துரையில் கடந்த 27-ஆம் தேதி எஸ்.ஐ.ஆர். என்னும் குடியுரிமையைப் பறிக்கும் கூட்டுச்சதி என்ற தலைப்பில் சமத்துவ வழக்கறிஞர்கள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் திருமாவளவன் தலைமை உரையாற்ற, மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி திபேனுக்கு "சட்ட மாமனிதன்' விருது வழங்கப்பட்டது. மாநாட்டில் வழக்கறிஞர் ப.பா.மோகன், வழக்கறிஞர் அருள்மொழி, வழக்கறிஞர் லஜபதிராஜ், எவிடன்ஸ் கதிர், எஸ்.டி.பி.ஐ தலைவர் முபாரக், வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன் உட்பட பலர் கலந்துகொண்டனர்

Advertisment

மாநாட்டில் பேசிய சமூக செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர், “"அம்பேத்கர் அரசியல் சாசனத்தில் அடிப்படை உரிமை 14-ல் இருந்து 32 வரை மிகச்சரியாக எழுதியிருப்பார். அதில் சட்டத்தின் முன் அனைவரும் சமம். துப்புரவுப் பணியாளரிலிருந்து பிரதமர் வரை சட்டத்தின் முன் ஒன்றுதான். நாட்டில் நிலவுகிற சமத்துவம், பன்மைத் தன்மை, நீதி, சகோதரத்துவம், மாநில உரிமை அனைத் தையும் அழிக்கிற அரசாக பா.ஜ.க. அரசு உருவாக்கியிருக்கிறது. அதை எதிர்த்து சட்ட பாதுகாப்பை காக்க ஒரு மிகப்பெரிய முன்னெடுப்பை எடுத்துள்ளார் திருமா. அதுதான் சமத்துவ வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு. இதில் மார்க்ஸிய, அம்பேத்கரிய, பெரியாரிய கருத்தோடு பயணிக்கிற வழக்கறிஞர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து சட்டப் போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் பேரியக்கமாக இரண்டாம் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த வேலையை தனி ஒருவனாக முன்னெடுத்த மக்கள் கண்காணிப்பகத்தின் ஹென்றி திபேன் அவர் களுக்கு விருது வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்''’ என்றார். 

Advertisment

வழக்கறிஞர் லஜபதிராஜ் பேசும்போது, "உச்ச நீதி மன்றத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பட்டியலின சமுதாயத்தினருக்கு பிரதிநிதித் துவம் வேண்டும்.  குறைந்தது ஐந்து நீதிபதிகளாவது இருக்கும் அளவு பிரதிநிதித்துவம் வேண் டும். தற்போது கவாய் தவிர்த்து ஒரு பட்டியல் இன நீதிபதிகூட இல்லை. இந்தியா சுதந்திர மடைந்து 30 வருடங்களாக பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதிகூட இல்லை. 1986-ல் வரதராசன், கே.ராமசாமி பாலகிருஷ்ணன், பிரசன்ன சி.டி.ரவிக்குமார், கடைசியாக கவாய்  இவ்வளவே.  எனவே இந்த மாநாட்டில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்''’என்றார்.

வழக்கறிஞர் ப.பா.மோகனோ, "பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எப்படிப் போராடினார்களோ, அதேபோன்று சனாதனத்துக்கு எதிரான போராட்டங்களை இந்திய மக்கள் முன்னெடுக்கவேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன் நாக்பூரில் தோன்றிய ஆர்.எஸ். எஸ். இயக்கம் 2014-ல் ஆட்சி அதிகாரத்தை முழு மையாக கைப்பற்றி 2019-ல் குடியுரிமைச் சட்டத் தை கொண்டுவந்தார்கள். இந்த நாட்டிற்காக ரத்தம் சிந்திய இஸ்லாமிய மக்களை இரண்டாம்தர குடி மக்களாக ஆக்கவே குடியுரிமை சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கெதிராக வெகுண்டெழுந்த இஸ்லாமிய மக்களும், பொதுஜனங்களும் மனித உரிமைப் போராளிகளும் இச்சட்டத்தை எதிர்த்து சாகின்பாவில் ஒன்றுகூடி போராட்டங்களைக் கையிலெடுத்தனர்.  அதுதான் சனாதனத்துக்கு எதிரான முதல் அடி. அடுத்து விவசாயிகள், விவசாய சட்டத்திற்கு எதிராக ஒரு வருடத்துக்கும் மேலாகப் போராடி, 200 உயிர்களை பலிகொடுத்து வேளாண் திருத்தச் சட்டத்தை பின்வாங்க வைத்தனர். அதேபோன்று எஸ்.ஐ.ஆர். என்ற இந்தச் சட்டத்தை அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்த்து இந்த சதியை முறியடிப்போம்''’என்றார்

Advertisment

thiruma1

வழக்கறிஞரான அருள்மொழி, "உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயரென்றால் அது மனுஸ்மிருதிதான். அந்தளவுக்கு நீதிபதிகள் ஒவ்வொரு வழக்குகளிலும் மேற்கோள்காட்டி தீர்ப்பு வழங்குகிறார்கள். அரசியல் சாசனத்தை வழங்கிய அம்பேத்கரை மேற்கோள் காட்டாமலி ருப்பதற்கு காரணம், உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இனத்தவர்கள் இல்லாததேயாகும். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் 1949 நவம்பர் 26-ஆம் நாள்தான் ஒப்படைத்தார். அந்த நாளில்தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தற்போது அரசிய லமைப்புச் சட்டத்திற்கு ஆபத்து. கடந்த 2000-ஆம் ஆண்டு "ஏசியன் ஏஜ்' என்ற ஆங்கில ஏடு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை. இந்தியாவை ஆளப்போவது நாடாளுமன்றம் அல்ல ”குருசபா’தான்.  இனி லோக்சபா, ராஜ்ய சபா மாதிரி அடுத்து கொள்கை முடிவெடுக்க வேண்டியது இந்த குரு சபா மட்டும்தான். இதேபோன்று ராணுவத்தில் மூன்று படைத் தலைவர்களுக்கும் சேர்த்து ஒரே தலைவர்தான் இருப்பார். பிரதமர், பாராளுமன்றத்துக்கு பதில் சொல்லத் தேவையில்லை. குரு சபைக்குத்தான் பதில் சொல்லவேண்டும். ராணுவத் தளபதி நினைத்தால் நாட்டிற்கும் பாதுகாப்பு என்ற பெயரில் யாரை வேண்டுமானாலும் விசாரணைக்கு உட்படுத்தலாம். தண்டனைகள் வழங்கலாம். இனி இதுதான் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அரசியல் சாசனம் என்று அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதன்படிதான் தற்போது நடந்துவருகிறது. (அப்போது அக்கட்டுரை வெளிவந்த ஆங்கில ஏட்டை எடுத்துக் காண்பிக்கிறார்). தற்போது அம்பேத்கரியமும் பெரியாரியமும் இணைந்து வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு துணையுடன் சனாதனத்திற்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு எதிராக களமிறங்கியிருப்பது பாராட்டுக்குரியது''’ என்றார். 

பிறகு பேசவந்த எஸ்.பி.ஐ. முபாரக், "ஜன நாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள ஒவ்வொருவரும் அரசமைப்பு சட்டம் குறித்து பேசத் துவங்கியிருக் கிறார்கள். இதற்கு பா.ஜ.க.தான் காரணம். அவர்கள் தங்களது அஜெண்டாவை நிறைவேற்றத் துடிக்கிறார்கள். ஆனால் ஒவ் வொரு முறையும் தோற்றுத்தான் போயிருக்கிறார்கள். என்.ஆர்.சி என்று இஸ்லாமியர்களை இரண் டாம்தர மக்களாய் ஆக்க முயற்சித் தார்கள். அது முறியடிக்கப் பட்டது. இப்போது எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்து பீகாரில் இஸ் லாமியர்களின் வாக்குரிமையைப் பறித்தார்கள். இப்போது தமிழ் நாட்டிலும் தொடங்கியிருக் கிறார்கள். இதை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து முறியடிப்போம். திருமா அண்ணனின் முயற்சியால் சமத்துவ வழக்கறிஞர் சங்கம் இந்த விவகாரத்தில் ஒரு இணைப்புப் பாலமாக இருக்கிறது. இந்த முயற்சிக்கு என்றும் உறு துணையாக இருப்போம்''’என்று சொல்லியமர்ந்தார். 

இறுதியாகப் பேசிய திருமா வளவன், "குடியுரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. ஆனால், இந்த அரசு அதைச் செய்ய வைத்திருக்கிறது. இதுவரை 8 முறை நடந்தபோது பேசப்படாத எஸ்.ஐ.ஆர். இப்போது ஏன் பேசப்படுகிறதென்றால், இப்போதுதான் வீடு வீடாக படிவம் கொடுக்கும் பணி நடக்கிறது. எஸ்.ஐ.ஆர் என்பது என்.ஆர்.சி. நடைமுறைப்படுத்துவதற்குதான் என அமித்ஷாவே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். இது வெறும் வாக்காளர் பட்டியல் சீராய்வு முயற்சியல்ல. இதன் உள்நோக்கமே குடியுரிமை பறிப்புதான். பீகாரில் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட 43 லட்சம் பேரில் ஒருவர்கூட வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. இதில் 37 லட்சம் பேர் இஸ்லாமியர்கள்தான். இந்த நாட்டின் குடிமக்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை உறுதிசெய்த பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இஸ்லாமியர்களை குடியுரிமை இல்லாதவர்களாக ஆக்கவேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். வாக்காளர் பட்டியலை சீராய்வு செய்கிறோம் என்ற பெயரில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை தேர்தல் ஆணையம் மூலம் நிறைவேற்றி இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். முதலில், காங்கிரசு இல்லாத பாரதம் என்றார்கள், கம்யூனிஸ்ட் இல்லாத இந்தியா என்றார்கள். அடுத்து தமிழ்நாட்டில், கழகங்கள் இல்லாத தமிழ்நாடு என்றவர்கள் அம்பேத்கரியம், பெரியாரியம், மார்க்சியம் இல்லாத இந்தியாவை உருவாக்க நினைக்கிறார்கள். அது அவர்கள் கனவில்தான் நடக்கும். பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். சராசரியான கட்சியோ இயக்கமோ அல்ல. அவர்களது நோக்கமே அரசமைப்பு சட்டத்தை தூக்கி எறியவேண்டும் என்பதுதான். அவர்களுக்கு பிடிக்காத பன்மைத்துவம், கூட்டாட்சி, சகோதரத்துவம், சமத்துவம் எல்லாம் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கிறது. அவர்கள் எப்படி அந்த சட்டத்தை பாதுகாப்பார்கள்? 

தமிழ்நாட்டில் முன்பு அனைத்து சமூக இயக்கங்களும் ஒன்றாக ஒரே மேடையில் இருந்திருக்கிறோம். இன்று இருக்க முடியுமா? அனைவரையும் பிளவுபடுத்தி அதன்மூலம் மதவெறியை வளர்க்கிறார்கள். சாதியை வளர்த்தால்தான் இந்து என்கிற உணர்வை வளர்க்கமுடியும். இன்று தலித் இயக்கங்களுக்குள் ஊடுருவி சாதிப்பெருமை பேசவைத்து, நம்மை சிதைத்து விட்டார்கள். இவற்றையெல்லாம் உணர்ந்துதான் தி.மு.க. கூட்டணி யில் வி.சி.க. உறுதியாக இருக்கிறது. இங்கு மதவாத அரசியலை உயர்த்திப் பிடிக்க முடியவில்லை இந்துத்துவா பாசிச கொள்கையை மக்களிடம் புகுத்த முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் ஆளுநர் எரிச்சலில் பேசுகிறார். எனவே இடதுசாரிகளும் பெரியாரிய வாதிகளும் ஜனநாயகத்தின்மீது நம்பிக்கை வைத்திருக்கும் அனைவரும் இந்த அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடித்து இணைந்து நிற்போம்''’என்று முழங்கினார்.