தமிழகத்தில் சிறப்பான கல்வி வழங்கப்படுகிறது. செங்கோட்டையன் தன் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்''’என ரஜினி பாராட்டி ஒரு மாதம்கூட ஆகவில்லை, பள்ளிக்கல்வித்துறை டெண்டர்களில் ஊழல்கள் நடைபெறுவதாக புகார் கிளம்பியுள்ளது.
மாநில பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்திலுள்ள 6,029 உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஐ.சி.டி. கற்பித்தல் மற்றும் கற்றல் Information and communication Technologies)மற்றும் 3000 மேல்நிலை, உயர்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்க டெண்டர் விடப்பட்டிருக்கிறது.
இந்த டெண்டர் குறித்தும் அதன் முறைகேடுகள் குறித்தும் சிறுநிறுவனங்கள் முணுமுணுக்க ஆரம்பித்திருக்கின்றன. ""தமிழ்நாடு பாடநூல் கழகம் மாநில பள்ளிக்கல்வித் துறை சார்பா இரண்டு டெண்டர்களை வெளியிட்டிருக்கு. டெண்டர் என்பது பொதுவானதாக இருக்கவேண்டும். ஆனால் இந்த டெண்டரை ஐ.எல்.அண்ட் எஃப்.எஸ்., எச்.பி., எல் அண்ட் டி நிறுவனங்களுக்குக் கொடுக்கவேண்டுமென அரசு, அதிகாரிகள் தரப்பு முடிவுசெய்து செயல்பட்டிருக்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கு மட்டுமே செல்லவேண்டும் என திட்டமிட்டு விதிமுறைகளையும் ஆவணங்களையும் தயாரித்திருக்கிறார்கள்.
"ஸ்மார்ட்' கல்வி பிற மாநிலங்களில் பல்லாண்டுகாலமாகச் செயல்பட்டு வந்தாலும் தமிழகத்தில் மட்டுமே ஐந்தாண்டுகளுக்கும் மேலாக கமிஷன் பிரச்சனை காரணமாக டெண்டர் நடைபெறாமல் இருந்தது. டெண்டரை எல் அண்ட் டி நிறுவனத்துக்குக் கொடுத்துவிட்டு எச்.பி., ஐ.எல்.அண்ட் எஃப்.எஸ். நிறுவனங்களின் பொருட்களைக் கொண்டு திட்டத்தைத் தொடங்கவிருக்கிறார்கள்.
இதற்குமுன்பு டெண்டர் அறிவிப்பு வரும்போது, கமிஷன் கணக்குகள் டேலியாகததால் பலமுறை டெண்டர் கைவிடப்பட்டிருக்கிறது. இம்முறை 10 முதல் 15 சதவிகிதம் கமிஷன் கேட்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த ஜூன் 23-ஆம் தேதி டெண்டர் கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டது. வழக்கமாக டெண்டர் எடுக்கவிரும்பும் நிறுவனங்களின் கூட்டமானது நடைபெறும். நிறுவனங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அந்தக் கூட்டத்தில் தெளிவுபடுத்தப்படும். ஆனால் இந்தக் கூட்டத்தின்போது "கேள்விகள் எதுவும் இருந்தால் இணையத்தில் பதிவுசெய்யுங்கள், அதில் பதிலளிக்கப்படும்' என்ற சமாளிப்புதான் வெளிப்பட்டதே தவிர, கேள்விகளுக்கான பதில் கொடுக்கப்படவில்லை.
500 கோடிக்கும் அதிகமான இந்த டெண்டர் குறித்த விவாதம், வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே நடத்தப்பட்டது. 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற டெண்டருக்கான கூட்டத்தில் மொத்தம் 20 நிறுவனங்கள் கலந்துகொண்டன. எட்டு நிறுவனங்கள் டெண்டரில் பங்கெடுத்தன. இறுதியாக ஐந்து நிறுவனங்களுக்கு அந்த டெண்டர் வழங்கப்பட்டது. யங் இந்தியா, ஆதித்யா பிர்லா, பெரிசாஃப்ட், கிறிஸ்டி நிறுவனம் மூலம் எடு.காம், எவ்ரான் ஆகிய நிறுவனங்களுக்கு 864 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் வழங்கப்பட்டது. அதன்பின்னர் அனைத்து நடவடிக்கைகளும் முடிந்து லெட்டர் ஆப் அக்செப்டன்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் எந்த நிறுவனமும் வேலைசெய்யவில்லை.
ஆன்லைன் மூலமாக டெண்டர் விடலாம். இதில் எந்தவிதமான மோசடியும் செய்யமுடியாது. அது அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் சரிப்பட்டு வராது என்பதால் நேரடியாக டெண்டர் விடப்படுகிறது. இதில் அவர்களது விதிமுறைகளுக்கு உடன்பட்டு வராத பல நிறுவனங்களை டெண்டரிலிருந்தே கழித்துக்கட்டி விடுகிறார்கள்.
இந்த டெண்டர் எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சாதகமாக அமைவதன் பின்னணியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர் வளர்மதி, பள்ளிக்கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். தமிழக அரசு சார்பில் இயங்கிவரும் எல்காட் நிறுவனம் இருக்க, அதைத் தவிர்த்துவிட்டு பாடநூல் கழகம் மூலம் டெண்டரை விடுவதே சந்தேகத்துக்குரியதுதான்.
டெண்டர் வெளியிட்டால் மூன்றுமாத காலம் அவகாசம் கொடுக்கவேண்டும். ஆனால் ஜூன் மாதம் டெண்டர் அறிவிப்பு வர, ஒரேயொரு மாத கால அவகாசம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. தற்போதுவரை டெண்டர் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவிதமான முறையான பதிலும் தராமல் நாட்களை மட்டுமே நீட்டித்துள்ளனர்.
டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள், ஆசிரியர்களுக்கு அந்த சாதனங்களைக் கையாள பயிற்சியளிக்கவும், குறிப்புகள் அடங்கிய கையேடுகளை அளிக்கவும் வேண்டும். இந்த நிறுவனங்கள் பயிற்சியோ, கையேடுகளோ வழங்குவதில்லை. இதுதவிர இதுபோல் டெண்டர் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அவற்றுக்கு அரசு சார்பிலோ, தமிழ்நாடு பாடநூல் கழகம் சார்பிலோ எந்தவிதமான பதிலும் தரப்படவில்லை''’என்கிறார்கள்.
முந்தைய காலகட்டங்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் நிறுவனங்களே இந்த டெண்டரில் பங்கேற்று வேலையை எடுத்துச் செய்திருக்கின்றன. டெண்டர் அறிவிப்பு வந்ததுமுதலே, அமைச்சர் தரப்பிடம் பல நிறுவனங்கள் அணுக, கமிஷனை கறுப்பாகக் கொடுக்காமல் வெள்ளையாகவே வங்கிக் கணக்குகள் மூலம் வந்துசேருமாறு ஏற்பாடுகள் செய்யவேண்டுமென கேட்டு நிறுவனங்களை அதிரவைத்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறு நிறுவனங்களோ முறைகேடுகளைத் தடுக்க நீதிமன்றத்தை நாடவிருப்பதாகச் சொல்கிறார்கள்.
-சி.ஜீவாபாரதி