சிறப்பு வாக்காளர் தீவிரத் திருத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர தி.மு.க. தலைமையில் நடந்த அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

Advertisment

தமிழகம், கேரளம், மேற்கு வங்கம் உள்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிகளை 4-ந்தேதி முதல் தொடங்குகிறது தலைமைத் தேர்தல் ஆணையம். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பல்வேறு சந்தேகங்களுக்கு வழிவகுத்திருக்கிறது. குறிப்பாக, தமிழக வாக்காளர்கள் நீக்கப்படவும், வட இந்தியர்களை தமிழகத்தின் வாக்காளர்களாக மாற்றவும் சதி நடக்கிறது என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.  

Advertisment

இந்த சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து விவாதிக்கவும் ஆலோசிக்க வும் அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின். இதற்காக, தி.மு.க. தோழமைக்கட்சிகள் உட்பட 60 கட்சிகளுக்கும் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர்கள் பூச்சி முருகன், துறைமுகம் காஜா, துணைச்செயலர் ஆஸ்டின் ஆகியோர் நேரில் சென்று அழைத்தனர். 

தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை ஆதரிக்கும் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. (அன்பு மணி) ஆகிய கட்சிகள் அழைக்கப்படவில்லை. அதே சமயம், இன்னும் ஒரு தேர்தலைக் கூட சந்திக்காத, தி.மு.க.வினரால் அதிகம் விமர்சிக்கப் படுகிற நடிகர் விஜய்யின் த.வெ.க.வையும் அழைத்தனர். அந்தவகையில் கூட்டத்திற்கு அழைத்தும்  த.மா.கா., அ.ம.மு.க., த.வெ.க., நா.த.க.  உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த கூட்டத்தை புறக்கணித்துள்ளன.  

Advertisment

சென்னையிலுள்ள அக்கார்ட் ஹோட்டலில் மிகச்சரியாக 10 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், அமைச்சர் கே.என்.நேரு, டி.ஆர். பாலு, தி.க. தலைவர் வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, வி.சி.க. தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல் வப்பெருந்தகை, சி.பி.எம். செயலாளர் சண்முகம், சி.பி.ஐ. செயலாளர் வீரபாண்டியன், த.வா. கட்சி தலைவர் வேல்முருகன், ம.ம.க. தலைவர் ஜவாஹி ருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர்மொய்தீன், மக்கள் நீதி மய்யம் கமல் உள்பட 49 கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.   

கூட்டத்தை துவக்கி வைத்துப்பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘’"சட்டமன்றத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பாக வாக்காளர் பட்டி யலை திருத்தும் பணிகளுக்கான நடவடிக்கைகளை எடுப்பது, உண்மையான வாக்காளர்களை நீக்கும் தந்திரம்! நேர்மையான தேர்தலை நடத்த உண்மையான வாக்காளர் பட்டியல் அவசியம். இதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், பதட்ட மில்லாத சூழலில் நடத்துவதற்கேற்ப கால அவகாசத்தை கொடுக்கவேண்டும். 

தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் விதமாகவும், அவர்களை அச்சுறுத்தும் விதமாகவும் இந்த வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. நம் மக்களின் வாக்குரிமை யைப் பறித்து, ஜனநாயகத்தை படுகொலை செய்யும் நோக்கோடு அவசரகதியில் மேற்கொள் ளப்படும் தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ஒன்றிணைந்து குரல் கொடுப்பது அனைத்துக் கட்சிகளின் கடமை! எவ்வித குழப்பங்களும் சந்தேகங்களும் இல்லாமல் 2026 பொதுத்தேர்தலுக்கு பின்பு நடத்த வேண்டும்''’என்றார். மேலும், கூட்டத்தின் பொருள் குறித்து ஒரு வரைவு தீர்மானத்தையும் முன்மொழிந்தார் ஸ்டாலின். இதனையடுத்து கூட்டத்தில் கலந்துகொண்ட தலைவர்கள் பேசினர். 

SIR-meet1

தி.க. வீரமணி: எஸ்.ஐ.ஆர். எனப்படும் தீவிர திருத்த வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை இங்கு  தேர்தல் ஆணையம் செய்ய அரசியல் சட்டத்தில் இடமில்லை. தமிழகம் முழுவதும் செய்வதற்கு ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை. பூத் லெவல் ஆஃபீஸர்ஸ் என புகுத்தியிருக்கிறார் கள். இதற்கும் சட்ட அதிகாரம் கிடையாது. மிகச் சரியான நேரத்தில் இந்த ஆலோசனைக் கூட் டத்தை நம்முடைய முதல்வர் கூட்டியிருக்கிறார். சட்ட அதிகாரம் இல்லாத இப்பணிகளை எதிர்த்து நீதிமன்றங்களுக்கு நாம் செல்ல வேண்டும்.  

ம.தி.மு.க. வைகோ: தமிழ்நாட்டின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாக்கும் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் வழியாக ஜனநாயகத்திற்கு ஆபத்தை விளைவிக்க மத்திய பா.ஜ.க. அரசு முனைந்திருக்கிறது. ஆட்சியில் இருந்த கட்சியும் அதற்கு துணைபோகிற கட்சிகளும் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைகளை ஆதரித்து பேசுவதுடன் இந்த கூட்டத்தைப் புறக்கணித்திருப்பது வருத்தத்திற் குரியது. எஸ்.ஐ.ஆர். மூலம் பீஹாரை சேர்ந்த 6.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு அவர்கள் தமிழக வாக்காளர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் மட்டும் 3.5 லட்சம் பேர் இணைத்துள்ளனர். ஒட்டுமொத்த தமிழகத்திலும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சுமார் 75 லட்சம் பேர் வேலைக்காக குடியேறி யிருக்கிறார்கள். அவர்களை தமிழக வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்கே இந்த எஸ்.ஐ.ஆர். பணிகளை முன்னெடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

வி.சி.க. திருமாவளவன்: இது வாக்குரிமையை குறிவைத்து நடத்தப்படுகிற தாக்குதல் அல்ல! குடியுரிமையை வைத்து நடத்தப்படுகிற தாக்குதல்! இந்த அரசியல் புரிதல் நமக்குத் தேவை. குடி யுரிமையை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங் களைத் தான் கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்ட வேண்டும் எனச் சொல்லப்பட் டுள்ளது. இந்த நாட்டின் குடிமகன் என்பதை உறுதிப்படுத்தவே இந்த நடவடிக்கை. அதாவது, குடியுரிமைச் சட்டத்தின் படி அறிவிக்கப்பட்டுள்ள என்.ஆர்.சி. தயாரிப்பதற்காகவே இதனை மேற்கொள்கிறார்கள். வாக்காளர்களின் குடியுரிமையை தீர்மானிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு கிடையாது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படிதான் வாக்காளர் பட்டியல் தயாரிக்க முடியும். தனக்கு இல்லாத அதிகாரத்தை வைத்து வாக்காளர் பட்டியலை தயாரிக்க முனைகிறது தேர்தல் ஆணையம். தேர்தல் காலத்தில் இதனை செய்யக்கூடாது என சட்டம் இருக்கிறது.  தேர்தல் ஆணையத்தின் சட்ட விரோத நடவடிக்கையால் தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தேர்தலை சீர்குலைப்பதற்கான சதிச்செயல் என்றே கருத வேண்டியுள்ளது. இதனை எதிர்கொள்ள அரசியல் ரீதியாக துணிச்சலான சில முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்.

காங்கிரஸ் செல்வப்பெருந்தகை: தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த திருத்தப் பணிக்காக குடியுரிமை சான்றிதழ் கேட்கப்படவிருக் கிறது. அதற்காக சொல்லப்பட்ட வழிமுறைகளைப் பார்க்கும்போது அத்தகைய சான்றிதழ்களை யாராலும் கொடுக்க முடியாது. ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க காலம் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது பருவ மழைக்காலம் என்பதால் இது சாத்தியமில்லை. தேர்தல் ஆணையம் செய்யத்துணிவது ஒரு மோசடியான செயல். தமிழக தேர்தலில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கை மூலம் குறுக்கு வழியில் வெற்றிபெற பா.ஜ.க. முயற்சிக்கிறது.  

தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன்:  சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் வழியாக வட இந்தியர்கள் 1 கோடி பேரை தமிழக வாக்காளர்களாக        மாற்றும் திட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு முன்னெடுத்துள்ளது. இதனைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்பதற்காக  சரியான நேரத்தில் இந்த கூட்டத்தைக்கூட்டி ஆலோசித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா: மிக முக்கிய பிரச்சனையைப்பற்றி விவாதிக்க தகுந்த நேரத்தில் இந்த கூட்டத்தை முதல்வர் கூட்டியிருப் பது மிகச் சரியானது. வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டத்தின் 324-வது பிரிவு தேர்தல் ஆணையத் துக்கு வழங்கவில்லை. தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள இந்த எஸ்.ஐ.ஆர். திட்டம் என்பது என்.ஆர்.சி.யை (தேசிய குடியுரிமை பதிவேடு) புறவாசல் வழியாக மேற்கொள்ளப் படுவதற்காகத்தான். உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆர். தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. நிலுவையில் இருக்கும்போதே எஸ்.ஐ. ஆர். பணிகளை மேற்கொள்வது சட்டவிரோத மானது; அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரா னது. மக்களின் குடியுரிமையை பறிக்கும் நட வடிக்கைகளுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டும். 

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்: ஓட்டுரிமை என்பதுதான் மக்களாட்சிக்கு அடிப் படை; அடித்தளம்! வாக்களிக்க உரிமையும் தகுதியுமுள்ள ஒருவர் கூட வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுவிடக்கூடாது.  அவசரம் அவசர மாக வாக்காளர் பட்டியலைத் திருத்தவேண்டிய அவசியம் ஏன்? இந்த அவசரத்தால்தான் பீஹாரில் 65 லட்சம் வாக்காளர்கள் தங்களின் வாக்குரிமையை இழந்திருக்கிறார்கள். 

அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பேசிய அனைவரும், எஸ்.ஐ.ஆர். பணிகளிலுள்ள  மறைமுக செயல் திட்டத்தையும், அதனைத் தடுக்க வேண்டிய பொறுப்புடைமையும் வலியுறுத்திப் பேசினர். 

இதனைத் தொடர்ந்து, எஸ்.ஐ.ஆர். ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல... அதனால் அதனை தற்போது தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும் என அனைத்துக் கட்சி கூட்டம் தேர்தல் ஆணையத்துக்கு வேண்டுகோள் வைக்கிறது. உரிய கால அவகாசம் தந்து 2026-தேர்தலுக்குப் பிறகு இந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனை தேர்தல் ஆணையம் ஏற்காதபட்சத்தில் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை நிலைநாட்ட உச்சநீதி மன்றத்தை நாடுவதைத் தவிர வேறு வழியில்லை. தேர்தல் ஜனநாயகத்தைக் காப்பாற்றிட அனைத்து அரசியல் கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.