நீதிமன்றத்தின் உத்தரவினால் பொதுச்செயலாளராக பதவியேற்கும் தனது ஆசை நிராசையாகியதை இப்போதும் ஜீரணிக்க முடியாமல்தான் தவித்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பது போல, எதைச் செய்தாவது பொதுக் குழுவை வரும் ஜூலை 11-ந்தேதி நடத்தியாக வேண்டும் என்கிற தவிப்பில் அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் என பலரிடமும் விவா தித்தபடி இருக்கிறார்.
நீதிமன்றத்தின் உத்தரவும், பொதுக்குழுவில் எடப்பாடி தரப்பினர் நடந்து கொண்ட அநாகரிகமும் தனக்கு அனுதாப அலையை அ.தி.மு.க.விற்குள் உருவாக்கி வருவதாக நம்பும் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி சென்றுவிட்டு சென்னை திரும்பியவர், தொண்டர்களிடம் நீதி கேட்கும் தொடர் பயணத்திற்கு திட்டமிட்டுள்ளார். டெல்லியில் பா.ஜ.க. கொடுத்துள்ள க்ரீன் சிக்னலால்தான் சுற்றுப்பயணமே திட்டமிடப்படுகிறது என்கிறார் கள் ஓ.பி.எஸ்.சுக்கு நெருக்கமானவர்கள்.
இந்த நிலையில், எடப்பாடி தரப்பில் அறிவித்தபடி ஜூலை 11-ல் அ.தி.மு.க.வின் பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? என்கிற கேள்விக்குறி அ.தி.மு.க. தொண்டர்களிடம் தொக்கி நிற்கிறது. பொதுக்குழு களேபரங்களுக்குப் பிறகு அ.தி.மு.க.வில் நடந்தது என்ன? டெல்லி சென்ற ஓ.பி.எஸ்.சுக்கு மோடியின் ஆதரவு கிடைத்துள்ளதா? என்றெல்லாம் அ.தி.மு.க.வின் மேலிட தொடர்பாளர்களிடம் விசாரித்தோம்.
ஓ.பி.எஸ்.ஸின் டெல்லி விசிட்! எடப்பாடி பதட்டம்!
பா.ஜ.க. தரப்பில் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரௌபதி முர்முவின் மனுத்தாக்கலில் கலந்து கொள்ள டெல்லிக்கு அழைக்கப்பட்டார் ஓ.பி.எஸ்.! பொதுக்குழு களேபரங்களைத் தொடர்ந்து இந்த அழைப்பு வந்ததால், தங்களின் எஜமானர்களான மோடி மற்றும் அமித்ஷாவிடம் முறையிடுவதற்காக ஓ.பி.எஸ். டெல்லிக்கு பறக்கிறார் என எடப்பாடி பதட்டமானார். காரணம், இருவரையும் அழைக்காமல், ஓ.பி.எஸ். மட்டும் அழைக்கப் பட்டதுதான்.
உடனே, தம்பிதுரையிடம் பேசிய எடப்பாடி, ’"டெல்லியில் ஓ.பி.எஸ்.ஸின் ஒவ்வொரு நகர்வும் சந்திப்பும் நமக்குத் தெரியவேண்டும்''’என கேட்டுக்கொண்டார். இதனால் சுறுசுறுப்பானார் தம்பிதுரை. ஓ.பி.எஸ்.ஸின் டெல்லி விசிட் குறித்து பா.ஜ.க. மேலிடத்தில் தம்பிதுரை விசாரிக்க, ஜனாதிபதி மனுத்தாக்கல் நிகழ்வுக்காக மட்டுமே அழைக்கப்பட்டிருக்கிறார். இதுவரை மோடி மற்றும் அமித்ஷாவின் தனிப்பட்ட அப்பாயின்ட்மெண்ட் ஓ.பி.எஸ்.ஸுக்கு தரப்பட வில்லை. அவர் டெல்லி வந்ததும் என்ன நடக்கும் என தெரியாது என்று பூடகமாக தகவல் சொல்லியிருக்கிறார்கள். இதனை எடப்பாடிக்கு தம்பிதுரை பாஸ் செய்ய, அதன் பிறகே கொஞ்சம் ரிலாக்ஸாகியிருக்கிறார் எடப்பாடி.
மோடியை சந்திக்கத் துடித்த ஓ.பி.எஸ்!
டெல்லி வந்த ஓ.பி.எஸ். சங்கரிலால் எனும் ஸ்டார் ஹோட்டலில் தங்கினார். திரௌபதி முர்முவின் மனுத்தாக்கல் நிகழ்வில் பா.ஜ.க. தலைவர்கள், பா.ஜ.க. வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் என ஏக கூட்டம். இதில், மகன் ரவீந்திரநாத்துடன் கலந்துகொண்ட ஓ.பி.எஸ்., மோடி, அமித்ஷாவை பார்த்து வணக்கம் சொன்னார். ஒருமுறை வணக்கம் சொன்னதோடு சரி. அதன்பிறகு ஓ.பி.எஸ்.ஸை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இது திட்டமிட்டு நடக்கவில்லை. அங்கிருந்த சூழல் அப்படி.
இதற்கிடையே, மோடி அல்லது அமித்ஷாவை 10 நிமிடம் சந்தித்துவிட வேண்டும் என பிரதமர் அலுவலக அதிகாரிகள் மூலமாக ரவீந்திரநாத் அணுகினார். ஆனால், இந்த நிகழ்ச்சி முடிந்ததும், ஜெர்மன் செல்வதற்கான ஏற்பாடுகளில் பிரதமர் இருக்கிறார். அமித்ஷாவோ, மகாராஷ்ட்ரா சிவசேனா அரசியலைக் கவனிப்பதில் பிஸியாக இருக்கிறார். அதனால் அவர்களை சந்திக்க வாய்ப்பே இல்லை. உங்களை சிலர் சந்திப்பார்கள். அவர்களிடம் சொல்வதை சொல்லுங்கள். அது பிரதமருக்கு சென்றுவிடும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இருப்பினும் மோடியை எப்படியும் சந்தித்தாக வேண்டும் என துடித்துள்ளார் ஓ.பி.எஸ். ஆனால், சந்தர்ப்பம் அமையவே இல்லை.
ஸ்டார் ஹோட்டலில் ரகசிய மீட்டிங்!
சங்கரிலால் ஹோட்டலில் தங்கியிருந்த ஓ.பி.எஸ்.ஸை, பிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்ததாக லாபியிஸ்டுகள் மூவர் சந்தித்துள்ளனர். அவர்களிடம் பொதுக்குழுவில் தனக்கு எதிராக எடப்பாடி தரப்பினர் நடத்திய களேபர ரகளைகளையும் அவமானப்படுத்தியதையும் விவரித்த ஓ.பி.எஸ்., அதற்கான வீடியோக்களை போட்டுக் காட்டியிருக்கிறார். "பொதுக்குழு உறுப்பினர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள் வரை விலைக்கு வாங்கப்பட்டனர். அந்த ஆதரவைத்தான் பொதுக்குழுவின் ஆதரவாகக் காட்ட அவர் (எடப்பாடி) முயற்சிக்கிறார்.
சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொண்டி ருக்கிறார்கள். கட்சியை விட்டே என்னை நீக்க சதி நடக்கிறது. கட்சியின் ஒன்றரைக் கோடி தொண்டர்களின் பெரும்பான்மை ஆதரவு எனக்குத்தான் இருக்கிறது. இரட்டைத் தலைமை தொடரவேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஒற்றைத் தலைமையை பிரதமர் விரும்பினால், அந்த ஒற்றைத் தலைமையில் எனக்கு ஆதரவளிக்க வேண்டும்'என்று தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்போது, இந்த தகவல் மேலிடத்தில் சொல்லப்படும். தொண்டர்களின் பலம் உங்களிடத்தில் இருப்பதை நீங்கள் நிரூபிக்கப் பாருங்கள் என்று மட்டும் அந்த லாபியிஸ்டுகள் சொல்லியுள்ளனர். இதனையடுத்து, அமைச்சர் பியூஷ்கோயல் அலுவலக அதிகாரிகளை சந்திக்க ஓ.பி.எஸ். எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த திரௌபதி முர்மு!
பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைக் கேட்டு வருகிற திரௌபதி முர்மு, அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்க விரும்பி, அவர் எங்கே தங்கியிருக்கிறார் என விசாரிக்க, ஸ்டார் ஹோட்டலில் தங்கி யிருப்பதை சொல்லியிருக்கிறார்கள். ப்ரோட்டகால் படி ஹோட்டலுக்கெல்லாம் அவர் போகமுடியாது என்பதால் ஓ.பி.எஸ்.ஸின் மகன் ரவீந்திரநாத்தின் வீட்டில் சந்திக்கலாம் என திட்டமிடப்பட்டது. அதன்படி, வீட்டுக்கு வந்தார் ஓ.பி.எஸ். அங்கு சென்று ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த முர்மு, "அ.தி.மு.க.வின் ஆதரவு வேண்டும்' என கேட்க, "எங்களின் ஆதரவு உங்களுக்குத்தான்; அமோகமாக வெற்றி பெறுவீர்கள்' என வாழ்த்தியிருக்கிறார் ஓ.பி.எஸ். மேலும், "உங்கள் எம்.எல்.ஏ.க்களிடம் பேசுவதற்காக சென்னைக்கு வருகிறேன். ஏற்பாடு செய்ய இயலுமா?' என முர்மு கேட்க, "வருகிற தேதியை சொல்லுங்கள்; ஏற்பாடு செய்கிறேன்' என்று உறுதி தந்திருக் கிறார் ஓ.பி.எஸ்.
அமித்ஷாவுக்கு தம்பிதுரை அனுப்பிய மெசேஜ்!
ஓ.பி.எஸ்.ஸின் டெல்லி மூவ்களை அறிந்து அதனை எடப்பாடிக்கு பாஸ் செய்திருந்தார் தம்பிதுரை. மோடியையும் அமித்ஷாவையும் ஓ.பி.எஸ்.ஸால் சந்திக்க முடியவில்லை என்ற தகவலே எடப்பாடியை குஷிப்படுத்தியிருந்தது. அதேசமயம், மோடியையும் அமித்ஷாவையும் சந்திக்க தம்பிதுரை எடுத்த முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்த நிலையில், அமித்ஷாவுக்கும் எடப்பாடிக்கும் பாலமாக இருக்கும் அதிகாரி ஒருவரை சந்தித்த தம்பிதுரை, அ.தி.மு.க.வில் நடந்துவரும் கட்சி சீர்திருத்த விசயங்களைக் கூறிவிட்டு, "கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் ஒற்றைத் தலைமையை விரும்பு கிறார்கள். ஓ.பி.எஸ்.ஸின் முக்கியத்தை குறைக்கும் எண்ணமோ, அவரை நீக்க வேண்டும்ங்கிற நோக்கமோ கட்சியில் யாருக்கும் இல்லை. ஆனா, கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடிதான் வரவரவேண்டும்ங்கிறது கட்சியின் விருப்பமாக இருக்கிறது.
பொதுக்குழு, செயற்குழு, எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் என அனைத்து தரப்பின் 99 சதவீத ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்குத்தான் இருக்கிறது. அதனால் எடப்பாடியை டெல்லி ஆதரிக்க வேண்டும். பா.ஜ.க. தலைமை விரும்புகிறதை எடப்பாடி செய்வார்' என்று சொல்லியிருக்கிறார் தம்பிதுரை, இவை அமித்ஷாவிடம் சொல்லப்பட்டுள்ளது.
பா.ஜ.க.வின் நிலை?
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமை பிஸியாக இருந்தாலும் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமை விவகாரத்தையும் பொதுக்குழு கலாட்டாக்களையும் கவனித்தபடிதான் இருந்துள் ளது. இதுகுறித்து பா.ஜ.க. மேலிட தொடர்பாளர் களிடம் நாம் விசாரித்த போது,’"இரண்டு தரப்புமே அவர்களின் நியாயத்தை எங்களின் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக ஓ.பி.எஸ்., எங்கள் தலைமையிடம், ‘"எடப்பாடி விசுவாச மற்றவர். ஜெயலலிதாவை ஏமாற்றினார்; சசிகலாவை ஏமாற்றினார்; என்னை ஏமாற்றினார்; உங்களை (பா.ஜ.க.) ஏமாற்றுவார். அதிகாரத்தை கைப்பற்றும் வரையில் அவர் அடங்கியிருப்பார். அதை அடைந்ததும் அவரது முகமே வேறு. அதனால் நம்பிக்கையில்லாத, விசுவாசமில்லாத ஒருவரையா நீங்கள் நம்ப வேண்டும்? பொதுச்செயலாளராகும் அவரது திட்டத்துக்கு பா.ஜ.க. ஒத்துழைத்தால் அதன் விளைவுகளை பா.ஜ.க. அறுவடை செய்யும். ஆனால் எனது விசுவாசம் மாறாது. தொண்டர்கள் என் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் அதிகாரத்தை என்னிடம் கொடுங்கள்'’என்று சொல்லியுள்ளார்.
அதேசமயம் எடப்பாடியோ, "என் பின்னால் தான் கட்சி இருக்கிறது. ஒற்றைத் தலைமையில் என்னை ஆதரியுங்கள். அதற்காக அவரை (ஓ.பி.எஸ்.) அமைதிப்படுத்துங்கள். ஒற்றைத் தலை மையிலான அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி வைப்பது ரொம்பவுமே வலிமையாக இருக்கும். நாடாளுமன்றத் தேர்தலில் 20 சீட்டுகளை பா.ஜ.க.வுக்குத் தருகிறேன். இந்த முறை என்னை நம்பலாம். ஏமாற்றமாட்டேன். அதேபோல, அ.தி.மு.க.விலுள்ள பா.ஜ.க. எதிர்ப்பாளர்களை நான் கட்டுப்படுத்துகிறேன்' என சொல்லியுள்ளார்.
"இரு தரப்பில் ஒருவரை ஆதரிக்கவும் அவர்களின் உள்கட்சி பிரச்சினையில் தலையிடவும் எங்கள் தலைமை விரும்பவில்லை. இருப்பினும் எங்களிடம் அவர்களின் பிரச்சினையை எடுத்து வரு வதால், இருவரும் இணைந்துள்ள அ.தி.மு.க.வையே எதிர்பார்க்கிறோம். இருவரும் இணைந்து செல்லுங்கள் என்றே அவர்களுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது' என்கிறார்கள் பா.ஜ.க.வினர்.
பா.ஜ.க.வின் விருப்பம் இரட்டைத் தலைமையே!
அ.தி.மு.க. அரசியல் பஞ்சாயத்தில் கருத்தியல் ரீதியாக பல தகவல்களை பா.ஜ.க. தலைமைக்கு அனுப்பி வைத்தபடி இருக்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. சசிகலா விவகாரத்தில் இவரது டீம் சொன்ன பல விசயங்களைத்தான் டெல்லி உன்னிப்பாக கவனித்து காய்களை நகர்த்தியது. தற்போதும் பல தகவல்களை டெல்லிக்கு இவர் அனுப்பி வைத்திருக்கும் நிலையில், அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள பிரளயங்கள் குறித்து அவரிடம் நாம் பேசியபோது,’"’பா.ஜ.க.வின் அரசியலுக்குள் அ.தி.மு.க. சிக்கிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஓ.பி.எஸ். வெளிப்படையாகவும், இ.பி.எஸ். மறைமுகமாகவும் பா.ஜ.க.வை ஆதரிக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சில வெற்றிகளைப் பெறுவதற்கு குறிப்பாக, கோவை -ஈரோடு மாவட்டங்களுக்கு எடப்பாடியும், தென்காசி -தேனி மாவட்டங்களுக்கு ஓ.பி.எஸ்.ஸும் வேண்டுமென பா.ஜ.க. கணக்கிடுகிறது. அதனாலேயே, இரட்டைத் தலைமையில் அ.தி.மு.க. இருக்க வேண்டுமென்றுதான் பா.ஜ.க. விரும்பு கிறது'’என்கிறார்.
பொதுக்குழு நடக்குமா?
ஜூலை 11-ல் பொதுக்குழுவை நடத்தியே தீரவேண்டும் என்பதால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டுக்கு போயிருக்கிறார் எடப்பாடி. இதனை விவாதிக்க நிர் வாகிகள் கூட்டத்தை கூட்டியுள்ளார். இதுகுறித்து பேசிய அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் ஆர்.வி.உதய குமார்,’"கட்சியின் விதிகள்படிதான் நடக்கிறது. பொதுக்குழுதான் அதிக அதிகாரம் படைத்தது. அதனால், 11-ந்தேதி பொதுக்குழு நடக்கும். அதில் ஒற்றைத் தலைமை நிறைவேற்றப்படும். எடப்பாடி பொதுச்செயலாளர் ஆவதை யாரும் தடுக்க முடி யாது''’ என்கிறார். பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அதனை எதிர்த்து தேர்தல் ஆணையத்துக்கும் நீதிமன்றத்துக்கும் சென்ற முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமியிடம் இது குறித்து கேட்டபோது, "அ.தி.மு.க.வை புறவழி யில் யாரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகத் தான், கட்சியின் பொதுச்செயலாளரை தொண்டர் கள் வாக்களித்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற விதியை உருவாக்கினார் எம்.ஜி.ஆர். அதனால் தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படும் தலைமை தான் அ.தி.மு.க.வுக்கு வலிமை சேர்க்கும். தற்போதைய சூழலில், ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். இருவருமே தொண்டர்களின் நம்பிக்கையை இழந்துள்ளனர். அதனால் கட்சி பலகீனமாக இருக்கிறது. இருப்பினும், ஜூலை 11-ந் தேதி பொதுக்குழு நடக்குமா? என்பது பா.ஜ.க. தலைமையிடம்தான் இருக்கிறது. டெல்லி மனசு வைத்தால் மட்டுமே நடக்கும்''” என்கிறார் அழுத்தமாக.
ஓ.பி.எஸ். பதவி பறிப்பா? தலைமைக் கழக பரபரப்பு!
அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்ட தாக அறிவிக்கப்பட்ட நிலையில், கட்சி யின் தலைமைக்கழக நிர்வாகிகளுட னான ஆலோசனைக் கூட்டத்தை சென் னையிலுள்ள தலைமைக் கழகத்தில் திடீரென கூட்டினார் எடப்பாடி பழனிச்சாமி. தேனி மாவட்டத்திற்கு ஓ.பி.எஸ். சென்றிருந்த நிலையில் அவரிடம் ஆலோசிக்காமலே கூட்டம் கூட்டப்பட்டதால், ஓ.பி.எஸ்.ஸும் அவரது ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். எடப்பாடியின் இந்த அதிரடி கட்சியில் பரபரப்பை ஏற்படுத் தியது. அ.தி.மு.க. தலைமைக் கழகத்திற்கு வருவதற்கு முன்பு, தனது வீட்டில் கட்சியின் சீனியர்களான செங்கோட்டையன், சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, ஜெயக்குமார், தம்பிதுரை, தமிழ்மகன் உசேன் உள்ளிட்ட பலரிடமும் ஆலோசனை நடத்தியிருந்தார் எடப்பாடி. அந்த ஆலோசனையில் ஓ.பி.எஸ்.ஸை எதிர்கொள்வது குறித்தும் திட்டமிட்டபடி 11-ந் தேதி பொதுக்குழுவை நடத்துவது பற்றியும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
தலைமைக் கழகத்திற்கு வந்த எடப்பாடிக்கு உற்சாக வரவேற்பு தருகிற தொனியில் ஏக அலப்பறையை நடத்தினர் எடப்பாடியின் ஆதரவாளர்கள். இதனால், தள்ளுமுள்ளுகள் நடந் தன. கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், ஓ.பி.எஸ்.ஸிடமிருந்து பொருளாளர் பதவியைப் பறிக்கவும், அவரை கட்சியிலிருந்து நீக்கவும், தற்காலிக பொதுச் செயலாளராக எடப்பாடியை தேர்ந்தெடுக்கவும் விவாதிக்கப்படுவதாக பரவிய செய்தியால் மேலும் அதிர்ச்சியடைந்தது ஓ.பி.எஸ். தரப்பு.
இந்த நிலையில், சொந்த மாவட்டதிலிருந்த தனது புரோக்கிராம்களை ஒத்தி வைத்துவிட்டு, பெரியகுளத்திலிருந்து அவசரம் அவசரமாக சென்னைக்கு புறப்பட்ட ஓ.பி.எஸ்., "அ.தி.மு.க. தலைமை நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி கூட்டம் நடைபெறுவதால், கூட்டத்தில் எடுக்கும் முடிவுகள் தொண்டர்களை கட்டுப்படுத்தாது'' என்றார். அவரிடம் எப்போதுமில்லாத அளவுக்கு பதட்டம் தெரிந்தது. இதற்கிடையே, கூட்டம் நடந்துகொண்டிருக்கும் போதே, தலைமைக்கழகத்திலிருந்த ஓ.பி.எஸ்.ஸின் பேனரை எடப்பாடி ஆதரவாளர்கள் கிழித்தெறிந்து தங்களின் வெறியைக் காட்டினர் "ஜூலை 11 வரை பரபரப்புக்கும் பதட்டத்துக்கும் அ.தி.மு.க.வில் பஞ்சமிருக்காது'’என்கிறார்கள் மாஜிக்கள்.