அமலாக்கத்துறை யின் விசாரணைக்கு ஆஜராகிவிட்டு வந்துள்ளார் மூத்த அமைச்சர் துரைமுருகனின் மகனும் எம்.பி.யுமான கதிர் ஆனந்த் ஆஜராகும்வரை, தன்னை கைது செய்து விடுவார்களோ என நடுங்கிக்கொண்டிருந்த கதிர், ஆஜரானதற்குப் பிறகு ரிலாக்ஸ் மூடில் இருக்கிறார் என்கின்றனர் உடன்பிறப்புகள். ஆனால், அந்த ரிலாக்ஸ் மூட் எத்தனை நாளைக்கோ என்கிற பயமும் அவரது குடும்பத்தினரிடம் பரவியுள்ளது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கோடிக்கணக்கில் பணத்தை தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் பதுக்கி வைத்திருக்கிறார் என்கிற புகாரின் அடிப்படையில் அவர் தொடர்பான வீடு, கல்லூரி, அலுவலகம் என பல இடங் களிலும் அதிரடி ரெய்டு நடத்தியது அமலாக்கத்துறை.
அப்போது, வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பூத் சிலிப்புடன் கட்டி வைக்கப்பட்ட 11 கோடி ரூபாயை கைப்பற்றினர். அதில், 2000 ரூபாய் கட்டுகளும் அடக்கம். அந்த ரெய்டை தொடர்ந்து கதிர்ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்தது அமலாக்கத்துறை. அதேசமயம், தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு பிறகு தேர்தல் நடந்தபோது அதில் வெற்றிபெற்று எம்.பி.யானார் கதிர்ஆனந்த். மீண்டும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/kathir_6.jpg)
இந்த நிலையில், 2019 தேர்தலின்போது கைப் பற்றப்பட்ட கோடிகள் குறித்து விசாரிக்க குறிப்பிட்ட இடைவெளியில் 7 முறை கதிர்ஆனந்துக்கு சம்மன் அனுப் பினர் ஈ.டி. அதிகாரிகள். சம்மனுக்கு நேரில் ஆஜராகாமல் அதனை அலட்சியப்படுத்தியே வந்தார் கதிர். இதனை மத்திய நிதி அமைச்சகத்துக்கு அவ்வப்போது தெரிவித்தபடி இருந்தது அமலாக்கத்துறை. தங்கள் மேலிடத்துக்கு தகவல் தெரிவித்த கையோடு, "ஆஜராகாமல் அலட்சியப்படுத்துவது உங்களுக்கு எதிராகவும் முடியும்; யோசித்துக்கொள்ளுங்கள்' என்று கதிர் தரப்புக்கும் தகவல் பாஸ் செய்திருந்தனர். ஆனால், இதற்கெல்லாம் அசரவில்லை கதிர்ஆனந்த்.
இப்படிப்பட்ட சூழலில்தான், நீண்ட மாதங் களாக நிலுவையிலுள்ள வழக்குகளை அடுத்தகட்டத் துக்கு நகர்த்துங்கள்; வழக்கினை முடிக்கும் முயற்சியில் கவனம் செலுத்துங்கள் என்று அமலாக்கத்துறைக்கு மத்திய நிதி அமைச்சகத்திலிருந்து கட்டளையிடப் பட்டது. இதனையடுத்துதான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கதிர்ஆனந்த் தொடர்புடைய கல்லூரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் தங்களின் அதிரடி சோதனையை நடத்தினர் ஈ.டி. அதிகாரிகள். அப்போது, வெளிநாட்டில் இருந்தார் கதிர்ஆனந்த். இந்த ரெய்டில் கல்லூரியிலிருந்து கணக்கில் காட்டப்படாத 2 கோடி ரூபாயையும், மற்ற இடத்தில் 75 லட்ச ரூபாயையும் கைப்பற்றினர். பல டிஜிட்டல் ஆவணங்களும் சிக்கின.
இந்த நிலையில், 2019 மற்றும் தற்போது கைப் பற்றப்பட்ட கோடிகள், ஆவணங்கள் அனைத்தையும் ஆராய்ந்து 300-க்கும் அதிகமான கேள்விகளை தயாரித்தது அமலாக்கத்துறை. இதற்கெல்லாம் கதிர்ஆனந்திடம் பதில் பெற வேண்டி, ஜனவரி 22-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என புதிதாக அவருக்கு சம்மன் அனுப்பினர்.
அவசரம் அவசரமாக டெல்லிக்கு பறந்த அமைச்சர் துரைமுருகன், சீனியர் வழக்கறிஞர்கள் பலரிடம் ஆலோசனை செய்திருந்தார். அப்போது, "ஈ.டி.சம்மனை தொடர்ச்சியாக புறக்கணிப்பது சட்ட ரீதியாக உங்களுக்கு வலுச் சேர்க்காது. ஒருமுறை அவரை (கதிர்) நேரில் ஆஜராகச் சொல்லுங்கள். மற்றதை சட்டரீதியாக பார்த்துக் கொள்ளலாம்' என்று துரைமுருகனிடம் சீனியர் வழக்கறிஞர்கள் எடுத்துச் சொன்னார்கள். இதனை மகன் கதிர்ஆனந்திடம் நினைவுபடுத்திய துரைமுருகன், கடந்த 19-ந் தேதி இது குறித்து அவரிடம் ஆழமாக விவாதித்திருக்கிறார். ஆனால், அவர் அதனை காதில் போட்டுக் கொள்ளவில்லை.
மாறாக, டெல்லியிலுள்ள தனது வழக்கறிஞர் நண்பர்களிடம் கதிர்ஆனந்த் விவாதிக்க, அவர்கள் கொடுத்த யோசனையில், தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ள அமலாக்கத்துறையின் சம்மனை எதிர்த்து கடந்த 20-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தார் கதிர்ஆனந்த்.
உச்சநீதிமன்றமோ, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடுங்கள் என்று கறாராகத் தெரிவித்துவிட் டது. இந்த உத்தரவின்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிடலாமா? என்று சட்ட நிபுணர்கள், வழக்கறிஞர்கள், வழக்கை ஏற்கனவே சந்தித்தவர்கள் என பலரிடமும் துரைமுருகனும், கதிர்ஆனந்தும் விவாதித்தார்கள்.
21-ந் தேதி நீண்ட ஆலோசனை நடந்தது. அந்த ஆலோசனையில், "உச்சநீதிமன்றம் சொன்ன தற்கேற்ப சென்னை உயர்நீதிமன்றத்தை நாம் அணுகினாலும், மக்கள் பிரதிநிதியாக இருப்பவர் சட்டத்தை மதிக்க வேண்டாமா? ஆஜராகுங்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி அட்வைஸ் செய்து நமது மனுவை தள்ளுபடி செய்துவிட்டால் அது அமலாக் கத்துறைக்கு மேலும் சாதகமான சூழலை ஏற்படுத் தும். நமக்கு பின்னடைவாகும். சிக்கலையும் அதி கரிக்கச் செய்யும். அதனால், இனியும் யோசிக்காமல் ஒரு முறை நேரில் ஆஜராகலாம். விசாரணையில் என்னதான் கேட்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளலாமே?'' என்று துரைமுருகனிடமும் கதிர்ஆனந்திடமும் சட்ட நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அப்போது, "2019-ல் நடந்த ரெய்டின்போது கைப்பற்றிய பணத்தை தற்போது ரெய்டில் கைப் பற்றிய பணமாக திடீரென்று இப்போது ரிலீஸ் செய்கிறது அமலாக்கத்துறை. அப்படியானால், என்னை கைது செய்யத் திட்டமிடுகிறார்கள் என்று தானே யோசிக்க வேண்டியதிருக்கிறது'' என்று கதிர்ஆனந்த், தனது பயத்தை வழக்கறிஞர்களிடம் வெளிப்படுத்தியிருக்கிறார். அதற்கு வழக்கறிஞர்களோ, "ஆஜராகாமல் தவிர்ப்பதன் மூலம் தப்பித்துவிட முடியுமா? சம்மனுக்கு ஆஜ ராகாததை சுட்டிக்காட்டி உங்களை கைது செய்ய நீதிமன்றத்தை அமலாக்கத்துறை அணுகினால் நம்மால் என்ன செய்யமுடியும்? அதனால், ஒருமுறை நேரில் ஆஜராகுங்கள். அடுத் தடுத்து நடப்பதை சட் டபடி எதிர்கொள் வோம். அதன் பிறகு உங்கள் விருப்பம்'' என்று தெரிவித் திருக்கிறார்கள்.
இந்த சூழலில், முதல்வர் ஸ்டாலினை தொடர்புகொண்டு துரைமுருகன் விபரங்களைச் சொல்ல, ’"அண்ணே…பயப்பட வேண்டாம். தம்பியை ஆஜராக சொல்லுங்கள். எதுவும் நடக்காது, பார்த்துக்கொள்ளலாம்''‘என்று நம்பிக்கை அட்வைஸ் செய்திருக்கிறார் முதல்வர். இதனைத் தொடர்ந்தே, சென்னையிலுள்ள அமலாக்கத்துறையின் அலுவலகத்தில் 22-ந்தேதி காலை நேரில் ஆஜரானார் கதிர்ஆனந்த்.
"வீட்டில் இருந்தால் வழக்கமாக இரவு 7:30-க்கெல்லாம் சாப்பிட்டுவிடுவார் துரைமுருகன். ஆனால், 22-ந் தேதி சாப்பிட மறுத்துள்ளார். அவரை சமாதானப்படுத்தியும், தேற்றியும் சாப்பிட வைத்துள்ளார் ஜெகத்ரட்சகன். இந்த நிலையில், "பேப்பர்களில் கையெழுத்துப் பெற்று பார்மா லிட்டிகளை முடித்துவிட்டு வெளியே வரவிருக் கிறார். கைது நடவடிக்கை இல்லை' என்று துரை முருகனுக்கு தகவல் கிடைத்த நிலையில்தான் அவர் தெம்பாக பேச ஆரம்பித்தார்' என்கிறார்கள் தி.மு.க.வினர்.
அதன்படி விசாரணையை எதிர்கொண்டு விட்டு 8 மணிக்கு மேல் வெளியே வந்த கதிர் ஆனந்த், பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, "2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது நடந்த விவகாரங்கள் பற்றி என்னிடம் அதிகாரிகள் கேள்வி கேட்டனர். அதற்குரிய பதிலைத் தெரிவித்திருக் கிறேன். மீண்டும் விசாரணை உள்ளதா? என்பதை அதிகாரிகள் தெரிவிப்பதாகச் சொல்லியிருக்கிறார் கள்''’என்றார். அமலாக்கத்துறை அலுவலகத்திலிருந்து கோட்டூர்புரம் சென்ற கதிர்ஆனந்த், தந்தை துரைமுருகன், வழக்கறிஞர்கள், தி.மு.க.வினர் என அனைவரிடமும் விசா ரணையில் நடந்ததை விவரித்திருக்கிறார்.
இதுகுறித்து நாம் விசாரித்தபோது, ”"காலை 11 மணிக்கு விசாரணையைத் தொடங்கினார்கள். கிட்டத்தட்ட 300-க்கும் அதிகமான கேள்விகளை தயாரித்து வைத்திருந்தனர். இதில் பெரும்பாலான கேள்விகள் கேட்கப்பட்டுள் ளன. அவரிடம் கேட்கப் பட்ட கேள்விகளில் அதிக பட்ச கேள்விகள் 2019 தேர்தலின்போது பிடிபட்ட பணம் குறித் தவையாக இருந்தன.
இதற்கெல்லாம், முடிந்த அளவு பதில் சொன்ன கதிர்ஆனந்த், பல கேள்விகளுக்கு சட்டென்று பதில் சொல்ல முடியாமல் திணறியிருக்கிறார். குறிப்பாக சொத்துக்கள் தொடர் பாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது தொடர் பாகவும் கேட்கப்பட்ட கேள்வி களுக்கு அவரால் அழுத்தமாக பதில் சொல்ல முடியவில்லை யாம். அத்தகைய கேள்விகளுக்கு, எனக்கு நினைவில்லை, தெரிய வில்லை, ஆடிட்டரிடம் தான் கேட்க வேண்டும், பூஞ்சோலை சீனிவாசனிடம் கேட்க வேண் டும், வக்கீல்களிடம் கேட்டுச் சொல்கிறேன் என்கிற ரீதியி லேயே பதிலளித்திருக்கிறார் .
ஒரு கட்டத்தில் அதிகாரி களிடமே கேள்வி கேட்ட கதிர், "2019 தேர்தலின்போது நடந் ததை வைத்து கேள்வி கேட்கும் நீங்கள், அப்போது கைப்பற்றப் பட்ட பணத்தை, தற்போது பிடிபட்ட பணத் தோடு சேர்த்து ரிலீஸ் செய்திருப்பது சரியா? ஏன், தவறான தகவல்களைச் சொல்கிறீர்கள்?'' என்று கதிர் கேட்க... "அதை நாங்கள் ரிலீஸ் செய்யவில்லை' என அதிகாரிகள் விளக்கம் தந்திருக்கிறார்கள்.
தொடர்ந்து விசாரணை நடத்திய அதிகாரிகள், "இப்போதே டயர்டாகிவிட்டீர்கள். அதனால் விசாரணையை இன்றைக்கு முடித்துக் கொள்கிறோம். எந்த தேதியில் அடுத்த விசாரணைக்கு உங்களால் வரமுடியும்?'' என்று கேட்க... "பட்ஜெட் தாக்கலுக்காக ஜனவரி 31-ந் தேதி பார்லிமெண்ட் கூடுகிறது. அந்த கூட்டத் தொடர் ஏப்ரல் வரை நடக்கும். ஏப்ரலுக்குப் பிறகு வைத்துக்கொள்ளலாமா?'' என கதிர் கேட்க, "உங்களுக்கு எதிரான விசாரணையை அடுத்த மாதம் 28-ந் தேதிக்குள் முடித்தாக வேண்டும். அதனால் பார்லிமெண்ட் கூடுவதற்கு முன்பு ஒரு தேதியை முடிவுசெய்து சொல்கிறோம். அப்போது நீங்கள் வரவேண்டும்' எனச்சொல்லி, பார்ஃமாலிட்டியை முடித்துக்கொண்டு அனுப்பி வைத்தனர். தற்போது ரிலாக்ஸ் மூடில்தான் இருக்கிறார் கதிர்ஆனந்த்''‘என்றனர் துரைமுருகனுக்கு நெருக்கமான தி.மு.க.வினர்.
அமலாக்கத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "சுமார் 11 மணி நேரம் விசாரணை நடந்தது. பலமுறை தண்ணீர் குடித்தார் கதிர். பல கேள்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை... திணறினார். அதிலிருந்தே அவர் பொய் சொல்வதாக அதிகாரிகள் நினைக்கின்றனர். முக்கியமான பல கேள்விகள் இன்னும் கேட்கப்படவில்லை. அந்த கேள்விகள் கேட்கப்படும்போது கதிருக்கு சிக்கல் ஏற்படும். அதனால் அடுத்த விசாரணை கதிருக்கு அக்னி பரீட்சை தான். அமலாக்கத்துறையின் ஸ்டைலே விட்டுப்பிடிப்பதுதான். அடுத்த விசாரணையில் கதிர் கைது செய்யப்பட்டாலும் ஆச்சரியமில்லை''’என்கின்றனர்.
70 ஆண்டுகால அரசியல் அனுபவம் பெற்ற சீனியரான துரைமுருகன், இதனை உணர்ந்திருப்பதால் அடுத்த விசாரணைக்கு கதிர் ஆஜராகும்போது கைது நடவடிக்கை எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக இப்போதே காய்களை நகர்த்த துவக்கியிருக்கிறார் என்கிற தகவலும் கிடைக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2025-01/kathir-t.jpg)