80 ஆண்டுகால சட்டப்போராட்டம்!

ss

வெங்கடேசப்பெருமானை நோக்கி சங்கீர்த்தனை பாடுவதில் புகழ்பெற்றவர் தலப்பகா அன்னமாச்சார்யா. திருப்பதி ஏழுமலையானுக்கு திவ்யநாம சங்கீர்த்தனை பாட இவரது குடும்பத்திற்கு, கோவிலுக்கு வடகிழக்கே 188 ஏக்கர் 32 சென்ட் நிலத்தை 1865-ல் இனாமாக வழங்கியது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

எப்போது இந்த சேவையை அன்னமாச்சார்யா குடும்பம் நிறுத்துகிறதோ, அப்போது இனாம் நிலத்தை தேவஸ்தானத் திடமே ஒப்படைக்க வேண்டும் என்பது உடன்படிக்கை. 1925 ல் தனது சேவையை நிறுத்திக்கொண்ட அன்னமாச்சார்யா குடும்பம், உடன்படிக்கையைப் பின்பற்றாமல், சுப்பாரெட்டி மற்றும் குருவா ரெட்டிக்கு நிலத்தைக் குத்தகையாக கொடுத்தது. தனது செல்வாக்கைப் பயன் படுத்திய குருவா ரெட்டி கோவில் நிலத்திற்கு ரியாத்வாரி பட்டாக்களை வாங்கினார்.

Advertisment

நிலைமையின் தீவிரத்தை தாமதமாக உணர்ந்த திருப்பதி தேவஸ்தானம், 1940-ல் சட்டப் போராட்டத்தைத் தொடர்ந்தது. அன்னமாச்சார்யா குடும்பம் சித்தூர் இனாம் துணை தாசில்தாரின் விசாரணையைக் கோரியது.

கிட்டத்தட்ட 80 ஆண்டுகளாக நடந்துவந்த இந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் 27-ல் தீர்ப்பளித்த சித்தூர் இனாம் துணை தாசில்தார் ஷேஷகிரி ராவ், ""அன்னமாச்சார்யா குடும்பமோ, குருவா ரெட்டி குடும்பமோ அந்த நிலத்திற்கு சொந்தம் கொண்டாட முடியாது. அது ஆந்திரப்பிரதேசம் இனாம் நில சட்டம், 1956-க்கு எதிரானபடியால், சம்பந்தப்பட்ட 188 ஏக்கர், 32 சென்ட் நிலம் திருப்பதி தேவஸ்தானத்திற்கே சொந்தமாகிறது'' என்றார்.

திருமலை பஸ் ஸ்டாண்ட், லாட்ஜ்கள், வணிக வளாகங்கள் அமைந்துள்ள இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ஆயிரம் கோடியைத் தாண்டுகிறதாம்.

Advertisment

-அரவிந்த்

நிறைவேறுமா ஆசிரியர்-மாணவர் பாதுகாப்புச் சட்டம்!

s

விருதுநகர் மாவட்டம் சின்னக்காமன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் காளிராஜ் குறித்த செய்தி நக்கீரன் இணையத்தில் வெளி வந்தது. "அவர்மீது ஜாதி கண்ணோட்டத்துடன், திட்டமிட்டு பொய்ப்புகார் தயாரித்தனர். காளிராஜ் மிகவும் நல்லவர். பள்ளியின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படுபவர்...' என்று மாணவர்களின் பெற்றோர் சிலர் தொடர்ந்து தங்களின் கருத்துக்களை பதிவுசெய்து வருகின்றனர்.

சின்னக்காமன்பட்டி பள்ளி விவகாரம் இப்படி இருக்கும்போது, அதே விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டத்தில் இருந்து தொடக்கப்பள்ளி ஆசிரியை ஒருவர் மீதான பாலியல் புகார், பள்ளிக்கல்வி இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. புகாரில், “"அந்த ஆசிரியை விவகாரத்தை கடவுளே படம்பிடித்துக் காட்டி எங்களின் ஊருக்கும் கல்வித்துறைக்கும் நல்லது செய்திருக்கிறார்.

வகுப்பறையிலேயே தகாத செயல் நடக்கிறது. பள்ளியில் விடுப்பு எடுக்காமலே, வழக்கறிஞர் ஒருவருடன் அந்த ஆசிரியை திருச்செந்தூர் சென்று இரண்டு நாட்கள் விடுதியில் தங்கினார். திரும்பும் வழியில் நிகழ்ந்த விபத்துக்காக இருவரும் சிகிச்சை பெற்றனர். இந்த ஒழுங்கற்ற செயலுக்கு தலைமை ஆசிரியரும் உடந்தை. "சிகிச்சைக்குப்பின் அந்த ஆசிரியை மீண்டும் பள்ளிக்கு வந்தால் வழக்கறிஞரின் மனைவி விளக்குமாற்றால் அடிப்பார்' என்று விலாவாரியாக விவரித்துள்ளனர் அந்த ஊர் பொதுமக்கள்.

மேலும், "கல்வித்துறை அதிகாரிகளே! உங்கள் காலில் விழுகிறோம். எங்கள் ஊர் மானத்தைக் காப்பாற்றுங்கள்...' என்று ஊர் பொதுமக்களும் மகளிர் அமைப்பினரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுபோன்ற புகார்கள் சமீபத்தில் அதிகரித்து வருகின்றன. அவற்றில் சில உண் மையானதாக இருந்தாலும், மாணவர்களின் ஒழுங்கின்மையைக் கண்டிக்கும் ஆசிரியர்கள் மீதும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன. அதனால், ஆசிரியர் பாதுகாப்புச் சட்டம் வேண்டுமென்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்திவரும் நிலையில், ஆசிரியர் மாணவர் பாதுகாப்புச் சட்டத்தை நிறை வேற்ற முடிவு செய்திருக்கிறது பள்ளிக் கல்வித்துறை.

-ராம்கி

இதுவா "திராவிட' ஆட்சி?

ss

மறைந்த தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்வருமான கலைஞரின் வாழ்நாள் சாதனைகள் பற்றிய "ஒரு மனிதன் ஒரு இயக்கம்' புத்தகத்தை 'ஃபிரண்ட் லைன்' பத்தி ரிகை வெளியிட்டது.

இந்த நூலை தூத்துக் குடி மாவட்டத்தின் 110 அரசு நூலகங்களுக்கும் அனுப்பி வருகிறார் தி.மு.க. மகளிரணிச் செயலாளரும், மக்களவை தி.மு.க. குழு துணைத்தலைவருமான கனிமொழி எம்.பி. தூத்துக் குடியைப் போலவே, மற்ற மாவட்ட நூலகங்களுக்கும் அனுப்பிவைக்கும் பணி களை அவர் முடுக்கிவிட்டி ருக்கிறார். முன்னதாக, "தி இந்து' குழும வெளியீடுகளான "தெற்கிலிருந்து ஒரு சூரியன்', "மாபெரும் தமிழ்க் கனவு' மற்றும் "ஒரு மனிதன் ஒரு இயக்கம்' ஆகிய புத்தகங் களின் திறனாய்வு செப். 08- ந் தேதி திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற இருந்தது. "ழ' புத்தகக்கூடு அமைப்பு ஒருங் கிணைத்திருந்த இந்த நிகழ்வில் பத்திரிகை யாளர் ஆழி.செந்தில்நாதன், பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் ஆகியோர் உரை யாட இருந்தனர்.

இந்நிலையில், செப். 03-ந் தேதி நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்களை திடீ ரென அழைத்துப்பேசிய மண்டப உரிமையாளர், மண்டபம் தரமுடியாது என்று கூறிவிட்டார். இந்தத் தகவலை அறிந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், "பா.ஜ.க.வின் உத்தரவை அடிமை அ.தி.மு.க. அரசு ஏற்று கருத்து சுதந்திரத்தை நசுக்குவது சரியல்ல'’என அறிக்கை வெளியிட்டார். இதைத்தொடர்ந்து, திட்டமிட்ட தேதியில் அதே மண்டபத்தில் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

அ.தி.மு.க. திராவிட ஆட்சி நடத்துவதாக சொல்லிக்கொண் டாலும் இந்துத்வா நிகழ்ச்சி களும், அணிவகுப்புகளும் தமி ழகமெங்கும் தங்குதடையின்றி நடக்கின்றன.

திராவிட இயக்கங்களின் நிகழ்ச்சிகளோ, மறைமுக அச்சுறுத்தல்களால் சிக்கல் களை எதிர்கொள்கின்றன என்கிறார்கள் நிகழ்ச்சி களை நடத்துவோர்.

-கீரன், சஞ்சய்