டிகர் விஜய் நடித்த "லியோ' திரைப்பட ட்ரெய்லரை சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங்கத்தில் வெளியிடப்பட்டபோது, விஜய் ரசிகர்களின் அட்டகாசத்தால் நாற்காலிகள் உடைத்தெறியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய "லியோ' திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லர் அக்டோபர் 6ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து சென்னை கோயம்பேட்டிலுள்ள ரோகிணி திரையரங் கின் வாகன நிறுத்தத்தில் பிரமாண்ட எல்.இ.டி. திரை அமைத்து டிரெய்லரை வெளியிட கோயம்பேடு காவல் நிலையத்தில் அனுமதி கோரப்பட்டது. சமீபத்தில் ரஹ்மான் இசைநிகழ்ச்சி அசம்பாவித அனுபவம் காரணமாக, விபத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. அப்படியான சூழலில், காவல்துறையின் அனுமதி இல்லாமலேயே கடந்த 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு ரோகிணி திரையரங்கினுள் லியோ திரைப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது.

th

திரையரங்கிற்குள் சுமார் 700 பேர் மட்டுமே அமர்ந்து பார்க்க முடியும் என்ற நிலையில், ஏராளமான விஜய் ரசிகர்கள் மதியம் 2 மணியிலிருந்தே மேள தாளத்துடனும், கேக் வெட்டி கொண்டாட்டத்துடன் திரளத் தொடங்கினர். போகப்போக ஆயி ரக்கணக்கில் ரசிகர்கள் கூட, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், டிரைலர் திரை யிட திரையரங்கின் கதவைத் திறந்ததும், சுமார் 1,300க்கும் மேற்பட்ட ரசிகர்கள் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளில் மோதி, திரையரங்கினுள் புகுந்து, நாற்காலிகள் மீது ஏறி நின்று நடனம் ஆடியதால் நாற்காலிகள் உடைந்தன. கண்ணாடிகள் நொறுங்கின. ரசிகர் களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறினர். டிரெய்லர் முடிந்ததும் வெளியேறி சாலைக்கு வந்த ரசிகர்கள், சாலையிலும் கும்மாளம் போட்டதால், கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் நகரமுடியாமல் வரிசைகட்டி நின்றதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெருக்கடியில் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக தளபதி மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொண்டபோது அவர் செல்போனை எடுக்க வில்லை. பின்னர், தளபதி மக்கள் இயக்க மாவட்ட செயலாளரான பூக்கடை குமாரிடம் பேசினோம். "சார் எதுவாக இருந்தாலும் பொதுச்செயலாளர் கிட்டதான் பேசணும். இந்த நிகழ்வுக்கும் தளபதி மக்கள் இயக்கத்திற்கும், ரசிகர் மன்றத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது'' என்று தொடர்பை துண்டித்தார். கோயம்பேடு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் கூறுகையில், "ரோகிணி திரையரங்கம் சார்பில், திரையரங்க வாகன நிற்குமிடத்தில் பெரிய எல்.இ.டி. திரை அமைத்து லியோ திரைப்பட ட்ரெய்லர் வெளியிட அனுமதி கேட்டனர். பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுக்கப் பட்டது. ஆனால் திரையரங்கினுள்ளே திரையிடு வதை நாங்கள் தடுக்க முடியாது. அவர்கள் எவ்வளவு பேரை உள்ளே அனுமதித்தார்களென்ற தகவலையும் எங்களுக்கு தரவில்லை. இது சம்பந்தமாக எந்தத் தரப்பிலிருந்தும் புகார்கள் வராத காரணத்தால், போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் இல்லை'' என்று முடித்துக்கொண்டார்.

சம்பவத்தன்று வாகன நெரிசலில் சிக்கிக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அசோக்குமார் கூறுகையில், "சம்பவம் நடந்த அன்னைக்கு நான் பூந்தமல்லி நீதிமன்றத்தில் வழக்கை முடித்து விட்டு வேறொரு வழக்குக்காக பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியே உயர்நீதிமன்றம் சென்று கொண்டிருந்தேன். அப்போது மதுரவாயலிலிருந்தே கடுமையான போக்குவரத்து நெரிசல். விசாரித்தபோது, விஜய்யின் லியோ திரைப்பட ட்ரெய்லரை ரோஹிணி தியேட்டரில் வெளியிட்டதால், 2000க்கும் மேற்பட்ட ரசிகர்களால் நெருக்கடி ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. என் வாகனத்தோடு ஆம்புலன்ஸும், வெளியூர் செல்லும் பேருந்துகளும் சிக்கித் தவித்தன. ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்காவிட்டால் அரசியல் என்கிறார்கள். அனுமதி வழங்கினாலோ, ஆயிரக்கணக்கில் திரண்டு, மேளமடித்து, குத்தாட்டம் போட்டு, சாலையை மறித்து பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

இந்நிகழ்ச்சியை போலீசார் தடுத்திருந் தால் சீமானே தலையிட்டு, தம்பி விஜய் விழாவுக்கு போலீஸ் அனுமதி வழங்க வில்லைன்னு சொல்லி அரசியல் செய்வார். இந்த ரசிகர்களின் கூட்டத்தை போலீசார் கலைக்க முற்பட்டால், காவல்துறையை ஏவிவிட்டு தாக்குகிறார்கள் என்றும் கூறியிருப்பார். ஆக, இவர்களின் அரசியலைத் தாண்டி, பாதிக்கப் படும் பொதுமக்களையும் பார்க்க வேண்டும்'' என்றார்.

இச்சம்பவம் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோரிடம் கேட்டோம். "இது தொடர்பாக போலீசா ருக்கு எந்தப் புகாரும் வரவில்லை. வாகன நெரிசல் தொடர்பாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளேன்'' என்று தெரிவித்தார்.

கட்சிக் கூட்டம், ட்ரெய்லர் ரிலீஸ், ஊர்வலம், ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில், தங்கள் சுயநலத்துக்காக கூட்டத்தைத் திரட்டி, வாகன நெரிசலை ஏற்படுத்தும் இது போன்ற தலைவர்களுக்கு பொது மக்களின் சிரமங்கள் என்றைக் குத்தான் புரியப்போகிறதோ!

Advertisment