ரசியல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆறுதல் கிடைத்துள்ளது. அது அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வலிமையைத் தருமா என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்.

கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி 13 மாநிலங்களைச் சேர்ந்த 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக் கும், மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. நவம்பர் 2-ஆம் தேதி இத்தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அஸ்ஸாமைத் தவிர்த்து பெரும்பாலான மாநிலங்களில் பா.ஜ.க. தோல்வியைத் தழுவியது அக்கட்சியின் தலைமைக்கும் மோடிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி, மத்தியப் பிரதேசத்தின் ஹவேலி, கன்ட்வா ஆகிய மூன்று பாராளுமன்றத் தொகுதி களுக்கும் அஸ்ஸாம் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம், ஹிமாலயம், மேகாலயா என தலா மூன்று தொகுதிகள், பீகார், கர்நாடகம், ராஜஸ்தானில் தலா 2 தொகுதிகள், ஆந்திரம், தெலுங்கானா, அரியானா, மகாராஷ்டிரம், மிஸோரத்தில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 29 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

cc

மத்தியப் பிரதேசத்தில் நடந்த இரு பாராளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் கண்ட்வா தொகுதியில் பா.ஜ.க.வும், ஹவேலி தாத்ரா நகர் தொகுதியில் சிவசேனையும் வெற்றிபெற்றுள்ளன. ஹிமாச்சல பிரதேசத்தில் மண்டி தொகுதி தேர்தலில் அம்மாநில முன்னாள் முதல்வர் வீரபத்ரசிங்கின் மனைவி பிரதிபா சிங் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பா.ஜ.க.வின் குஷால் தாக்குரை தோல்வியடையச் செய்தார்.

Advertisment

ஹிமாச்சலப் பிரதேசத்தில் பாராளுமன்றத் தொகுதிகளில் மட்டுமின்றி பதேபூர், அர்கி, ஜூப்பல் -கோட்காய் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளதால் அம்மாநிலத்தில் காங்கிரசின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பா.ஜ.க. வேட்பாளர் ரோகித் தாக்குர் டெபாசிட் இழந்துள்ளது கட்சித் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தரியாவாட், வல்லப்நகர் தொகுதிகளுக்கு நடை பெற்ற இடைத்தேர்தலில், இரு தொகுதிகளிலும் வென்று தன் செல் வாக்கைக் காட்டியுள்ளது காங்கிரஸ்.

கர்நாடக மாநிலத்தில் சிந்தகி, ஹானகல் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில், பா.ஜ.க. சிந்தகி தொகுதியிலும், காங்கிரஸ் ஹானகல் தொகுதியிலும் வெற்றியடைந்துள்ளன. கர்நாடக முதல்வர் பசவராஜின் சொந்த மாவட்டமான ஹாவேரியில் அடங்கிய ஹானகல் தொகுதியில் காங்கிரஸ் வென்றிருப்பதால், அக்கட்சியினர் மத்தியிலும் ராகுலுக்கும் சோனியாகாந்திக் கும் வரவேற்பைப் பெருக்கியுள்ளது.

Advertisment

பா.ஜ.க. ஆட்சியிலிருக்கும் அரியானாவில் ஏல்னாபாத் தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க. கோட்டைவிட, தேசிய லோக்தள் கட்சி வென்றுள்ளது. விவசாயிகளின் கோபத்தைத் தீர்க்காமல், இங்கு பா.ஜ.க. மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வருவது சிரமம் என்பதே இந்த இடைத்தேர்தல் சொல்லும் சேதி.

சமீபத்தில் மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, அங்கே முழுக் கவனத்தையும் குவித்த பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸின் பல்வேறு பிரமுகர்களை வலைவீசி தங்களது கட்சிக்கு இழுத்தது. திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தவும், மம்தாவை மனோரீதியாக பலவீனப்படுத்தவும் தன் முழு பலத்தையும் செலவிட்டது. ஆனால் பா.ஜ.க.வின் முயற்சியை முறியடித்து தன் பலத்தை நிரூபித்தார் மம்தா.

சட்டமன்றத் தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து, மேற்குவங்காள பா.ஜ.க. முகாமில் சலசலப்பு ஏற்பட்டது. பா.ஜ.க.வில் இணைந்த பலரும் மீண்டும் திரிணாமுலுக்கு திரும்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் மேற்குவங்கத்தின் நான்கு தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நான்கையும் கைப்பற்றியிருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ்.

modi

இதில் பா.ஜ.க. வசமிருந்த தின்காட்டா, சாந்திபூர் தொகுதிகளிலும் திரிணாமுல் வென்றிருப்பதும், நான்கு தொகுதிகளிலும் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசம் காட்டியிருப்பதும் பா.ஜ.க.வின் முகம் சுருங்கக் காரணமாயிருக்கிறது. வங்கத்து ராணி தான்தான் என பா.ஜ.க.வுக்கு வலுவான சேதியைச் சொல்லியிருக்கிறார் மம்தா.

அஸ்ஸாம் தேர்தல் முடிவு மட்டும்தான் பா.ஜ.க.வுக்கு ஆறுதல் அளித்துள்ளது. ஐந்து தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் மூன்றில் பா.ஜ.க.வும், இரண்டில் அதன் கூட்டணிக் கட்சியான யு.பி.பி.எல்.லும் வெற்றி பெற்றுள்ளன.

மத்தியப்பிரதேச இடைத்தேர்தலில் காங்கிரஸின் வசமிருந்த இரு தொகுதிகளை பா.ஜ.க. வெல்ல, ராய்கான் தொகுதியை காங்கிரஸ் வென்றிருக்கிறது. தெலுங்கானா இடைத்தேர்தலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதியை மீறி, பா.ஜ.க. வென்றுள் ளது நம்பிக்கை தரும் அம்சம். இதர தொகுதிகளுக்கான தேர்தல்களில் மேகாலயாவில் மேகாலயா ஜனநாயகக் கூட்டணியும், பீகாரில் ஐக்கிய ஜனதாதளமும், ஆந்திரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸும் வென்றுள்ளன.

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வின் செல்வாக்கை யும் அதிகாரத்தையும் மீறி எதிர்க்கட்சிகள் வெற்றிக்கொடி நாட்டியிருப்பது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா அல்லது இடைத்தேர்தலில் எதிர்க் கட்சிகளுக்கு கிடைக்கும் வெற்றியைக் கணக்கிட்டு, அதற்கேற்ப பொதுத்தேர்தலில் பல வியூகங்களை வகுக்கும் பா.ஜ.க.வின் வெற்றிப் பயணம் தொடருமா என்ற பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது இந்தியா.