விருது தம்பதியை தாக்கியது யார்?
திருடவந்த கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தனர் நெல்லை கடையத்தைச் சேர்ந்த சண்முகவேலு-செந்தாமரை தம்பதியினர். இந்த செயலைப் பாராட்டி வீரதீர விருது வழங்கி கவுரவித்தது தமிழக அரசு.
ஆனால், சம்பவம் நடந்து இரண்டு வாரங்களுக்கு மேலாகியும், துப்புத் துலக்க முடியாமல் திணறுகிறது காவல் துறை. சம்பவத்தின் பின்னணியில் உள்ள இடியாப்பச் சிக்கல்தான் காரணம் என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள்.
""காவல்நிலையம் அருகில் இருந்தும் புகார் கொடுக்காமல், மறுநாள் இரவுவரை காலம் தாழ்த்தியுள்ளனர். வீடு மற்றும் தோப்பு பகுதிகளில் 10 சி.சி.டி.வி. கேமராக்கள் இருந்தும், செய்திகளில் வெளியான சி.சி.டி.வி. காட்சிகளை வைத்து மட்டுமே புகார் கொடுத்துள்ளனர். அதன் மர்மம் விலகவில்லை.
சம்பவத்தன்று வீட்டிலிருந்த நாய்கள் குரைக்க வில்லை. காவலுக்கு இருந்த இரண்டு பேரிடமும் எந்த வொரு தகவலும் இல்லையாம். வீடி யோவில் தெரியும் கொள்ளையர்களின் நடவடிக்கை கொலைசெய்யவோ, கொள்ளையடிக்கவோ வந்தவர்கள்போல் தெரியவில்லை. செந்தாமரையின் கழுத்தில் இருந்த 32 கிராம் நகையைப் பறித்துச் சென்றதாக சொல்கிறார்கள்.
ஆனால், வீடியோ காட்சியில் அதுபோன்ற எதுவும் இடம்பெறவில்லை'' என்று விசாரணையின் போக்கை விளக்கும் அந்த அதிகாரி, ""16 வகையான க்ளூக்களுடன் கோணங்களில் விசாரணை நடத்தியும் முன்னேற்றமில்லை. இதுவரை கிடைத்திருக்கும் விவரங்களைப் பார்த்தால் இரு தரப்புக்கும் இடையே ஏதோ விவகாரமிருப்பது தெரிகிறது. வந்தவர்கள் சண்முகவேல் குடும்பத்துக்கு நன்கு அறிமுகமுள்ள நபர்களாக இருக்கவே வாய்ப்பிருக்கிறது'' என்கிறார்.
-பரமசிவன்
தி.மு.க. விருது விருது!
தி.மு.க.வின் முப்பெரும் விழா வருகிற செப்டம்பர் 15-ந் தேதி திருவண்ணாமலையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழா வில் பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர், பாவேந்தர் பெயர்களில் விருதுகள் வழங்கப்படு கின்றன.
அதன்படி, இந்தாண்டு பெரியார் விருது தி.மு.க. முன்னாள் எம்.பி. வேணு கோபாலுக்கு வழங்கி கவுரவிக் கப்படுகிறது. அண்ணா விருது நந்தகோபாலுக்கும், கலைஞர் விருது ஏ.கே. ஜெகதீசனுக்கும், பாவேந்தர் விருது சந்திரமுகி சத்திய வாணிமுத்துவுக்கும், பேராசிரியர் விருது தஞ்சை இறைவனுக்கும் வழங்கப் படவுள்ளது.
இதில் பெரியார் விருது பெறும் வேணு கோபால் குறித்து முகநூலில் பதி விட்டுள்ள திரா விடர் கழகத்தின் மாவட்ட பொறுப் பாளர் பட்டாபிராமன், "சாதி சங்கத் தலைவருக்கா பெரியார் விருது?' எனக் கேட்டு விமர்சித்துள்ளார். அதேபோல், விடுதலை கலை இலக்கியப் பேரவை, த.மு.எ.க.ச. நிர்வாகி களும் சமூக வலைத்தளங்களில் தங்களது எதிர்ப்பைக் காட்டி யுள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. நிர்வாகிகளிடம் கேட்டபோது, “""ஐந்துமுறை எம்.பி.யாக இருந்தும் கோஷ்டி சேர்க்கவோ, பொருளாதார ரீதியில் தன்னை வளப்படுத்தவோ செய்யாதவர் வேணுகோபால்.
திருவண்ணாமலை மாவட்ட வன்னியர் சங்க மடா லயம் கோடிக்கணக்கான சொத்துகளுடன் இயங்கி வருகிறது. பணத்தாசை இல்லாத ஒருவர் அதனைப் பாதுகாக்க வேண்டுமென்று விரும்பி, வேணுகோபாலை அணுகியது. தி.மு.க. பொறுப்பில் இருக்கும் தான், சாதி சங்கத்தில் பொறுப் பேற்பது முறையாகாது என்று மறுத்தும், வற்புறுத்தி ஏற்க வைத்தனர். அந்தப் பதவி வேணு கோபாலின் நேர்மைக்கு அடை யாளம். அதற்காக அவரை சாதி அடையாளத்திற்குள் அடைக்க முடியாது. அப்படி இருந்திருந் தால், எல்லா சமுதாயத்தினரின் ஆதரவோடு தேர்தல்களில் வெற்றிபெற்றிருப்பாரா? 2009-ல் திருவண்ணாமலை எம்.பி. தேர்தலில் பா.ம.க.வின் காடு வெட்டி குருவை எதிர்த்துப் போட்டியிட்டு எல்லா சமுதாய மக்களின் வாக்குகளுடனும், தமிழ்நாட்டிலேயே அதிக வாக்குவித்தியாசத்திலும் வெற்றிபெற்றவர் வேணு கோபால். அவர் பெரியார் விருதுக்கு பொருத்தமானவர் தான்''’என்கிறார்கள்.
-து.ராஜா
விருதுநகரில் தொழில் பூங்காவுக்கு ஏதிர்ப்பு!
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் உள்ளது தாமரைக்குளம், பொட்டல்குளம். இங்கு 102 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பீட்டில் கைத்தறி மற்றும் கதர்த்துறை சார்பில் தென்னிந்திய ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் தொழில்பூங்கா அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துகிறது தமிழக அரசு. காணொலி காட்சி வாயிலாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய விழா காரியாபட்டி யூனியன் அலுவலகத்தில் நடந்தது.
தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இத்திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என தாமரைக்குளம், காரைக்குளம், எசலிமடை, செட்டிகுளம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த பொது மக்களும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் கடுமையாக எதிர்த்து வருகின்றன. அதனால், அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்த விருதுநகர் கலெக்டர் சிவஞானத் திடம் மனுகொடுக்க 20 கிராம பொதுமக்களும் திரண்டுவந்தனர். காவல்துறை அவர்களைத் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.
அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் டி.எஸ்.பி. நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, மதுரை-தூத்துக்குடி சாலையிலுள்ள தாலுகா அலுவலகத்திற்கு முன்னால், கலெக்டரிடம் மனுகொடுக்க காத்திருந்தனர் கிராம மக்கள். கலெக் டர் சிவஞானமோ, மக்களைக் கண்டுகொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டார். இதனால், கொதிப்படைந்த மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த தொழில்பூங்காவின் மூலம், 2 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு, ரூ.2 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெற வழிவகை ஏற்படுமென்று தமிழக அரசு கருதுகிறது. அந்தப் பகுதி மக்களோ, “"எதிர்ப்பு தெரிவிச்சும் எடப்பாடிக்கு அடிக்கல் நாட்ட அப்படியென்ன அவசரம்? கலெக்டர் ஏன் மக்களைச் சந்திக்காம பயந்து ஓடணும்? எங்க வாழ்வாதா ரத்தை அழிக்கும் எந்தத் திட்டத்தையும், இந்த மண் ணில் அனுமதிக்க மாட்டோம்' ’என்று போர்க் குரல் எழுப்புகின்றனர்.
-ராம்கி