சிவகாசி தொகுதியின் சிட்டிங் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோகன், மீண்டும் தி.மு.க. கூட்டணியில் வேட்பாளராக களமிறங்க முயற்சிக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் கட்சித் தொண்டர்களுடனோ, பொதுமக்களுடனோ இவர் குறிப்பிடத்தக்க நெருக்கம் காட்டவில்லை. தொழிலதிபர் அணுகுமுறையே அதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
சிவகாசியில் புதிய ரயில்வே மேம்பாலம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, தனக்காக ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு விழாவில், முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குறித்து பாசிடிவாக பேசிவிட்டார் அசோகன். இது தி.மு.க.வினருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சிவகாசி தொகுதியை மீண்டும் காங்கிரஸுக்கு ஏன் ஒதுக்கவேண்டும்? தி.மு.க. நேரடியாகப் போட்டியிடுவதே நல்லது என்ற சிந்தனை தற்போது பலமாக இருக்கிறது.
மாநகராட்சி தேர்தலில் மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளைக் கைப்பற்றியுள்ள தி.மு.க.வுக்கு சட்டமன்றத் தொகுதியையும் தங்கள் வசமாக்க வேண்டும் என்ற முனைப்பு இருக்கிறது. அதனால், தி.மு.க. வேட்பாளராகப் போட்டியிட மேயர் சங்கீதா இன்பம், மாநகர தி.மு.க. செயலாளர் உதயசூரியன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஞானசேகரன் போன்றோர் வரிசைகட்டி நிற்கிறார்கள். அதேநேரத்தில், இத்தொகுதியில் தி.மு.க. கோஷ்டிகளாகப் பிரிந்து நிற்கிறது. வார்டு வாரியாக உள்ளூர் பிரச்சினைகள் கவனிக்கப்படவில்லை என்ற குமுறல் சத்தமாகக் கேட்கிறது.
இதற்கிடையில், சிவகாசி தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உறுதியுடன் இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வலுவான ஆளுமையாகப் பார்க்கப்படுகிறார். 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றிபெற்ற இவர், சிவகாசி தொகுதியை சென்டிமெண்ட் தொகுதியாகக் கருதி, விறுவிறுவென்று தேர்தல் வேலைகளை முன்கூட்டியே ஆரம்பித்துவிட்டார். ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன், சசிகலா ஆதரவாளர்கள் பிரிந்து நிற்கும் காரணத்தால், அ.தி.மு.க. வாக்கு வங்கி முன்புபோல் இல்லை என பேசப்பட்டாலும், ராஜேந்திரபாலாஜி தனது தனிப்பட்ட செல்வாக்கை தக்க வைத்துள்ளார்.
கட்சி பாகுபாடுகளைத் தாண்டி மக்களுக்குத் தொடர்ந்து உதவிவரும் ராஜேந்திர பாலாஜியின் கொடைத்தன்மை தொகுதியில் பரவலாகப் பேசப்படுகிறது. எம்.எல்.ஏ. பதவியில் இல்லாத காலத்திலும் மக்கள் தொடர்பினை தளர்த்தாமல் கல்விச் செலவு, மருத்துவ உதவி, விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதற்கு நிதி அளிப்பது, யார் கேட்டாலும் மறுக்காமல் கோவில் நிதி தருவது என எப்போதும் அவர் பிசியாக இருப்பது அரசியல் எதிரிகளையும் வியப்பில் ஆழ்த்தக்கூடியவை. தர்மம் தலைகாக்கும் என்பது அவரது விசுவாசிகளின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. அதே நேரத்தில், தனக்கென குடும்பமோ, சுயநல வாழ்க்கையோ இல்லாதவராக இருந்தாலும், இவரது கோபக்குணம் மற்றும் கட்சிக்குள் தனக்குப் போட்டியாக யாரும் வளர்வதை விரும்பாத மனநிலை விமர்சிக்கப் படுகிறது.
சிவகாசி தொகுதி பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களை மையமாகக் கொண்டது. தினக்கூலித் தொழிலாளர் களின் எண்ணிக்கை அதிகம். நாடார், முக்குலத்தோர், நாயக்கர், பட்டியலினம் மற்றும் சிறுபான்மை வாக்குகள் கலந்துள்ள இந்தத் தொகுதியில், சாதிக் கணக்குகள் ஓரளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தினாலும், வேட்பாளரின் அணுகுமுறையும் வெற்றியைத் தீர்மானிக்கும் முக்கிய காரணமாக இருக்கும்.
பெண்களுக்கு வழங்கப்படும் நலத்திட்டங்கள் தி.மு.க.வுக்கு நம்பிக்கை அளித்தாலும், உண்மையான முடிவு களத்தில் உருவாகும் உள்ளூர் அரசியல் நிலவரத்தால்தான் நிர்ணயிக்கப் படும். மொத்தத்தில், சிவகாசி தொகுதியில் 2026 தேர்தல், அரசின் திட்டங்கள், கூட்டணி பலம் மற்றும் தனிப்பட்ட ஆளுமை ஆகிய மூன்றுக்கிடையிலான போட்டியாகவே மாறியிருக்கிறது.
சிவகாசி தொகுதியில் தேர்தல் அரசியல், வெறும் கட்சிப் போட்டியாக மட்டும் இல்லாமல், தொழில்களும், தொழிலாளர் பிரச்சினைகளும் முடிவை நிர்ணயிக்கின்றன. பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில்களில் ஈடுபடும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், அரசியல் விவாதங்களில் வெளிப்படையாகப் பேசாதவர்களாக இருந்தாலும், வாக்குப்பதிவு நாளில் ஒருங்கிணைந்த மனநிலையுடன் முடிவெடுப்பவர்கள். இவர்களின் முக்கிய எதிர்பார்ப்பு பாதுகாப்பான வேலைச்சூழல், தொடர்ச்சியான வேலைவாய்ப்பு மற்றும் திடீர் அரசாணைகளால் தொழில் பாதிக்கப்படக்கூடாது என்பதுதான். இந்தக் கோணத்தில், தொழிலாளர் பிரச்சினைகளை நேரடியாக அணுகியவர் யார் என்ற கேள்வி, தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும், விஜய் தலைமையிலான புதிய அரசியல் கட்சி குறித்து வெளிப்படையான களப்பணி இத்தொகுதியில் அதிகமாகத் தெரியாவிட்டாலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மத்தியில் ஆதரவு இருப்பதாகப் பேசப்படுகிறது. இது நேரடி வாக்கு மாற்றமாக அமையுமா அல்லது பிரதான கட்சிகளின் வாக்குகளை மட்டும் பிரிக்குமா என்பது தேர்தல் நெருக்கத்தில்தான் தெளிவாகும். அதேபோல், கூட்டணி அமைப்புகளில் கடைசி நேர மாற்றங்கள் ஏற்பட்டால், அதன் தாக்கம் சிவகாசி போன்ற பல சமுதாயத்தினரும் வாழும் தொகுதிகளில் கணிசமாக இருக்கக்கூடும்.
இந்த நிலையில், கட்சி பலம், கூட்டணிக் கணக்குகள், நலத்திட்டங்களைவிட மக்களுடன் உருவான நீண்ட கால உறவுகளும் கள அனுபவமும் இறுதி முடிவில் முக்கியமாக இருக்கும் என்ற நம்பிக்கை வெளிப்படுகிறது. அதனால், சிவகாசி தொகுதியின் 2026 தேர்தல், கடைசி நேரம் வரை பரபரப்புடன் நீடிக்கும் போட்டியாகவே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/14/sivakasi-2026-01-14-17-34-25.jpg)