கடலூர் மாவட்டம், வேப்பூர் சிறுபாக்கம் காவல்நிலையத்தில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் ஜம்புலிங்கம். இவர், ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை ஆசைவார்த்தை காட்டி திருமணம்செய்து அவர்களது வாழ்க்கையை நாசம் செய்துள்ளார்.
காவல்துறைக்கு புதிதாகத் தேர்வுசெய்யப் பட்ட நபர்களுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் பயிற்சி நடக்கும். போலீஸ் வேலைக்குத் தேர் வானவர்களில், பெண்களுக்கு காஞ்சிபுரத்திலும், ஆண்களுக்கு திருவள்ளூரிலும் பயிற்சி வழங்கப் பட்டு வந்துள்ளது. 2013-ஆம் ஆண்டில் காவலர் பணிக்குத் தேர்வான ஜம்புலிங்கம் திருவள்ளூருக்கும், சிந்து காஞ்சிபுரத்துக்கும் ஒருமாத பயிற்சியில் வந்தனர். இந்த சூழ்நிலையில், கடலூரைச் சேர்ந்த சிந்துவுக்கும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த ஜம்பு லிங்கத்திற்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் பயிற்சி முடிந்தநிலையில் சிந்துவுக்கு சென்னையிலும், ஜம்புலிங்கத்துக்கு விழுப்புரத்திலும் பணி வழங்கியுள்ளனர். காலப்போக்கில் இருவருமே சென்னைக்குப் பணிக்கு வந்துள்ளனர்.
ஜம்புலிங்கம், 2015-ஆம் ஆண்டு எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சிபெற்று 2016-ஆம் ஆண்டு கடலூரில் 6 மாதம் பயிற்சியை முடித்து, திருவண்ணாமலை தெள்ளார் காவல்நிலையத்தில் எஸ்.ஐ. ஆகப் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த காலகட்டத்தில் சொத்துப் பிரச்சனை யில் தன் தாயோடு தெள்ளார் காவல்நிலையம் சென்றுள்ளார் கவிதா. அந்த பிரச்சினை முடிவுற்ற நிலையில், "வேறு ஏதாவது பிரச்சினை என்றால் என்னிடம் சொல்லுங்கள்' என, கவிதாவின் தாயா ரிடம், ஜம்புலிங்கம் அவருடைய தொடர்பு எண் ணைக் கொடுத்துள்ளார். அப்படியே "உங்கள் பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேன்' என கவிதாவின் தாயிடம் தெரிவித்துள் ளார் ஜம்புலிங்கம். அதற்கு கவிதாவின் அம்மா, “"இப்போதுதான் கல்லூரி படித்துவருகிறாள், பிறகு பார்ப்போம்'’என சொல்லியிருக்கிறார்.
தானே களத்திலிறங்கிய ஜம்புலிங்கம், கவிதா கல்லூரிக் குச் செல்லும் பாதைகளில் சென்று காதலைச் சொல்லியுள் ளார். 2018-ஆம் ஆண்டு டிசம்பரில் கவிதாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அப்போது கவிதாவைப் பார்க்கவந்த ஜம்புலிங்கம் தவறாக நடக்க முயன்றதுடன், ”"உன்னை திருமணம் செய்துகொள்ளத்தானே போகிறேன்' எனச் சொல்லி, கட்டாயப்படுத்தி தன்னுடைய இச்சையைத் தீர்த்துக் கொண்டுள்ளார். ஒருமுறையுடன் நிறுத்தாமல் பலமுறை இது தொடர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில், ஜம்புலிங்கம்-சிந்து குடும்பத்தினர் 02.12.2018-ல் கோவிலில் வைத்து நிச்சயம் செய்து, 10.02.2019 அன்று திருமண நாளையும் குறித்து திருமண வேலைகளைச் செய்துவந்துள்ளனர். ஜம்புலிங்கமோ, தன்னுடைய திருமண நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பாக மயிலம் முருகன் கோவிலில் கவிதாவுக்கு தாலிகட்டியுள்ளார். இதை மறைத்து, 10-ஆம் தேதி சிந்துவுக்குத் தாலியைக் கட்டி இருவரின் வாழ்க்கையிலும் விளையாடியுள்ளார்.
எதிர்பாராதவிதமாக ஜம்புலிங்கத்தின் முகநூலைப் பார்த்த கவிதா அதிர்ச்சியடைந்தார். சிந்துவுடன் திருமணம் நடைபெற்ற போட்டோ முகநூலில் இருந்துள்ளது. இது குறித்துக் கேட்டதற்கு, கவிதாவை தகாத வார்த்தைகளால் திட்டி, மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கவிதா, ஜம்புலிங்கத்தின் நண்பரின் மூலமாக சிந்துவின் தொடர்பு எண்ணை வாங்கி சிந்துவுக்கு, “"ஹாய், ஹவ் ஆர் யூ உங்களின் திருமண வாழ்க்கை எப்படிப் போகிறது?'’என கேட்க, பதிலுக்கு சிந்து, "நீங்கள் யார்?'’என கேட்டிருக்கிறார். உடனே, “"என்ன கோபமாகப் பேசுகிறாய். நான் கோவப்பட்டா என்னாகும் தெரியுமா?'” எனச் சொல்லவே... சிந்து அந்த எண்ணின் உரிமையாளர் யார் என ட்ரூகால் மூலமாக பார்த்தபோது கவிதா ஜம்புலிங்கம் என வந்திருக்கிறது.
அதிர்ச்சியடைந்த சிந்து தனது கணவரிடம் கேட்டபோது, முதலில் மறைக்கப் பார்த்த ஜம்புலிங்கம், பிறகு முழுவிவரத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இதனால் சிந்துவுக்கும் ஜம்புலிங்கத்திற்கும் பிரச்சனை முற்றியுள்ளது.
மூவருக்கும் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், தான் முந்திக்கொள்ளவேண்டும் என 16.04.2019 அன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கவிதா வழக்கு கொடுத்துள்ளார். ஜம்புலிங்கம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கவிதா வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
இதற்கிடையில் ஜம்புலிங்கமும் சிந்துவும் இணைந்து வாழ்ந்துவந்த நிலையில், 2020-ஆம் ஆண்டு ஆரம்பத்தில், கவிதாவுடன் மறைமுகமாக ஜம்புலிங்கம் தொடர்பை நீட்டித்துவந்ததைக் கண்டறிந்ததால் மீண்டும் சண்டை வெடித்திருக்கிறது. இதையடுத்து, 2020-ல் கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் வழக்குக் கொடுத்துள்ளார் சிந்து. வழக்கு விசாரணையை உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் பொறுப்பில் விட, 4 பிரிவின்கீழ் ஜம்புலிங்கம் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. விசாரணை நீடித்துக்கொண்டே போனதால், "கைக் குழந்தையை வைத்துக்கொண்டு நீண்ட நாட்கள் அலைய முடியவில்லை' என அப்போதைய விழுப்புரம் டி.ஐ.ஜி.யைச் சந்தித்து தன் தரப்பு நியாயத்தைச் சொல்லியிருக்கிறார் சிந்து.
இதையடுத்து திருக்கோவிலூர் டி.எஸ்.பி. பழனி, 15.11.2022 அன்று விசா ரணையை தொடங்கியிருக்கிறார். வெளியில் வந்த ஜம்புலிங்கம், அப்போதே சிந்துவை தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டியுள்ளாராம். சட்டத்தைக் காக்க வேண்டிய எஸ்.ஐ. ஒரே நேரத்தில் இரு பெண்களின் வாழ்க்கையில் விளையாடி யிருக்கிறார். இவருக்கு எதிராக ஆதாரங் கள் பல இருந்தும் இவர் சார்ந்துள்ள காவல்துறை அவரை காப்பாற்றிவருகிறது.
இதுகுறித்து கருத்துக் கேட்க ஜம்புலிங்கத்தை அவரது அலைபேசி 94லலலலலில் பேசியபோது பதிலளிக்க மறுத்துவிட்டார். டி.எஸ்.பி பழனியோ, "விசாரணை சென்றுகொண்டிருக்கிறது. குற்றம் உறுதியானால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்''’ என்றார்.