இந்தியாவின் ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஆஷா பணியாளர்களுக்கு, அவர் களது சுகாதாரப் பணிகளுக்காக வும், கொரோனா தொற்றின் போது வீடு வீடாகச் சென்று கொரோனா பரிசோதனைகள் மேற்கொண்டு நோயாளிகளை அடையாளம் காணவும், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் வைக்கவும் உதவியதற்காக உலக சுகாதார அமைப்பு “"க்ளோபல் ஹெல்த் லீடர்ஸ்'”எனும் விருது வழங்கிக் கௌரவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் 75-வது மாநாடு ஜெனீவாவில் நடைபெற்றது. மே-22 ஆம் தேதி நிகழ்ச்சியில் பல்வேறு தலைப்பில் விருதுகள் வழங்கப் பட்டன. கிராமப்புறங்களில் மருத்துவ சேவை கிடைக்கவும், இந்தியாவில் கொரோனாவைக் கட்டுப்படுத்த சளைக்காமல் பணியாற்றியதற்காகவும் ரஐஞ-வின் இயக்குநர் டெட்ராஸ் ஆதனம் இந்த விருதை வழங்கினார்.
ஆஷா பணியாளர்களின் பூர்வாங்கத்தை அறிய அபய் பங், ராணி பங் பற்றி சற்று அறியவேண்டும். தாக்கூர் தாஸ் பங் எனும் விடுதலைப் போராட்ட வீரரின் இரு மகன்களில் ஒருவர்தான் அபய் பங். நாக்பூர் மருத்துவக் கல்லூரி யில் முதுகலை மருத்துவம் படித்த அபய், அங்கே உடன்பயின்ற ராணியைத் திருமணம் செய்து கொண்டார். அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் சென்று மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த இருவரும் மகாராஷ்டிரா வின் பின்தங்கிய மாவட்டமான கட்சிரோலிக்கு மருத்துவ சேவை செய்யக் கிளம்பினார்கள்.
இங்குதான் ஆஷா பணியாளர்களுக்கான விதை பிறந்தது. கட்சிரோலி, வனம் மற்றும் மலைப்பாங்கான பகுதி. பெரும்பாலோர் மலைவாழ் பழங்குடிகள். அப்பகுதியில் மலேரியா மரணம், குழந்தை கள் மரணம், மகப்பேறு தொடர்பான பிரச்சினைகள் அதிகம் இருந்தது. அப்பகுதியில் பணிசெய்ய மருத்துவர்கள், தாதிகள் ஆர்வம்காட்டவில்லை. இத னால் மலைவாழ் பழங்குடி யினரிலேயே பிரசவம் பார்க்கும் பெண்களைத் திரட்டி, அவர்களுக்குப் பயிற்சியளித்து ஒரு ஆய்வை மேற்கொண்டார்.
அதில் குழந்தைகள் இறப்புக்கான தகவல்கள் திரட்டப்பட்டு, எதனால், எப்படி தாய்-சேய் மரணம் நிகழ்கிறது, அவற்றை எப்படித் தவிர்க்கலாம் என ஆராய்ந்து அபய் தனது அறிவை விசாலப்படுத்திக் கொண்டார். பின், மரணத்துக் கான காரணங்களை எப்படித் தவிர்ப்பது என தனது மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சி யளித்தார். அவரது மருத்துவப் பணியாளர்கள் படிப்பைக் காட் டிலும் நோயாளிகளின் மீதான அக்கறை, பணியின் மீதான ஈடுபாடு இவற்றை வைத்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
எட்டு ஆண்டுகளுக்குப் பின் கட்சிரோலி மாவட்டத்தில் தாய்-சேய் இறப்புவிகிதம் கணிச மாகக் குறைந்தது. அதாவது, அரசு மருத்துவமனைகள் உள்ள கிராமங்களைவிடவும் அபய், ராணியால் பயிற்றுவிக்கப்பட்ட சுகாதாரப் பணியாளர்கள் பணியாற்றிய கிராமங்களின் சுகாதார, ஆரோக்கிய நிலை மேம்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் வெற்றியைக் கண்ட இந்திய அரசு, அதே வழியில் பயணிக்க முடிவெடுத்தது. அபய் பங்கின் திட்டப்படி, பயிற்சி யளிக்கப்பட்ட கிராமப் பொதுநல ஊழியரை 2005 முதல் ஆஷா என்னும் பெயரில் நியமித்து இந் தியா முழுமைக்கும் விரிவுபடுத்த ஆரம்பித்தது. ஒரு குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த சமூகத்தில், அவர்களில் இருந்தே ஒரு தன் னார்வலரைத் தேர்ந்தெடுத்துப் பயிற்சியளித்து, அரசின் பல்வேறு சுகாதாரத் திட்டங்களைப் பற்றி மக்களிடம் கொண்டுசேர்ப்பவர் களே ஆஷா பணியாளர்கள்.
ஆஷா பணியாளர்கள், முதன்மையாக கணவனை இழந்த, கணவனைப் பிரிந்த மற்றும் ஆதரவற்ற பெண்களாக இருக் கும்படி பார்த்துக்கொள்ளப்படு கிறார்கள். இவர்களது வயது 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட மருத்துவ மனைகள், துணை மருத்துவ நிலையங்கள் பற்றிய தகவல்களை விளிம்புநிலை மக்களிடம் சேர்ப்பித்து அவர்களை அங்கு அனுப்பி சிகிச்சை பெற வழிவகை செய்வதே இவர்களின் பணி. பழங்குடியினர் பகுதி, மலைப் பாங்கான பகுதிகளிலும்கூட 1000 பேருக்கு ஒரு ஆஷா பணியாளர் இருக்கும்படி இந்திய அரசு பார்த்துக்கொள்கிறது.
இந்தியா முழுவதும் 10.4 லட்சம் ஆஷா பணியாளர்கள் உள்ளனர். இவர்களது ஊதியம் 3,000-தான். தமிழகத்தில் ஊக்கத் தொகையோடு 6,000 ஆக உள் ளது. இந்தியாவின் ஆரோக்கி யத்தை மருத்துவர்களுடன் இந்த ஆஷா பணியாளர்களும் இணைந்தே தாங்கிப் பிடிக்கின்றனர்.
-க.சுப்பிரமணியன்
________________________
தமிழக அரசுக்கு இலங்கைத் தமிழகர்கள் கோரிக்கை!
இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் வந்து பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் தமிழகம் முழுவதும் உள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர். பாஸ்போர்ட் இல்லாதது, கள்ளத்தோணி யில் வந்தது, விசா காலம் முடிந்தும் தமிழகத்தில் தங்கியிருப்பதெனப் பல்வேறு வழக்குகள் இவர்கள் மீது உள்ளன. பலர் வழக்கு விசாரணை முடிந்தபின்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளனர். திருச்சி மத்திய சிறைச்சாலை வளாகத்திலுள்ள சிறப்பு முகாமில் அடைபட்டுள்ள ஈழத் தமிழர்கள் 10 பேர், குடும்பத்தோடு சேர்ந்து வாழ்வதற்காகவும், வருமானம் தேடுவதற் காகவும் தங்களை விடுதலை செய்யக்கோரி கடந்த மே 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் கபில், டெனிசன், கொண்பூசஸ், எப்ஸிபன், தினேஷ், டீலக்ஸ், பிரணவன் மற்றும் ரஜீவன் ஆகிய 8 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். மயக்கமடைந்தவர்களை திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்து வருகிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் சூழலில், அவர்களுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வாழவும், அவர்கள் மீதான வழக்குகளை நீக்கி அவர்களுடைய சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வருக்கு ஒரு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
-துரை.மகேஷ்