1972களில் உலகளவில் பரபரப்பைக் கிளப்பிய அமெரிக்கா வின் வாட்டர்கேட் ஊழல் காரணமாக அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1974-ல் ராஜினாமா செய்ய நேர்ந்தது. அந்த ரேஞ்சுக்கு சூட்டைக் கிளப்பியிருக்கிறது நெல்லையின் அ.தி.மு.க. கால ஸ்மார்ட் சிட்டி திட்ட முறைகேடுகள். அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வெளியாகி நடவடிக்கைகள் பாயலாம் என்பதே லேட்டஸ்ட் நிலவரம். இந்த முறைகேடுகளைப்பற்றி 2020-களி லேயே வெளியிட்டது நக்கீரன்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மத்திய அரசின் பங்களிப்போடு அறிமுகப்படுத்தப் பட்டன. அத்திட்டத்தின் ஒரு பகுதிதான் நெல்லைக்கான ஸ்மார்ட் சிட்டி திட்டம். இத்திட்டத்திற்காக ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு மாநகராட்சியின் ஆணையர் உள் ளிட்ட அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

Advertisment

nellai

இத்திட்டத்தின்கீழ் நெல்லை ஜங்ஷன் பகுதியிலிருந்த பழமையான பேருந்து நிலையத்தை புனரமைப் பதற்காக ரூ.76.45 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 4.25 ஏக்கரில் அமைந்துள்ள அந்தப் பேருந்து நிலையத்தினருகே தாமிரபரணியாறு பாய்ந்தோடுகிறது. திட்டப்படி புதிய கட்டுமானங்களை அமைப்பதற்காகத் தோண்டும்போது சில அடிகளுக்கு கீழாகவே மணல் கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் அந்த மணலின் மதிப்பறியாமல் காண்ட்ராக்டர்களால் கடத்தப்பட்டு விற்பனையாகியிருக்கிறது. மணல் கடத்தலில் மயங்கியவர்கள், விதியை மீறி ஐம்பத்தி நான்காயிரம் கன மீட்டர் அளவுக்கு மணலைத் தோண்டியெடுத்து, வெளிமாநிலத்திற்கு கடத்தி, கோடி கோடியாகக் கரன்சியை அள்ளியிருக்கிறார்கள். கட்டுமானங்கள் கட்டுவதற்கு உரிய துறையின் முறையான அனுமதி பெறாமல் மணலை அள்ளிக் கடத்தியதில் சுமார் 240 கோடிகளுக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டு, அரசுக்கு வருவாய் இழப்பாகியிருக்கிறது.

Advertisment

தவிர, அப்போதைய நெல்லை மாவட்ட ஆட்சியர், மாவட்ட சுரங்கத்துறையின் இணை இயக்குனர், போலீஸ் அதி காரிகள், மாநகராட்சியின் ஆணையர், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கண்காணிப்பாளராக செயல்பட்ட மாநகராட்சியின் பொறியாளர், பொ.ப.து. அதி காரிகள், காண்ட்ராக்ட்டர்கள் உள்ளிட்ட 26 அதிகாரிகள் இந்தக் கொள்ளையை எப்படி அனுமதித்தார்கள் என்ற கேள்வி எழுகிறது. மேலும் இத்திட்டத்தில் முறையான அனுமதியின்றி ரூ.8.92 கோடி அளவுக்கு பணம் எடுக்கப்பட்டுள்ளது. தவிர இந்த மணல் கொள்ளையில் அப் போதைய ஆளும் அ.தி.மு.க. வி.வி.ஐ.பி.க்கள், எதிர்க்கட்சி பிரதிநிதி கள், பொறுப்பாளர்கள் என்று பலரும், தங்களுக்கான பங்குகளையும் வாங்கிக்கொண்டு பலனடைந்திருக்கிறார்கள்.

nellai

நேரிடையாகவும் மறைமுகமாகவும் இந்த கனிமக் கொள்ளையில் பலனடைந்தவர்கள் பற்றியும், திட்டத்தில் நடந்த முறைகேடுகள் அனைத்தையும் ஆவணமாகத் திரட்டி, 2020-ல் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடுத்திருக்கிறார் நெல்லையைச் சேர்ந்த சுடலைக்கண். வழக்கை நீதிபதிகள் விசாரித்தபோது பல்வேறு அதிர்ச்சிகர மான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

Advertisment

ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்காக தோண்டப்பட்ட மணலில் அரியவகையான தாது மணல் கலந்திருக்கிறதா எனக்கேட்டு, அதற்கான ஆய்வும் நடத்தப்பட்டிருக்கிறதாம்.

தென்மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகிற தாமிரபரணி அடித்துக்கொண்டு வருகிற மணலில் அரிய வகையான கனிமங்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

தோண்டியெடுக்கப்பட்ட இருபத்தி நான்காயிரம் கனமீட்டர் மணலில், 30% அளவுக்கு இலுமினைட், கார்னெட், தோரியம், மோனோசைட் ஆகிய கனிமங்கள் கலந்திருப்பதும், அதன் மதிப்பு பல கோடிகளென்றும் ஆய்வறிக் கையை கோர்ட்டில் சமர்ப்பித் திருக்கிறார்கள். இதையடுத்தே இவ்வழக்கை சீரியஸாக எடுத்துக்கொண்ட நீதியரசர்கள், இவ் விவகாரத்தில் தொடர் புடைய 26 அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்து நான்கு மாதங்களில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று சி.பி.சி.ஐ.டி. யூனிட்டிற்கு உத்தர விட்டிருக்கிறார்கள். நான்கு வருடங் களுக்குப் பின்பு தற்போது இந்த வழக்கு கோப்பிற்கு எடுக்கப்பட்டு மீண்டும் விசாரணை தீவிரமாகியிருக் கிறது.

பொதுநல வழக்காகத் தாக்கல் செய்த நெல்லை சுடலைக்கண்ணிடம் நாம் பேசியபோது, "இந்த வழக்கு நீதிமன்றத்தி லிருப்பதால் நான் இதுகுறித்து அதிகம் பேசக்கூடாது. ஆனாலும் 2021-ல், நீதியரசர் களான கிருபாகரன், புகழேந்தி அமர்வு நான்கு மாதங்களில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்டார்கள். ஆனால் நான்கு வருடமாகியும் சி.பி.சி.ஐ.டி. நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது விசாரணையில் நான்கு மாதங்கள் அவகாசம் கொடுத்தும் நடவடிக்கையில்லை. ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

இத்தனை ஆதாரங்கள், காரணமானவர் கள், பற்றியும் கொடுத்து என்ன நடவடிக்கை? எத்தனை பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? ரிமாண்ட் செய்யப்பட்டு பாஸ்போர்ட்கள் முடக்கப்பட்டுள்ளனவா? எனக் கேள்வி மேல் கேள்வி கேட்ட உயர் நீதி மன்றம், சி.பி.சி.ஐ.டி.க்கு 4 வாரத்திற்குள் ரிப்போர்ட் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் இதனை சி.பி.ஐ. விசாரிக்க உத்தரவிட வேண்டுமென்று கேட்டுள்ளோம். அதற்கும் வாய்ப்பிருக்கிறது. இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது இந்த வழக்கு'' என்றவர், தொடர்ந்து, "இவ்வழக்கில் குறிப்பிட்ட 26 அதிகாரிகள் மீது நடவடிக்கை மட்டுமன்றி மறைமுகமாகப் பலனடைந்த அப்போதைய அரசியல் புள்ளிகள் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது'' என்கிறார். வரும் தேர்தலுக்குள் நடவடிக்கை பாயலாம் என்பதால் தொடர்புடைய அதிகாரிகள் மட்டுமன்றி அல்வா நகர அரசியல் புள்ளிகளும் உள்ளுக்குள் அச்சத்தி லிருக்கிறார்களாம்.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்