நிலவைக் காட்டி நமது பாட்டிகள் சோறூட்டிய காலம்போய் நிலவிலேயே பார்ட்டி கொண்டாடும் காலம் சீக்கிரமே அமையும் போலிருக்கிறது. ஜூலை 22 மதியம் 2.43 மணியளவில் சந்திரயான் 2-ஐ வெற்றிகரமாக விண்ணில் ஏவிச்சாதித்துள்ளனர் நமது விஞ்ஞானிகள்.

cc

சந்திராயன்

Advertisment

ஐ.எஸ்.ஆர்.ஓ. எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் அக்டோபர் 2008-ல் நிலவை ஆராய்வதற்காக சந்திராயன் அனுப்பப்பட் டது. வெற்றிகரமாக நிலவிலிறங்கி கிட்டத்தட்ட ஓராண்டுகாலம் நிலவை ஆராய்ந்த இந்த சந்திராயன், நம்மாலும் விண்வெளி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இந்தியர் களிடையே வளர்வதற்கு காரண மாக அமைந்தது.

sivanநிலவில் இறங்கி வெற்றிக் கொடியைப் பறக்கவிட்ட நாலா வது நாடு என்ற பெருமையும் சந்திராயனால் நமக்குக் கிடைத் தது. கிட்டத்தட்ட 386 கோடி செலவுபிடித்த இந்த ஆராய்ச்சி, நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, சொன்னது. நேரடியாக நிலவில் நீர் இல்லாவிட்டாலும், நில வின் மேற்புறத்தில் காணப் படும் வாயுப்படலத்தில் நீருக்கான மூலக்கூறுகளும் நிலவின் துருவப் பகுதி களில் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதையும் கண்டுபிடித்தது சர்வதேச சமூகத்தில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தியது.

சந்திராயன் 2

Advertisment

சந்திராயன் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து சந்திராயன் 2-க்கான அனுமதியை இந்திய அரசு வழங்கியது. எனினும் ஆயத்தப் பணிகள் முதல் ஆய்வுத் தயாரிப்பு வரை முறையாகத் திட்டமிட்டு விண்ணில் ஏவ கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகியிருக்கிறது. அனைத்துப் பணிகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு ஜூலை 15-ஆம் தேதி சந்திராயன் 2 அனுப்பப்படுமென அறிவிக்கப்பட்டது. ஆனால் சந்திராயனுக்கு எரிபொருள் நிரப்பும்போது சில தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டுபிடிக்கப்பட்டு திட்டமிட்டபடி ஏவமுடியாமலானது.

அதன்பின் தொழில்நுட்பக் கோளாறுகள் களையப்பட்டு ஜூலை 22-ஆம் தேதி ஏவப்படு மென தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவி லிருந்து சந்திராயன் 2 ஏவப்பட்டது. வானில் ஏவப்பட்ட 16 நிமிடங்களில் புவிவட்டப் பாதையை வெற்றிகரமாகச் சென்றடைந்தது. சரியாக இன்னும் 48 நாட்களில் சந்திராயன் 2 நிலவில் சென்றிறங்கு மென கணிக்கப்படுகிறது.

மனிதன் நிலவில் கால்வைத்து ஐம்பதாண்டு ஆனதையொட்டிய கொண்டாட்டங்கள் ஜூலை 21-ஆம் தேதி உலகெங்கும் நடைபெற்றன. 1969-ல் அப்போலோ எனும் விண்வெளி ஓடத்தை நிலவுக்கு அனுப்பியது அமெரிக்கா. ஆர்ம்ஸ்ட்ராங்கும் ஆல்ட்ரினும் நிலவில் சென்றிறங்கி, உலகையே வாய்பிளக்க வைத்தனர். அந்த ஐம்பதாம் ஆண்டு கொண்டாட்டத்துக்கு மறுநாள் சந்திராயன் 2 ஏவப்பட்டது மிகப் பொருத்தமாகவும், சந்திராயன் 2-ன் தொழில்நுட்பக் கோளாறு இதற்கெனவே நிகழ்ந்ததுபோலவும் ஆகியது.

அதுதான் ஏற்கெனவே ஒருமுறை விண் கலத்தை அனுப்பி நிலவைச் சோதித்தாகிவிட்டதே… பிறகெதற்கு இன்னொரு விண்கலம்? இதுவரை நிலவுக்கு விண்கலத்தை அனுப்பி சோதித்தவர் களெல்லாம், அதன் வடதுருவத்தைத்தான் ஆராய்ந்திருக்கிறார்கள். அதன் தென்துருவத்தை யாரும் ஆராய்ந்ததில்லை. எனவே தென்முனையைக் குறிவைத்து ஆராயும் நோக்கில் சந்திராயன் 2 அனுப்பப்படுகிறது.

sc

சந்திராயன் 2-விலிருந்து நிலவில் சென்று இறங்கப்போகும் லேண்டருக்கு இந்திய வானவியல் அறிஞரான டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக "விக்ரம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. தாதுப்பொருள் குறித்த பகுப்பாய்வு, சிக்கலான நிலவியல் ஆய்வு என பல்வேறு நோக்கத்தோடு சந்திராயன் 2 ஏவப்பட்டுள்ளது. தவிரவும் நிலவின் பரப்பில் விண்கலத்தை இறக்கும் முயற்சியும் இதில் அடங்கும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா மூன்று நாடுகளே இதுவரை இதைச் சாதித்துக் காட்டியுள்ளன. சந்திராயன் 1-க்கு 386 கோடி ரூபாய் செலவென்றால், சந்திராயன் 2 அதைவிட 614 கோடி ரூபாய் கூடுதலாக செலவுவைத்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநரான சிவன், ""இந்த சந்திராயன் 2 திட்டத்தில் பணிபுரிந்தவர்களில் 30 சதவிகிதம் பேர் பெண்கள். அதுமட்டுமல்ல முத்தையா வனிதா, ரிது கரிதால் எனும் இரு பெண்களும் சந்திராயன் 2 வில் முக்கிய பொறுப்பு வகிக்கின்றனர். வனிதா, ஐ.எஸ்.ஆர்.ஓ.வின் முதல் திட்ட இயக்குநராவார். தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் செயற்கைக்கோள்களுக்கான, கணினிகளின் தரவுகளைக் கையாளும் முக்கிய பொறுப்பு இவருடையதாகும்.

ரிது, சந்திராயன் 2-வின் மிஷன் டைரக்டர் களுள் ஒருவர் என்பதோடு, இந்தியாவின் மார்ஸ் மிஷனிலும் முக்கியப் பொறுப்பு வகிப்பவர். இருவரும் ஐ.எஸ்.ஆர்.ஓ.வில் இருபதாண்டு அனுபவம் மிக்கவர்கள்''’’ என்கிறார். பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் மட்டுமல்ல… சந்திராயன் மாதிரியான விண்கலன் ஏவுதலும் பெண்களுக்கு வசப்படும் என நம் நாட்டுப் பெண்கள் நிரூபித்திருக்கிறார்கள்.

அதேசமயம், உத்தரபிரதேசத்தில் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் இல்லாமல், பிஞ்சுக் குழந்தைகள் நூற்றுக்கணக்கில் இறந்ததையும் நாம் கண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கொடுமையும் நடந்தது. முதலில் மருத்துவத் துறைக்கு ஒதுக்கிவிட்டு சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்களை ஏவலாம் என்ற எதிர்ப்புக் குரல்களும் கேட்கின்றன. விண்வெளி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு முக்கியமா- பச்சிளம் சிசுக்கள் சாகாமலிருக்க மருத்துவத் துறைக்கு நிதி ஒதுக்கீடு முக்கியமா என்றால், இரண்டும் அதனதன் தன்மையில் முக்கியம்தான். ஆள்பவர்கள் இரண்டுக்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். சாக்கடைக் குழியில் இறங்கி விஷவாயு தாக்கப்பட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நாட்டில் சந்திராயன்களின் சாதனைகளும் தொடர்கின்றன.

-க.சுப்பிரமணியன்