எட்டு மாவட்ட மக்களின் தாகம் தணிக்கின்ற கொள்ளிடம் ஆற்றை, மணல் கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக எத்தனையெத்தனை போராட்டங்கள்?
திருமானூர் வைத்தியநாதம்பேட்டை, மழையூர், கடுவெளி, மேலப்புனவாசல், பெரும்புலியூர், வில்லியநல்லூர், திருமழப்பாடி, அரண்மனைக்குறிச்சி, அன்னிமங்கலம், காரைப்பாக்கம், மஞ்சமேடு, திருவெங்கனூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் மக்கள், தங்கள் அன்றாடப் பணிகளைக் கூட விட்டுவிட்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
2-4-18 அன்று திருமானூரில் ஆலோசனைக் கூட்டம். மறுநாள் மாவட்ட ஆட்சியரிடம் மனு, 6-ஆம் தேதி முப்பது கிராம வீடுகளிலும் கறுப்புக்கொடி. 7-ஆம் தேதி, கைகளில் கறுப்புக்கொடிகளோடு மூவாயிரம் மக்கள் திருமானூரில் போராட்டம். 21-4-18 அன்று கோட்டாட்சியருடன் பேச்சுவார்த்தை. 17-5-18 அன்று வைகோ தலைமையில் கண்டனக்கூட்டம், 19-5-18 அன்று சி.பி.ஐ. மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன் தலைமையில் கண்டனக் கூட்டம், 7-6-18 அன்று மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஏலக்குறிச்சியில் போராட்டம் என தொடர்கிறது கொள்ளிடத்தைப் பாதுகாக்கும் தியாகப்பணி.
""முன்பெல்லாம் காலால் ஓங்கி மிதிச்சாலே ஊத்துத் தண்ணி பீறிட்டு வரும். இப்ப நூறு அடிக்கு போர் போட்டாலும் தண்ணி இல்லை. கல்லணை முதல் கீழணைவரை 234 கிராமங்களுக்கு குடிநீர் ஆதாரமே இந்த ஆறுதான். திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களுக்கு கூட்டுக்குடிநீர் லைன் இங்கிருந்துதான் போகிறது. ஏற்கெனவே மணல் முழுதையும் அள்ளிவிட்டார்கள். இப்ப சுரங்கம் தோண்டி மணல் அள்ள முயற்சிக்கிறார்கள், அனுமதிக்கலாமா?'' கொதிக்கிறார் சி.பி.ஐ. தோழர் ஆறுமுகம்.
தி.மு.க. பிரமுகரும் கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளருமான தனபால் நம்மிடம், ""திருமானூர் அருகில் இதுவரை 36 லட்சம் யூனிட் மணல் அள்ளியிருக்கிறார்கள். விழிப்பனங்குறிச்சியில் 16 லட்சம் யூனிட், சுள்ளங்குடியில் 5 லட்சம் யூனிட் மணல் கொள்ளையோ கொள்ளை அடிச்சாங்க. மறுபடி மறுபடி இங்கேயே மணல் அள்ளினால் நிலத்தடியில் எப்படிய்யா நீர் இருக்கும். அரசு செய்யும் மணல் விற்பனையும் மது விற்பனையும்தான் தமிழகத்தை நாசமாக்கப்போகிறது'' என்றார்.
போராடும் மக்களோ... ""மக்கள் உணர்வுகளை, தேவைகளைப்பற்றி கவலைப்படாமல் சர்வாதிகாரத்தன்மையோடு செயல்படுகிறார் முதலமைச்சர். சட்டமன்றத்தில் பேசும்போது மணல் பயன்பாடு படிப்படியாகக் குறைக்கப்படும். மாற்று வழியில் கட்டடங்கள் கட்டப்படும். மணல் குவாரிகள் மூடப்படும் என்கிறார். ஆனால் அதிகாரிகளை விட்டு புதிது புதிதாய் மணல் குவாரிகளை திறக்க வைக்கிறார். மக்கள் முதலமைச்சர் இப்படிச் செய்யலாமா?'' வேதனைப்படுகிறார்கள்.
கல்லணை தொடங்கி கீழணை வரை மணல் அள்ளவும், போர் போடவும் முயன்ற ஜெ. ஆட்சிக் காலத்தை நினைவுபடுத்திய மார்க்சிஸ்ட் தோழர் சௌரிராஜன், ""2005-ஆம் ஆண்டு கொள்ளிடம் ஆற்றின் பல பகுதிகளில் ராட்சத போர்வெல்களைப் போட்டு சென்னைக்கு குடிநீர் கொண்டுபோகத் திட்டம் போட்டார் ஜெ; மக்கள் கொதித்து எழுந்தார்கள். மக்களைச் சமாதானப்படுத்துவதற்காக அன்றைய அமைச்சர்களான பாண்டுரங்கனை, வைத்திலிங்கத்தை, வளர்மதியை அனுப்பினார் ஜெ; அவர்களைத் துரத்தினர் மக்கள். அதன்பிறகுதான் அத்திட்டத்தைக் கைவிட்டதோடு, "கல்லணை தொடங்கி கீழணைவரை எவ்விடத்திலும் மணல் அள்ளமாட்டோம்' என்று நீதிமன்றத்தில் எழுதிக் கொடுத்தது ஜெ. அரசு. இன்று எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிடுகிறது ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அரசு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடாக மாறினாலும் அஞ்சமாட்டோம்'' என்கிறார்.
கொள்ளிடத்தை விட்டுவைக்குமா? அல்லது அதற்கு வேட்டு வைக்குமா? இந்த அரசு.
-எஸ்.பி.சேகர்