அரசுத் திட்டங்கள் உள்ளாட்சி அமைப்புகளால் எந்த அளவுக்கு நேர்மையாகச் செயல்படுத்தப்படுகின்றன தெரியுமா?” எனக் கேட்டுவிட்டு, சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள பெரியபொட்டல்பட்டி ஊராட்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து, அந்த கிராமத்தின் சார்பில் ஊராட்சிமன்றத்தின் தற்போதைய துணைத்தலைவரான முத்துக்குமார் குமுறலைத் தொடர்ந்தார்.
"2011-16-ல் இந்த ஊராட்சியின் தலைவராக இருந்தார் அ.தி.மு.க.வைச் சேர்ந்த சுந்தரராஜமூர்த்தி. சென்னையில் டிரைவர் வேலை பார்த்த அவர், சொந்த கிராமத்துக்கு திரும்பிவந்து, தலைவர் பதவியை வைத்து நிறைய சம்பாதித்தார். அடுத்துவரும் தலைவரால் ஊழல் வெளிப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே, 2019-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தன் மனைவி கவிதாவைப் போட்டியிடவைத்து, பணத்தை வாரியிறைத்து இந்த ஊராட்சியின் தலைவராக்கினார். குறுக்குவழியில் தன் மகன் ஹரிகிருஷ்ணனுக்கு ஊராட்சி செயலர் போஸ்டிங் வாங்கித்தந்தார். பெயரளவில்தான் மனைவி கவிதா தலைவர் என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில், மூன்று வருடங்களாகியும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முகப்பில் அவரது (ங.சுந்தரராஜமூர்த்தி) பெயர் அழிக்கப்படாமல் உள்ளது.
இந்திரா ஆவாஸ் யோஜனா திட்டம், கடந்த 1985-ல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியால் அறிமுகப்படுத்தப்பட்டது. கிராமப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் வீடில்லாத ஆதிதிராவிடர், பழங்குடியினர், கொத்தடிமையாக இருந்து விடுவிக்கப்பட்டவர்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டித் தருவதே, இத்திட்டத்தின் நோக்கமாகும். ஏழை-எளிய மக்களுக்கு வீடு கட்ட வழங்கும் கடன் தொகையில் ஒன்றிய அரசு மானியம் தந்தது.
இந்த ஊராட்சியில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்கு 39 பயனாளிகள் தேர்வானார்கள். அதில்தான் பல குளறுபடிகள் நடந்தன. தெரிந்தே அரசு ஊழியர் ஒருவரை இத்திட்டத்தில் பயனாளியாக்கினார்கள். இது வழக்காகி நீதிமன்றம்வரை போனது. அதனால், அந்த அரசு ஊழியர் பெற்ற கடனைத் திருப்பிச்செலுத்த நேரிட்டது. ஒவ்வொரு பயனாளியிடமிருந்தும், ரூ.1 லட்சத்துக்கு ரூ.20 ஆயிரம் வரை கமிஷனைக் கறாராக கறந்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பெறப்பட்ட பயனாளிகளின் பட்டியலைச் சரிபார்த்தபோது, கட்டாத வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது போட்டது தெரியவந்தது. 35 வருடங்களுக்கு முன் சொந்தமாக வீடு கட்டியவர் பெயரில், புதிதாக வீடு கட்டியதுபோல் கணக்கு காட்டி பணம்பெறப்பட்டுள்ளது''’என, தான் அறிந்தவற்றைக் கொட்டினார்.
நாம் களமிறங்கியபோது, தங்கபுஷ்பம் கணவர் சங்கரநாராயணன், சங்கரேஸ்வரி, பாண்டியம்மாள், சுப்புத்தாய், கார்த்தீஸ்வரி, வேல்முருகன், மாரிமுத்து போன்றோரை, அந்த ஊராட்சியில் நடந்த முறைகேடுகளுக்கான சாட்சிகளாக நம்முன் நிறுத்தினார் முத்துக்குமார்.
முன்னாள் பெரியபொட்டல்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரராஜமூர்த்தியை சந்தித்தோம். "முத்துக்குமார் ஒன்றும் யோக்கியம் கிடையாது. உயர்நீதிமன்றம்வரை போன வழக்கு இது. நான் ஊழல் செய்திருந்தால், என் மனைவி கவிதாவை மக்கள் ஊராட்சிமன்ற தலைவர் ஆக்கியிருப்பார்களா?''’எனக் கேட்டார்.
சிவகாசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜுவிடம் இதுகுறித்து கேட்டபோது, "அந்த பீரியடில் நான் இல்லை. தற்போது எனக்கு புகார் எதுவும் வரவில்லை'' என்று முடித்துக்கொள்ள, தகவலறிந்து பெரியபொட்டல்பட்டி ஊராட்சி செயலராக அப்போது இருந்த தர்மர் லைனில் வந்தார். “"பாலாஜி கலெக்டர் இருந்தப்ப இலவச பட்டா கொடுத்தாங்க. அப்போது தேர்வானவர்கள் 22 பேர்தான். நான் கிளார்க். செலக்ஷன் பண்ணுற வேலை மட்டும்தான். வீடு கட்டாம யாருக்கும் பணம் கொடுத்திருக்க மாட்டோம். இன்ஜினியர், ஓவர்சீயர் மெசர்மென்ட் கொடுத்தால்தான் யூனியனில் பணம் ரிலீஸ் ஆர்டர் கொடுப்பாங்க. விதிமீறல் ஒண்ணு ரெண்டு நடந்திருக்கலாம். அக்காவுக்கு பதிலா தம்பி வீடு கட்டிருப்பாரு. தம்பிக்கு பதிலா மச்சான் வீடு கட்டிருப்பாரு. ஒருத்தர் பேர்ல லோன் வாங்கி அவங்க குடும்பத்துக்குள்ள யாராவது வீடு கட்டிருப்பாங்க. வேற ஒண்ணும் பெரிசா நடக்கல''” என்று சமாளித்தார்.
நம்மிடம் முத்துக்குமார், "மக்களுக்கு சேவை செய்யிறதா சொல்லிட்டு உள்ளாட்சி பதவிய பிடிக்க வர்றவங்க, தேர்தல்ல எதுக்காக இம்புட்டு பணம் செலவழிக்கணும்? வீடுவீடா ஓட்டுக்கு ஏன் பணம் தரணும்? அரசுத் திட்டங்கள் மக்களுக்கு நல்லது பண்ணுறதுக் குத்தான். அதுலயும் கமிஷன் அடிக்கிறது, ஊழல் பண்ணுறதுன்னு எல்லாமே நடக்குது. குறுக்கு வழியில் பணம் குவிக்கிறதுக்காகவே உள்ளாட்சி பதவில உட்கார்றதுக்கு வெறித்தனமா வர்றாங்க. ஊழல்ல அதிகாரிகளுக்கும் பங்கு போகுது. மொத்தத்துல உள்ளாட்சிங்கிற பேர்ல மக்கள் பணம் சுரண்டப்படுது. பெரியபொட்டல்பட்டியில் ஒரு முறைகேடும் நடக்கலைன்னு சொல்லுறாங்கள்ல, உரிய விசாரணையை முறைப்படி நடத்தினால் அத்தனை ஊழலும் வெளிச்சத்துக்கு வரும்''”என்றார் வேதனையுடன்.
அனைத்துவகையான ஊழல்களும், முறைகேடுகளும் கண்முன்னே நடக்க, மக்கள் வேடிக்கை பார்க்கப் பழகிவிட்டனர். இதற்கெல்லாம் தீர்வு காண்பது எப்போது?