போலீஸ் காவலில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நடிப்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது என வியக்கிறார்கள் பாபாவை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசார். அவர் தளர்வாக நடக்கிறார். அவரால் அவர் செருப்பைக்கூட சரியாக போட முடியவில்லை. ஒவ்வொரு காலை எடுத்துவைக்கும் போதும் செருப்பு கழண்டுள்ளது. அவர் நிதானத்தில் இருப்பவர் போல நடந்து கொள்ளவில்லை. நீண்ட நெடுங்காலம் கஞ்சா, சாராயம் போன்ற போதைப் பொருட்களை உபயோகித்திருக்கிறார். அந்த போதைகளில் மூழ்கிய ஒருவருக்கு திடீரென்று அந்த பொருட்கள் கிடைக்காமல் போனால் புத்தி தடுமாறும். உடல் சுருங்கும். அரை போதை விடுவிப்பு மயக்கம் என்று அதைச் சொல்வார்கள். அப்படி நிலைதடுமாறி திணறுகிறார் சிவசங்கர் என்கிறார்கள்.

shivasankar

ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், அவருக்கு இதயத்தில் கோளாறு இருந்தது. அது வயோதிகத்தின் ஒரு அடையாளம். அவருக்கு கடந்த 9-ந் தேதி இதயத்தில் ஏற்பட்ட அடைப்புகளுக்காக மூன்று அடைப்பை நீக்கினர். ஆஞ்சியோ பிளாஸ்ட் என்கிற இதய சிகிச்சை மூலம் ஸ்டண்ட் பொருத்தப்பட்டது. அவர் வருடாவருடம் வடக்கை நோக்கி ஒரு பிரபல நபரைப்போல பயணம் மேற்கொள்வார். அது ஒரு போதையைத் தேடிய பயணம்தான். அந்த போதையை அவருக்கு வழங்குவதற்காக ஒரு பக்தன் இருந்தான். அவன் பெயர் சீனிவாசன்.

டெல்லியைச் சேர்ந்த சீனிவாசனுக்கு உத்தரகாண்ட், டேராடூன், ரிஷிகேஷ், அதற்குப் பக்கத்திலுள்ள நேபா ளம், இமயமலை எல்லாம் அத்துப்படி. சிவசங்கர் பாபா மேல் புகார் என்று விசா ரணையில் இறங்கிய சி.பி.சி.ஐ.டி. போலீசார், அவரது பள்ளியில் வேலை செய்யும் ஒரு பணியாளரைப் பிடித்தார்கள். அவர் பாபாவின் போதை சாம்ராஜ்யத்தைப் பற்றியும், வடக்கிலிருந்து சீனிவாசன் தரும் ராஜபோதை வஸ்துகள் பற்றியும் சொன்னார்.

Advertisment

உத்தரகாண்ட் மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ரவி என்பவர், டேராடூனில் கலெக்டராக இருக்கிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக இருப்பவர் தமிழரான செந்தில். இருவரின் துணையோடு உத்தரகாண்ட் மாநிலத்தை ஒருபக்கம் அலசினர். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.யான விஜயகுமார், டேராடூனில் இதய நோய் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிவசங்கர், 12-ந் தேதியே அங்கிருந்து புறப்பட்டுப் போய்விட்டார் என 13-ந் தேதி வழக்கை கையிலெடுத்து, 14-ந் தேதி சிவசங்கரை தேடிய சி.பி.சி.ஐ.டி.க்கு தெரிகிறது. என்ன ஆனாலும் ராஜபோதை உட்பட வடநாட்டில் சிவசங்கருக்கு அனைத்துமான சீனிவாசன் இல்லாமல் இருக்க முடியாது என முடிவுசெய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார், ஏற்கனவே தங்கள் வசம் வைத்திருந்த பாபாவின் பணியாளர் மூலமாக சீனிவாசனைத் தொடர்பு கொண்டனர். அவனுக்கு பாபாவுக்கு எதிராக தமிழக போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் எதுவும் தெரியவில்லை. அவனும் ராஜபோதை ஆசாமிதான்.

ss

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல, சிவசங்கரை சீனிவாசனை வைத்தே பிடித்தார்கள். கடைசிவரை தமிழக போலீசார் தேடுவதைப் பற்றி சீனிவாசனுக்குத் தெரியாது. சீனிவாசனும் அடிக்கடி தொடர்பின் எல்லைக்கு அப்பால் போய்விடுவான். அவன் வழியிலேயே போய், பாபாவை கைது செய்யும் போதுதான் சீனிவாசனுக்கு போலீசின் மொத்த திட்டமும் தெரியவந்தது. கைது செய்தவுடன் யாராவது உறவினர் களுக்கு தெரிவிக்க வேண்டும் என்பதால், யாரிடம் சொல்வது என சிவசங்கரின் பணியாளரைக் கேட்டதற்கு, சிவசங்கருக்கு ஒரு தங்கை இருக்கிறார் என அவன் சொன்னான். அந்தத் தங்கையைத் தேடினார்கள். அவர் அந்த பள்ளி வளாகத்தில் தங்கியிருந்தார். அவரிடம் பேச முயன்றபோது புத்தி பேதலித்ததுபோல பேசினார்.

Advertisment

சிவசங்கருக்கு மனைவி இருக்கிறாரா என தேடினார்கள். மனைவி இருக்கிறார். ஆனால் அவர் பல வருடங்களுக்கு முன்பே சிவசங்கரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் பிரிந்து சென்றுவிட்டார். அவருக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அவர்கள் அமெரிக்காவில் இருக்கிறார்கள். அங்கே அவர்கள் வேலை செய்கிறார்கள் என தகவல் சொல்ல... பேசாமல் அவரது பள்ளிக்கு தகவல் சொல்லிவிட்டு சென்னைக்கு அழைத்து வந்தார்கள்.

அவரை இரவு முழுவதும் வைத்து விசாரித்தபோது, "எனக்கு இதய நோய். மூன்று ஸ்டெண்ட் வைத்துள்ளார் கள். நான் எனது பள்ளிக் குழந்தைகளை கட்டிப்பிடித்து ஆசிர்வாதம் செய்வேன். இதிலென்ன தவறு'' என்று திருப்பிக்கேட்டார். சாதாரணமாக தொட்டால், ஏன் புகார் செய்கிறார்கள் என 250 கேள்விகளை கேட்டார்கள் போலீசார். ராவோடு ராவாக சிவசங்கர் பாபாவை ராவியது சி.பி.சி.ஐ.டி. அதனால், நெஞ்சு வலிக்கிறது என நடித்தே சமாளித்தார் சிவசங்கர்.

சிவசங்கர் கைதானபோது, அவசர அவசரமாக உடன் இருந்தவர்கள் வெளியேறிவிட்டார்கள். சிறைக்குப் போன சிவசங்கர் முற்றிலும் பயந்துவிட்டார். சிறையில் அவருக்கு நெஞ்சுவலி வந்தது. உடனே சிவசங்கரை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தார் கள். 20-ந் தேதி சிவசங்கரின் உடல் நிலை சீராகிவிட்டது என மருத் துவர்கள் அறிவித்துவிட்டார்கள். மறுபடியும் சிவசங்கரை சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளார்கள். இதற்கிடையே சிவசங்கரின் இளமைக்கால லீலைகளை தோண்டியெடுக்க ஆரம்பித்தபோது தான், தீபா, பாரதி, சுஷ்மிதா என்ற மூன்று பேர் சிக்கினார்கள். இதில் தீபாவும் பாரதியும் சிவசங்கர் மாட்டியபோதே ஓடிவிட்டார்கள். அதில் ஒருவர் வெளிநாட்டில் இருக்கிறார். தீபா தலைமறைவாகி முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அவரது முன்ஜாமீன் ரத்தாகும்பட்சத்தில் அவரைத் தூக்க, சி.பி.சி.ஐ.டி. போலீசார் வலைவீசி காத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், சுஷ்மிதா என்கிற சிவசங்கர் பாபாவின் முன்னாள் மாணவியை, ஒரு மாணவியின் புகாரின் அடிப்படையில் கைது செய்திருக்கிறார்கள்.

சிவசங்கரின் பள்ளி வளாகத்திலுள்ள லவுஞ்ச் என்கிற ரகசிய அறைக்கு சுஷ்மிதாதான் ஒரு மாணவியை அழைத்துச் சென்றிருக்கிறார். சிவசங்கர் வாயை கழுவிவிட்டு வா என அனுப்ப, அந்த மாணவியை முத்த ஆலிங்கனம் நடத்தி காம பாடம் நடத்தும்போது, சுஷ்மிதா வெளியே காவலுக்கு நின்றிருக்கிறார்.

வெளியே வந்த மாணவியிடம், "இதுபற்றி நீ வெளியே சொன்னால் அவ்வளவுதான். சிவசங்கர் கடவுள். அவரது உதடு பட நீ கொடுத்து வைத்திருக்கவேண்டும்'' என கிளாஸ் எடுத்திருக்கிறார் சுஷ்மிதா.

shivasankar

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி யான சுஷ்மிதாவுக்கு இந்த வேலைகளை செய்வதற்காக தனது பள்ளிக்கு பக்கத்திலேயே வீடு கட்டிக் கொடுத்திருக்கிறார் பாபா. சுஷ்மிதா வை சுளுக்கெடுத்ததில் அனைத்தையும் கொட்டியுள்ளார். சுஷ்மிதா உட்பட, இந்த வழக்கில் தொடர் புடைய நான்கு புகார்தாரர் சாட்சிகள் என அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வாக்குமூலம் பெற சி.பி.சி.ஐ.டி.யினர் மும்முரமாக இருக்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர், "சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசா ரணை முறை, மற்ற போலீசின் விசாரணை முறையைவிட வித்தி யாசமானது. கடுமையான விசா ரணை முறை கடைப்பிடிக்கப்படும். சி.பி.சி.ஐ.டி.யால் கைது செய்யப்படு பவர்கள், நிச்சயம் குற்றவாளிகள் என கோர்ட்டால் தண்டிக்கப்படுவார்கள்'' என்றார்.

சிவசங்கர் தொடர்பாக சுஷ்மிதாவைப் போல, பலபேரை கைதுசெய்வோம் என சி.பி.சி.ஐ.டி. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத் துடன் பல ஆண்டுகளாக சிவசங்கர் நடத்திய செக்ஸ் சாம்ராஜ்யத்தையும் ஆதாரங்களுடன் வெளிக்கொண்டுவர முயற்சியும் நடந்துவரு கிறது. பல்லாண்டுகளாக காம வக்கிரத்தை போலீசார் வெளிக்கொண்டுவரும்போது, பல திகில் திருப்பங்களுடன் அமையும். அதில் முந்தைய ஆட்சியாளர்கள், அவருக்கு உதவிய போலீஸ் கறுப்பு ஆடுகள், அவர் அமைத்திருந்த போதை சாம்ராஜ்ஜியம் உட்பட அனைத்தும் வெளிவரும் என்கிறார்கள், எதிர்பார்ப்புடன் நிகழ்வை கவனிக்கும் சமூகஆர்வலர்கள்.