்சர் தங்கம் தென்னரசு மிஸ்ஸிங். "இசுலாமியப் பண்புகளில் மிகவும் சிறந்தது எது? பசித் தவருக்கு உணவளிப் பதும், உமக்கு அறி முகமானவருக்கும் அறிமுகமற்றவருக்கும் சலாம் (முகமன்) சொல்லுவதுமாகும் - நபிகள் நாயகம் கூறி யிருக்கின்றார். அதைத் தான் நாம் செய்கின் றோம். நான் சாதி மறுப்புத் திருமணம் செய்தவன். தம்பி முஜாகித் இஸ்லாத்தைத் தழுவியவன். இதில் என்ன தப்பு..? ஊரெல்லாம் சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி பேசு கின்றவர் தன்னுடைய வீட்டில் ஏன் அதனை அனுமதிக்கவில்லை. தம்பி முஜாகித்தை வைத்துக்கொண்டு, "அல்லா வடிவமைத்த அழகிய சமூகம்' என்கின்ற புத்தகத்தை எழுதியிருக்கின்றாய். பணத்துக்காக மட்டும் தான் அந்த புத்தகம் எழுதப்பட்டது. உண் மையான சகோதரத்துவம் அங்கு இல்லையே..? திடீரென இந்த இடம் மாறியதற்கு காரணம் சொல்லவேண்டுமல்லவா..? நகரத்தார் சமூகத்தை சேர்ந்த மிகப்பெரிய தனவான்கள் என்னைப் பார்த்து, "உம் நோக்கம் நியாயமானது தான். பெரியவங்க எங்களுக்காக இந்த முறை மட்டும் மீலாதுவிழாவை வெளியில் நடத்திக்கோ' என்றார்கள்். அதனால்தான் இங்கு நடத்துகிறேன். வீட்டுக்கு வெளியே அண்ணன் தம்பிகளாக பழகிவிட்டு வீட்டுக்குள் வரக் கூடாது என கூறுபவர் பெரிய மனிதர் கிடை யாது. அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் எனப் புத்தகம் வெளியிட்ட பழ.கருப்பையா வீட்டிற்குள் இஸ்லாமியர்கள் வரக்கூடாது எனக் கூறுகிறார். அனைவரும் இணைந்து வாழவேண்டும். நம்மால் மற்றவர்களுக்கு சிரமம் ஏற்படுத்தாமல் வாழ்வதே சிறந்த வாழ்வு. சிறந்த காரியங்கள் செய்யவேண்டும் என நினைத்தால் சிறந்த மனிதர்கள் நம்முடன் இருப்பார்கள். தான் சார்ந்து இருப்பவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கும்போது தெய்வம் நம்முடன் இருக்கும். மனிதர் வாழ்வில் வெற்றி தோல்வி என எதுவும் கிடையாது. இதுபோன்ற பல மதநல்லிணக்கக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்'' என்றார் கரு.பழனியப்பன்.
முன்னதாக பேசிய இயக்குநர் அமீரோ, "கருத்தியல்தான் வெற்றியடையும். ஒருவர் வகிக்கும் பதவிக்கு மரியாதை கொடுக்க வேண்டும். ஒருமையால் பேசுவதால் வென்றுவிட்டதாக நினைத்துவிடக்கூடாது, அவருடன் களத்தில் நின்று கருத்தில் மோதி வெற்றி பெறவேண்டும். என படபடப்பாய் பேசிய அமீர், விஜய் பக்கம் திரும்பி... விஜய் நடத்திய மாநாடே முழுமையான மாநாடுபோல் தெரியவில்லை. அது ரசிகர்கள் சந்திப்பு போல்தான் நடந்து முடிந்துள்ளது. மாநாடு என்றால் அதில் தலைவர் உரையாற்றிய பின்பு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர்தான் தொண்டர்கள் கலைந்து செல்வார்கள். ஆனால் த.வெ.க. தலைவர் பேசி முடித்தவுடன் சென்றுவிட்டார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் தீர்மானங்கள் பின்னர் நிறைவேற்றப்படும் எனக் கூறுகிறார், இது எந்த மாதிரி...'' என அரசியல் பேசியது அரசியல் சூட்டைக் கிளப்பியது.
அல்லா வடிவமைத்த அழகிய சமூகம் என்கின்ற புத்தகத்தை எழுதியது பழ.கருப் பையாவாக இருக்கலாம்... ஆனால் அல்லா வடிவமைத்த அழகிய சமூகத்தில் வாழ்வது மீலாது விழா நடத்திய பெருமக்களே!
மத நல்லிணக்கத்தைப் போற்றும் கரு.பழனியப்பனுக்கு ஒரு சபாஷ்!