ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக 100 நகரங்களின் திட்ட அறிக்கை, ஒன்றிய அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அதில் ஒன்றாக, திருச்சி மாநகருக்கான திட்ட அறிக்கையில், திருச்சி மலைக்கோட்டை, தில்லை நகர், காந்தி மார்க்கெட், உறையூர், அம்மா மண்டபம் ஆகிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்தும், இப்பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியைத் தவிர்க்க சாலைகளை அகலப்படுத்துவது, பாதசாரிகள், சைக்கிளில் செல்வோருக்கான தனி வழித்தடங்கள், மழை நீர் வடிகால் வசதி, 24 மணி நேரத் தடையற்ற மின்சாரம், காவிரி ஆற்றின் வடக்கு பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் நீளத்திற்கு இயற்கை சூழலுடன் கூடிய பொழுதுபோக்குப் பூங்கா உள்ளிட்டவற்றுக்காக ரூ.1,149 கோடி, நகரின் மற்ற பகுதிகளை மேம்படுத்த ரூ.617 கோடி என ஒட்டுமொத்தமாக ரூ.1,766 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு அனுப்பப்பட்டது.
ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், ஒவ்வொரு நகரத்திற்கும் ரூ.1000 கோடி ஒன்றிய அரசின் பங்காகவும், ரூ.300 கோடி மாநில அரசின் பங்காகவும் மட்டுமே ஒதுக்கப்படும். அதன்படி, கடந்த 28-06-2017 அன்று, இத்திட்டத்துக்கு திருச்சி மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டது. திருச்சி மாநகராட்சிக்கு ரூ.937.78 கோடி மதிப்பீட்டில் 38 திட்டப் பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. சத்திரம் பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துதல், மலைக்கோட்டையை மின்விளக்குகளால் ஒளிரச் செய்தல், தெப்பக்குளம் பகுதியில் பூங்கா, தெப்பக்குளத்தை தூர்வாரி மறுசீரமைப்பு செய்வதற்கு ரூ.45 கோடி, தில்லைநகர் பகுதியில் ரூ.15 கோடியில் வணிக வளாகம், உய்யகொண்டான் வாய்க்காலை அழகுபடுத்தும் பணிக்கு ரூ.50 கோடி, கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்க ரூ.11.25 கோடி, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதை வடிகாலைச் சீரமைக்க ரூ.344 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், ரூ.52.29 கோடியில் சாலைகள் சுத்தம் செய்யும் பணி, குடிநீர் விநியோகத் திட்டம் நிறைவேற்றப்பட உள்ளன. கடந்த 2017-ல் தொடங்கப்பட்ட பணிகள், வரும் 2022-ம் ஆண்டு முடிவடைய உள்ளது. இதுவரை போடப்பட்ட திட்டப்பணிகள் ஒவ்வொன்றிற்கும் நிதி ஒதுக்கப்பட்டும் பல பணிகள் முடிவடை யாமல் கிடப்பில் போடப் பட்டுள்ளன. இதனால் திருச்சி மாநகராட்சியே சீரழிந்த நிலையில், கடந்த இரு வாரங்க ளாகப் பெய்துவரும் மழையில், கால்வாய்கள் அடைத்து, சாலையில் கழிவுநீர் கரைபுரண்டு ஓடுகின்றன. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளைச் செயல்படுத்தாமல் விட்டுவிட்டு, மத்திய குழு பார்வையிட வரும்போது மட்டும் எதாவது பணியைச் செயல்படுத்துவதுபோல் காட்டி, அதற்கான பணத்தை மட்டும் பெற்றிருக்கிறார்கள். இப்படி, பணத்தைப் பெற்றுக்கொண்டு பணியைக் கிடப்பில் போடுவதை வழக்கமாக்கியிருந்தார்கள். இதனால் இப்போது திருச்சி மாநகரக் கட்டமைப்பே சிதிலமடைந்து, கழிவுநீர்க் கால்வாய்கள் அனைத்தும் பயனற்றதாக மாறிவிட்டன. கால்வாய்களுக்குமேல் மழைநீர் நிரம்பி, வணிக வளாகங்களுக்கும் மழை வெள்ளம் புகக்கூடிய அவலநிலை ஏற்பட்டுள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை, ஒன்றிய அரசிடமிருந்து கமிஷனைப் பெறுவதற்காக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு, பெயரளவில் அந்த பணிகளைச் செய்து, புகைப்படமெடுத்துக் காட்டி, ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுவந்ததால், இத்திட்டமானது, மிகவும் மோசமாக திருச்சி நகரின் கட்டமைப்பைப் பாதித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குறை கூறுகிறார்கள்.
கடந்தமுறை திருச்சி மாநகராட்சி ஆணையராக இருந்த ரவிச்சந்திரன், சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோரின் காலகட்டங்களில் நடந்த பணிகள்மீதுதான் அதிக குற்றச் சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே தற்போது தி.மு.க. தலை மையிலான அரசு, இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து வெள்ளையறிக்கை வெளியிட்டு, இப்பணிகளை முறையாகச் செயல்படுத்த வேண்டுமென்று கோரிக்கை வைக்கிறார்கள்.