சகுபிசகாக பேசுவது, ஏடாகூடமான காரியங்களைச் செய்வதில் நமது தமிழக மாண்புமிகுக்கள் இந்தியாவுக்கே வழிகாட்டிகளாக இருக்கிறார்கள். கெமிக்கல் மற்றும் விஷக்கழிவுகளால் நொய்யல் ஆற்றில் நுரை பொங்கி வழிந்ததைப்பற்றி minister-karuppananகேட்டபோது "திருப்பூர், கோவை மாவட்ட மக்கள் சோப்பு போட்டுக் குளித்ததால்தான் இந்த நுரை' என்று சொன்ன மாபெரும் சிந்தனையாளர் சுற்றுச்சூழல் அமைச்சர் கே.சி.கருப்பணன்.

Advertisment

அந்த கருப்பணன்தான், சமீபத்தில் டெல்லி சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து, ""மத்திய மற்றும் மாநில அரசுகள் நிறைவேற்றவிருக்கும் பெரிய திட்டங்கள் குறித்து மக்கள் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தும் விதி உள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்கீழ் வரும் இந்த விதியை ரத்து செய்யவேண்டும்'' என கோரிக்கை வைத்தார். கருப்பணனின் "கருத்தாழமிக்க' இந்தக் கருத்தைக் கேட்ட மோடியும் "குட் திங்'’என பாராட்டினாராம். மோடியின் பாராட்டு கிடைத்த திருப்தியோடு திருப்பதி போய் பெருமாளைக் கும்பிட்டுவிட்டு ஈரோடு திரும்பியுள்ளார் அமைச்சர்.

அமைச்சரின் இந்த அழிச்சாட்டியம்தான் விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான நா.பெரியசாமி நம்மிடம் பேசியபோது, “""மோடி அரசின் எதேச்சதிகாரத்தில்minister-karuppanan நாட்டில் ஜனநாயக நெறிமுறைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஹைட்ரோகார்பன், மீத்தேன், எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்களுக்கு மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் நடத்தினாலும் அரசாங்கத்தின் கருத்தைத்தான் திணித்தார்கள். இப்போது கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கும் வேட்டு வைத்திருக்கிறார் அமைச்சர். கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு வலுப்பட்டு, மக்கள் போராடக்கூடாது என்பதுதான் அவர்களின் திட்டம். இந்த விதியை ரத்து பண்ணச் சொல்லி தமிழக அமைச்சரவை முடிவெடுத்ததா அல்லது கருப்பணனே தன்னிச்சையாக முடிவெடுத்தாரா என்பதை முதல்வர் எடப்பாடிதான் விளக்க வேண்டும்''’என்றார் கொந்தளிப்புடன்.

""தமிழக மக்களுக்கு எதிராக மாபெரும் சதியைச் செய்திருக்கிறார்''’என்று ஆரம்பித்த, தற்காப்பு விவசாய சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான சென்னிமலை பொன்னையன், ""கருத்துக் கேட்புக் கூட்டங்கள் எல்லாம் சடங்கு, சம்பிரதாயத்திற்காக நடத்தப்பட்டவரை எந்தப் பிரச்சினையும் எழவில்லை. ஆனால் இப்போது சமூகச்செயற்பாட்டாளர்களும் சோஷியல் மீடியா அன்பர்களும் கலந்துகொள்வதால், ஆள்வோருக்கு அடிவயிறு கலங்குகிறது. அவர்கள் அடிக்கும் கொள்ளைக்கும் தடையாக இருக்கிறது. அதனால்தான் ஜனநாயக நெறிமுறையை குப்பையில் போட்டுவிட்டார்கள்''’என்றார்.

தமிழக அமைச்சர்களால் இன்னும் என்னென்ன கூத்தெல்லாம் நடக்கப்போகிறதோ?

-ஜீவாதங்கவேல்