தொழிலதிபரைக் கொன்ற பெண் மோகம்!

ss

சென்னை அடையாறு, இந்திராநகரைச் சேர்ந்தவர் தொழிலதிபர் சுரேஷ் பரத்வாஜ். ஐம்பது வயதாகியும் திருமண மாகாமல், தனிமையில் வசித்துவந்த இவருக்கும் இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த சித்ரா என்ற பெண்ணுக்கும் நெருக்கம் உண்டானது. சித்ரா வுக்கு ரூ.5 லட்சரூபாய் வரை கொடுத்துள்ளார் சுரேஷ். ஒருகட்டத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற தன் விருப்பத்தை சுரேஷ் வெளிப்படுத்த, விலகிச் சென்றுவிட்டார் சித்ரா.

இருந்தும், சித்ரா மீதான தீராத மோகத்தால், அதேபகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ப்ரீத்தியை அணுகினார் சுரேஷ். இதைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட ப்ரீத்தி ரூ.60 லட்சம்வரை கறந்துவிட்டார். உருப்படியாக எதுவும் செய்யவில்லை. இதைத் தாமதமாக புரிந்துகொண்ட சுரேஷ் பணத்தைக் கேட்டு ப்ரீத்தியை நச்சரிக்கத் தொடங்கினார்.

Advertisment

இதற்கிடையில், கடந்த ஜூன் 19-ந் தேதியில் இருந்து தனது அண்ணனைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்று, அமெரிக்காவில் வசித்துவரும் சுரேஷ் பரத்வாஜின் தம்பி மின்னஞ்சல் மூலம் சென்னை கமிஷனருக்கு புகார் கொடுத்திருக்கிறார். மேன்மிஸ்ஸிங் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை எந்தவித முன்னேற்றமும் இன்றி கிடப்பில் போடப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஜூலை 18-ந் தேதி திருவொற்றியூரைச் சேர்ந்த ரவுடிகள் குடுமி பிரகாஷ் மற்றும் சுரேஷ் திருவொற்றியூர் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகினர். அவர்கள், “"வழக்கறிஞர் ப்ரீத்தி, சித்ரா என்ற பெண்ணுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துவரும் சுரேஷ் பரத்வாஜைத் தீர்த்துக்கட்டச் சொன்னார். தனது தந்தை முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி, அக்கா ஐ.ஏ.எஸ். அதிகாரி, தான் வழக்கறிஞர் என்பதால், வழக்கிலிருந்து காப் பாற்றிவிடுவதாக உத்தரவாதம் கொடுத்ததோடு, பணம் தருவதாகவும் கூறினார். அதன்படி, சுரேஷ் பரத்வாஜைக் கடத்திக் கொன்றுவிட்டு, காசிமேடு கடலில் வீசிவிட்டோம்' என்று வாக்குமூலம் கொடுத்தனர்.

இந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் நால்வரையும், தலைமறைவாக இருந்த வழக்கறிஞர் ப்ரீத்தியையும் கைதுசெய்துள்ளனர் போலீசார். இருப்பினும், ‘கொல்லப்பட்ட சுரேஷ் பரத்வாஜின் உடல் கிடைக்காதது குற்றவாளிகள் தப்பிக்கவே வழிசெய்கிறது’ என்கிறார்கள் காவல்துறை தரப்பில்.

Advertisment

-அரவிந்த்

தி.மு.க.வில் ஆன்மிக அரசியல்!

sss

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் அலுவலகத்தில், அவர் அமைச்சராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எப்போதும் கூட்டமிருக்கும்.

அதுபோன்ற ஒரு பரபரப்பான நாளில், தன் மேசைமீது இருந்த சிறிய கலைஞர் சிலைக்கு மாலை, மல்லிகைப்பூ சூடி பயபக்தியுடன் வணங்கிக் கொண்டிருந்தார் கே.என்.நேரு. அப்போது உடனிருந்த ந.செ. அன்பழகனிடம், ""தலைவர் கலைஞர் சிலையைச் செய்த சிற்பியிடம் ரூ.1 லட்ச ரூபாய்க்கு பத்து சிலைகள் வாங்கிவந்தேன். உங்கள் வீட்டில் தலைவர் சிலையை வாங்கிக் கொண்டுபோய் வையுங்கள்'' என்று நேரு சொல்ல, அன்பழகனும் ரூ.10 ஆயிரம் கொடுத்து ஒரு சிலையை வாங்கிவைத்தார்.

இந்த தகவல் பரவி மண்டி சேகர், செவ்வந்திலிங்கம், வழக்கறிஞர் பொன்.முருகேசன் என தி.மு.க.வைச் சேர்ந்த பலரும் அடுத்தடுத்து கலைஞர் சிலைகளை வாங்கிச் சென்றதால், டிமாண்ட் அதிகமாகி முன்பதிவு செய்யும் நிலையே வந்துவிட்டது.

“சென்னையில் தம்மைச் சந்திக்க வருபவர்களுக்கு கையடக்க கலைஞர் சிலையை அன்பளிப்பாக கொடுத்துவருகிறார் தி.மு.க. தலைவர் ஸ்டாலின். அதுபோல கே.என்.நேரு கட்சிக்காரர்களை கலைஞர் சிலைகளை வாங்க வைக்கிறார். அந்தச் சிலைக்கு நேரு பாணியிலேயே பூ போட்டு, பூஜை செய்து புதுவித ஆன்மிக அரசியலைக் கையிலெடுத்திருக்கிறார்கள் எனச் சொல்கிறார்கள் திருச்சி உடன்பிறப்புகள்.

-ஜெ.டி.ஆர்.

மாணவனைக் "கொன்ற' பள்ளி நிர்வாகம்!

ssas

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி கல்கிணற்று வலசையில் உள்ளது 6 முதல் 10-ம் வகுப்பு மாணவர்கள் பயிலும் அரசு உயர்நிலைப்பள்ளி. குடியிருப்புகளுக்கு நெருக்கமாக இருக்கும் இந்தப் பள்ளியையே கிரா மத்து மாணவர்கள் நம்பியிருக்கின்றனர்.

கடந்த புதன்கிழமையன்று, காலை 11 மணிக்கு தண்ணீரை டாங்கிற்கு ஏற்ற தனது வகுப்பு மாணவர்களை அனுப்பியிருக்கிறார் எட்டாம் வகுப்பு ஆசிரியை அபிலாஷா. பள்ளியின் உள்ளே சுவிட்ச்போட ஒரு மாணவன் செல்ல, பள்ளி காம்பவுண்டில் இருக்கும் மின்மோட்டாரில் தண்ணீர் ஊற்றி ஏர்லாக்கை எடுக்கச்சென்ற இன்னொரு மாணவன் கார்த்தீசுவரன் எதிர்பாராத விதமாக மின்சாரம்தாக்கி மயங்கிச் சரிந்தான்.

அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் சிறுவன் கார்த்தீசுவரனை உச்சிப்புளி அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுசென்றனர். அங்கு சிறுவனுக்கு பல்ஸ் இல்லாததை உறுதிசெய்த மருத்துவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், கார்த்தீசுவரன் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறி உடற்கூராய்வுக்கு அனுப்பிவிட்டனர்.

தகவலறிந்த கிராம மக்கள் உடலை வாங்க மறுத்ததோடு பள்ளியை முற்றுகையிட்டனர்.

சமாதானம் பேசிய தாசில்தார், டி.எஸ்.பி. உள்ளிட்ட அதிகாரிகள், மாணவர்களை மோட்டார் இயக்க அனுப்பிய ஆசிரியை அபிலாஷா மற்றும் வகுப்பறை பீரோவில் விற்பனைக்காக தின்பண்டங்கள் வைத்திருந்த பொறுப்பு தலைமை யாசிரியர் தமிழரசு ஆகியோரை தற்காலிக இடைநீக்கம் செய்தனர்.

""க்ளாஸைக் கூட்டுறது, கக்கூஸ் கழுவுறது, கடைக்கு அனுப்புறதுன்னு எல்லா வேலைக்கும் புள்ளைங் களையே செய்யச் சொல்றாங்க. வெறும் ரூ.200 போட்டு அந்த மோட்டாரை ரிப்பேர் பார்க்காம, இப்புடி ஒத்த புள்ளையைக் கொன்னுப் புட்டாங்களே. அவங்களை சஸ்பெண்ட் பண்ணது போதாது. வழக்குப்போட்டு ஜெயிலுக்கு அனுப்புங்க சார்'' என்று கதறித்துடித்தனர் கார்த்தீசுவரனின் பெற்றோர் ரமேஷ்-பாக்கிய லெட்சுமி தம்பதியினர்.

-நாகேந்திரன்