ஏதாவது ஒருவகையில், சமூக அநீதி தலைதூக்கிவிடு கிறது. இதனை முறைப்படுத்துவ தற்கென, சுப.வீரபாண்டியனைத் தலைவராகக் கொண்டு சமூக நீதி கண்காணிப்புக்குழு இயங்கி வருகிறது. கல்வி, வேலைவாய்ப்பு, பதவிகள், பதவி உயர்வுகள், நியமனங்கள் ஆகியவற்றில் சமூக நீதி அளவுகோல் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதை இக்குழு கண்காணித்து வருகிறது. இக்குழுவிற்கு தமிழ்நாடு டிப்ளமோ மாணவர்கள் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில், ‘தமிழ்நாட்டில் 436-க் கும் மேற்பட்ட தொழில் நுட்பக் கல்லூரிகளில் Diploma In Civil Engineering முடித்துவிட்டு, ஆண்டுதோறும் சுமார் 12,000 மாணவர்கள் வெளி வரும் நிலையில், சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட DCE முடித்தவர்கள் வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கிறார்கள். ஒருங்கிணைந்த பொறியியல் சார் நிலைப் பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பு 5.03.2021 அன்று முதன் முறையாக வெளியிடப்பட்டது. அதில், கல்வித்தகுதி DCE அல்லது அதற்குச் சமமான கல்வி எனக் கொடுக்கப்பட்டுள்ளது. TNPSC-இல் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதி மூலம், டிப்ளமோ படிக்காமல் நேரடியாக B.E. படித்தவர்களும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத் தீர்ப்பின்படியும், அரசாணைப்படியும் டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவேண்டும்’என கோரப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அரசு முதன்மைச் செயலாளர் - நெடுஞ்சாலைத் துறை, கூடுதல் அரசு முதன்மைச் செயலாளர் - பொதுப்பணித்துறை மற்றும் செய லாளர் - தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆகியோருக்கு சமூக நீதி கண்காணிப்புக்குழு எழுதிய கடிதத்தில் ‘"பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினைச் சேர்ந்தவர்கள்தான் டிப்ளமோ முடித்தவர்களாக உள்ளனர். இதனைக் கருத்தில்கொள்ளவேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்த அரசாணைகளின்படியும், நீதிமன்றத் தீர்ப்பின்படியும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பினை உறுதிசெய்திட, இக்குழு பரிந்துரைக்கிறது'’என குறிப்பிட் டுள்ளது. நம்மிடம் பேசிய நெடுஞ்சாலைத்துறை இளநிலைப் பொறியாளர் ஒருவர், "இது முற்றிலும் கிராமப்புற மாணவர்கள் சந்தித்துவரும் சமூக அநீதியாக உள்ளது.
பாலிடெக்னிக்கில் படித்த டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்களுக்கான வேலை வாய்ப்பினை, பி.இ. படித்த பொறியாளர்கள் தட்டிப்பறித்துவிடுகிறார்கள். அது போல், ஐ.டி.ஐ. எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் படித்த மாணவர்களுக் கான வேலை வாய்ப்பினை, டிப்ளமோ படித்தவர்கள் ஆக்கிரமித்துவிடுகின்றனர். ஐ.டி.ஐ. படித்தவரும் டிப்ளமோ படித்தவரும் ஒருசேர வரும்போது, ஐ.டி.ஐ. முடித்தவருக்கு வேலை கிடைக்காது. டிப்ளமோ முடித்தவரும், பி.இ. படித்தவரும் விண்ணப்பிக்கும்போது, டிப்ளமோ படித்தவருக்கு வேலை கிடைக்காமல் போய்விடும். எந்தத் தகுதிக்கான வேலையோ, அந்தத் தகுதி உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை வரவேண்டும்'' என்றார் வேதனையுடன்.
ஐ.டி.ஐ. மற்றும் டிப்ளமோ மாணவர்கள், சமூக நீதி அடிப்படையில் வேலை வாய்ப் பினைப் பெறுவதற்கு, தமிழக அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.