தனித் தொகுதி என்றாலும் முக்குலத்தோர் வாக்குகள் 40 சதவிகிதமும் பட்டியலின வாக்குகள் 35 சதவிகிதமும் கொண்டது மானாமதுரை தொகுதி. மண்பாண்டத் தொழிலுக்குப் பெயர் பெற்ற இத்தொகுதியின் வேட்பாளர்களாக அ.தி.மு.க. சார்பில் நெட்டூர் நாகராஜன், தி.மு.க.சார்பில் இலக்கியதாசன், அ.ம.மு.க.சார்பில் மாரியப்பன் கென்னடி ஆகியோர் களம் காண்கிறார்கள்.
கடந்த தேர்தலில் மானாமதுரை, இளையாங்குடி ஒன்றியங்களில் 13 ஆயிரம் வாக்குகள் தி.மு.க.விற்கு முன்னிலை பெற்றுத் தந்த போதும், திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள கள்ளர் சமூக வாக்குகள்தான் மாரியப்பன் கென்னடியை கரை சேர்த்தது. அதனால் இம்முறையும் திருப்புவனம் வாக்குகளை பெரிதும் நம்பியுள்ளார் மாரியப்பன் கென்னடி. "இந்த முறையும் திருப்புவனம் ஏரியா வாக்குகள் குறைந்தால் அந்த ஏரியா நிர்வாகிகளை கட்சியிலிருந்து கட்டம் கட்டிவிடுவேன்' என ஸ்டாலின் கடுமை காட்டியிருப்பதால், மா.து. செ.சேங்கைமாறன் உஷாராகி தீவிரம் காட்டுகிறார்.
எச்.ராஜா நிற்கும் சிவகங்கையைவிட, மானாமதுரைதான் தங்களுக்கு கௌரவப் பிரச்சனை என்பதால், மந்திரி பாஸ்கரனும் மா.செ. செந்தில்நாதனும் பணத்தை தண்ணீராய் இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். "நாங்க மட்டும் என்னவாம்' என்ற முடிவோடு மாரியப்பன் கென்னடியும் கரன்சியை வாரி இறைக்கிறார்.
தி.மு.க. மா.செ. பெரியகருப்பன் துணையுடன் முத்தனேந்தல், துத்திக்குளம், சிறுகுடி, கல்குறிச்சி, கொன்னக்குளம் உட்பட ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராம மக்களை தனது எளிமையால் கவர்கிறார் இலக்கியதாசன். இளையாங்குடி பகுதிகளில் இருக்கும் முஸ்லிம் சமூக வாக்குகள், அத்துடன் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், கடந்த முறை வி.சி.க்கள் வாங்கிய 8 ஆயிரம் ஓட்டுகள் இவை எல்லாமே தி.மு.க.வுக்கு ப்ளஸ்ஸாக இருக்கின்றன.
ஓட்டுக்கு 2 ஆயிரம் ரூபாய் என ஆளும் தரப்பு கணக்குப் போட்டாலும், இரட்டை இலை ஓட்டுகளில் ஓட்டை விழுவதால், உதயசூரியனே இங்கு பிரகாசமாக இருக்கிறது.
-நாகேந்திரன்