வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்தால் குமரி மாவட்டத்தில் ஆயிரக் கணக்கானோர் வாக்குகளை இழக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் பி.எல்.ஓ.க்கள் திணறுகிறார்கள். இதனால் முதியவர்களும், இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாதவர்களும் படிவத்தை வாங்கிவைத்ததோடு சரி! சிலர் நிரப்பாமலேயே திருப்பித்தருவதும், சிலர் வீட்டிலேயே இல்லாததால் திரும்பப் பெறமுடியாமல் பி.எல்.ஓ.க்கள் திணறுவதும் தொடர்கிறது. வாக்காளர்கள் குறித்த விவரங்களை பி.எல்.ஓ.க்களுக்கும் திரட்டத் தெரியவில்லை.

Advertisment

குமரி மாவட்டத்தை பொருத்தவரை 2002-ல் 7 சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. அதன்பிறகு தொகுதி மறுசீரமைப்பு மூலம் திருவட்டார் தொகுதியை எடுத்துவிட்டு  2006-ல்  6 தொகுதிகளாகக் குறைக்கப்பட்டது.  இதனால் ஒவ்வொரு தொகுதிக்கும் பூத், பாகம், வரிசை எண் மாறியது. இந்நிலையில், 2002ஆம் ஆண்டில் வாக்களித்த பூத், தொகுதி விவரங்களை நினைவில் வைத்து தற்போது வழங்கியுள்ள படிவத்தில் குறிப்பது குழப்புவதால் வாக்காளர்களுக்கு அதிர்ச்சியையும் அயர்ச்சியையும் ஏற் படுத்துகிறது.

Advertisment

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் பாலகிருஷ்ணன், “""நான் 2002-ல் கிள்ளியூர் தொகுதியில் புதுக்கடை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஓட்டு போட்டேன் பின்னர், பத்மநாபபுரம் தொகுதிக்குட்பட்ட முத்தாலக்குறிச்சி ஊராட்சிக்கு மாறவும், 2007-ல் பத்மநாபபுரம் தொகுதியில் கல்குறிச்சி அரசு தொடக்கப்பள்ளி பூத்தில் ஓட்டு போட்டுவந்தேன். பின்னர் அங்கிருந்து மாறவும், புலியூர்குறிச்சி அரசு நடுநிலைப்பள்ளி பூத்தில் 2021-லிருந்து ஓட்டு போட்டுள்ளேன். இப்போதுவந்து 2002-ல் வாக்களித்த பூத், பாகம், வரிசை எண்ணை எப்படி கூற முடியும்? அதை பதியச்சொல்வது எந்த விதத்தில் நியாயம்? இம்முறை எனது ஓட்டுரிமை பறிபோகுமோவென்ற அச்சம் எழுந்துள்ளது'' என்றார். 

SIRa

""சாதாரண மக்கள், ஆன்லைனில் விவரங் களைத் தேட இயலாமல் திண்டாடுகிறார்கள். வாடகை வீடுகளில் வசிப்பவர்கள், இடம்பெயரும் தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள் போன்றோரின் வாக்குரிமைக்கு வேட்டுவைக்கப் பார்க்கிறது தேர்தல் ஆணையம். கேரளாவை ஒட்டி கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் தொகுதிகள் வருவதால், கேரள பெண்கள் பலரும் இங்கே திருமணமாகி வந்துள்ளார்கள். அவர்களுக்கும் 2002ஆம் ஆண்டு தகவல்களைப் பெறுவது கடினமாக உள்ளது. தகவல்களை திரட்டி பதிந்தாலும் அவற்றை ஆன்லைனில் ஏற்ற முடியவில்லையென அதிகாரிகள் சொல்வதால் அவர்களின் வாக்குரிமை கேள்விக்குறியாகிறது. இத்தனை ஆண்டுகள் சிரமமில்லாமல் வாக் களித்தவர்களை இவ்வளவு பாடுபடுத்துகிறார்கள். இப்படியொரு ஓட்டு நமக்கு தேவை தானா? என்ற மனநிலைக்கே பலரையும் மாற்றியுள்ளதால் குமரி மாவட்டத்தில் வாக்காளர் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் குறையக்கூடும்'' என்கிறார் ஓய்வுபெற்ற அரசு ஊழியரான வேலாயுதன்.

Advertisment

SIRb

இந்நிலையில், குறிப்பிட்ட நாளுக்குள் எஸ்.ஐ.ஆர். படிவங்களை நிரப்பிப் பெறாததால், அகஸ்தீஸ்வரம் தாலுகா கிராம நிர்வாக அலுவலர்களை மாவட்ட ஆட்சியர் அழகுமீனா தரக்குறைவாகத் திட்டியதோடு, உங்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால், டெல்லி தேர்தல் கமிஷனரிடம் சென்றுதான் உங்களை காப்பாற்றிக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்ட, அவர்களோ, நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்நிலையில், தொகுதியிலுள்ள பா.ஜ.க. வினர் மட்டும் குஷியில் இருக்கிறார்களாம். அவர்களின் வாக்குகள் பரவலாக இல்லாமல், ஆங்காங்கே குவியலாக இருப்பதால், அங்கு மட்டும் பா.ஜ.க.வினர் முகாம் போட்டு ஓட்டுக்களை மிஸ்ஸாகாமல் சேர்ப்பதால் அவர்களுக்கு பெரிய சேதாரம் இருக்காதென்ப தால் இந்த குஷியாம்!

எஸ்.ஐ.ஆர். நிரப்பும் அனுபவம் குறித்து சேலம் வாக்காளர்களிடம் கேட்டபோது புலம்பித் தள்ளிவிட்டார்கள்.

சுகேந்திரன் (அன்னதானப்பட்டி, சேலம் தெற்கு) ""எஸ்.ஐ.ஆர். படிவத்தில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள இரண்டு பகுதிகளிலும் ஒரே கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில் குழப்பம் ஏற்பட்டது. முதலில் வாக்காளர் அட்டை எண், கணவன் அல்லது மனைவியின் பெயர், பெற்றோரின் பெயர் விவரங்கள், அவர்களின் புகைப்பட வாக்காளர் அட்டை எண் விவரங்களை மட்டும் பூர்த்தி செய்தால் போதும் என்றார்கள். பின்னர், பி.எல்.ஓ. அலுவலர்கள் என்னிடம் ஆதார் அட்டை நகலும் பெற்றுச்சென்றனர். இந்தப் படிவம் குறித்து பி.எல்.ஓ. அலுவலர்களுக்கு தினமும் அப்டேட் வருவதால் அவர்களும் குழம்பி, எங்களையும் குழப்புகின்றனர். 

சிவராமன் (தளவாய்ப் பட்டி, சேலம் மேற்கு) ""எஸ்.ஐ. ஆர் பணிகள் தொடங்கி 10 நாட்கள் கழித்துதான் விண் ணப்பமே கொடுத்தனர். ஆரம்பத்தில், முந்தைய சிறப்புத் தீவிர திருத்தப் பட்டியல் விவ ரங்கள் பி.எல்.ஓ. அலுவலர் களிடமே இல்லை. இவ்வளவு அவசர கதியில் எஸ்.ஐ.ஆர். பணிகளை ஏன் செய்ய வேண்டும்? அவசர கதியில் நடக்கும் எஸ்.ஐ.ஆர். பணிகளால் தகுதிவாய்ந்த  லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் விடுபட வாய்ப்புள்ளது. இப்பணிகளை முடிக்க கூடுதல் அவகாசமும், விழிப்புணர்வுப் பரப்புரையும் தேவை. 

தங்கராஜ் (செட்டிச் சாவடி, சேலம் மேற்கு), ""அரசு எல்லாவற்றையும் டிஜிட்டல் மயமாக்கி விட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் இப்போது வரை வாக்காளர் விவரங்களை கையால் எழுதிக்கொண்டு இருக்கிறது. இப்பணிகளையும் டிஜிட்டல்மயமாக்க வேண்டும். தேர்தல் ஆணையமும், மத்திய பா.ஜ.க. அரசும் ஏதோவொரு திட்டத்துடன் இதுபோன்ற பணிகளில் இறங்கியிருக்கின்றன. 20 வருடத்துக்கு முந்தைய விவரங்களைக் கேட்டு பொது மக்களை வதைக்கின்றனர். 

SIRc

ராஜசேகரன் -அம்மாபேட்டை, (சேலம் தெற்கு) ""தமிழகத்தில் 6.30 கோடிக்கும் மேல் வாக்காளர்கள் உள்ள நிலையில், இதற்கு ஒரு மாத அவகாசம் போதாது. முதுநிலை பட்டப்படிப்பு படித்த நானே, என் தந்தை, தாயாரின் புகைப்பட வாக்காளர் அட்டை எண் விவரங்களை தெரியாது என்றுதான் பூர்த்தி செய்துள்ளேன். இந்நிலையில், சாதாரண, உழைக்கும் மக்களுக்கு மிகவும் கடினம். 20 ஆண்டுகளுக்கு முன்பே              வேறு மாநிலம், வேறு மாவட்டங்களில் திருமணமாகி செட்டிலானவர்கள் இப்படிவத்தை நிரப்பமுடியாமல் தடுமாறுகிறார்கள். முந்தைய எஸ்.ஐ.ஆர். விவரங்களை தேடியெடுக்கவே ஒரு நாள் ஆகிறது. விவரங்களை திரட்டுவதில் தினக்கூலி தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. 

மதுரை புறநகர் பகுதிகளில் எஸ்.ஐ.ஆர். பணிகளில் ஈடுபட்டிருந்த வாக்குச்சாவடி நிலைய அலுவலர் கூறுகையில், ""பெரும்பாலான வாக்காளர்கள் 2002 மற்றும் 2005ஆம் ஆண்டு பழைய வாக்காளர் பட்டியல் களில் தங்கள் பெயர்களை எளிதில் கண்டறிய முடி யாததால், மிகக்குறைந்த எண்ணிக்கையிலான படிவங்களே திரும்பி வருகின்றன. இதனால், ஆறு கோடிக்கும் அதிகமான படிவங்கள் விநியோகிக்கப் பட்ட போதிலும், ஒரு கோடிக்கும் குறைவான பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களே டிஜிட்டல் மயமாக்கப்பட்டு தேர்தல் ஆணையத்திற்கு கிடைத்துள்ளன. 

இதனால்தான் எங்க ளுக்கு அதிக பிரஷர் கொடுக்கிறார்கள். மக்கள் கொடுத்தால் தானே பதிவேற் றம் செய்ய முடியும்? என்ன செய்வதென்றே தெரிய வில்லை'' என்றார்.

கிருஷ்ணன் என்பவரோ, ""எங்கப்பாவுக்கு ஓட்டு         2002ல் சென்னையில் இருந் தது. இப்போது மதுரைக்கு வந்துட்டோம். முன்னதை கேன்சல் செய்துட்டு இப்போ மதுரையில் தான் தொடர்ந்து வாக்களித்துவர்றார். 2002-ல் வாக்களித்தது வேறு தொகுதியாகிடுச்சு. பெயரை வைத்து தேடினால் அதே பெயரில் 11 பேர் வருகிறார்கள். நான்கு பேருக்கு அப்பாவின் தந்தை பெயரும் ஒத்துப்போகிறது. வாக்காளர் அடையாள அட்டை எண்ணும் இல்லை. இப்படி பல குழப்பங்கள். ஓட்டு போடக்கூடாதுன்னே இப்டி பண்றாங்களான்னு தெரியல!"" என்றார்

சாமுவேல் கூறுகையில், ""2002 வாக்காளர் எண் தெரியவில்லை. எனக்கே 50 வயதாகிவிட்டது. எங்கப்பா கடைசியா எங்கு வாக்களித்தார் என்று தெரியவில்லை. படித்த எனக்கே இவ்வளவு சிக்கல். பாமர மக்கள் எப்படி நிரப்புவாங்க? இது தேவையில்லாத ஆணி சார்! காலங்காலமாக ஓட்டளித்து வருகிறோம்... இப்ப என்னடா சந்தேகம் உங்களுக்கு? ஆதாரோடு வாக்காளர் அட்டையை இணைக்க வேண்டியதுதானே?'' என்றார் நொந்துகொண்டு. 

இராஜஸ்ரீ என்பவரோ, ""எல்லா விபரமும் தேர்தல் கமிஷனிடம் இருக்கிறதுதானே? அப்புறம் ஏன் நம்மை தேடிப்பிடித்து எழுதிக் கொடுக்கச் சொல்றாங்க? இங்கு எல்லாரும் சொந்த வீடா வச்சிருக்காங்க? 20 வருஷமா ஒரே வீட்டிலா வசிக்கிறாங்க? தேர்தல் கமிஷனே எல்லாத்தையும் வெப்சைட்லருந்து எடுத்து எழுதிக்க வேண்டியது தானே? நமக்கு எங்க போய் தேடுறதுன்னே தெரியல சார்'' என்றார். 

கௌரி சங்கரோ, ""எனக்கொரு சந்தேகம் இருக்குது சார். மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியிருக்கும் மார்வாடிகளின் ஓட்டே 20 ஆயிரத்தை தாண்டும் சார். அவர்களிடம் எஸ்.ஐ.ஆர். பாரம் நிரப்பி கொடுத்திட்டீங்களா?ன்னு கேட்டேன்.  அதெல்லாம் எங்க சங்கத்தை சேர்ந்தவர்கள் பார்த்துக்கொள்வார்கள். எங்க சங்கத்தோட சிஸ்டத்தில் எல்லா விவரமும் இருக்கு. அவங்களே நிரப்பிடுவாங்க. ஒரு ஓட்டு மிஸ்ஸாகாது என்றார்கள். இவங்க வட மாநிலத்திலும் ஓட்டு போடுறாங்க... இங்கயும் வாக்களிக்கிறாங்க. அந்தந்த மாநிலத்திலேயே வாக்களிக்கணும்னு சட்டம் கொண்டுவரணும் சார்'' என்றார். 

ஆக மொத்தத்தில்... தமிழ்நாட்டில் கோடிக்கணக்கில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறையக்கூடுமென்ற பதட்டத்தில் இருக்கிறார்கள் வாக்காளர்கள்!

-அண்ணல், மணிகண்டன், இளையராஜா